சென்னை:'மதம் மாறுவதால், ஜாதி மாறாது; ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமண சான்றிதழ் பெற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவை சேர்ந்த பால்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:நான், கிறிஸ்துவ ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவன்; எனக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.அருந்ததியின சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளேன். என் மனைவிக்கு ஆதிதிராவிடர் என, ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உcள்ளது.
எனவே, கலப்பு திருமண சான்றிதழ் கோரி, அரசிடம் விண்ணப்பித்தேன்; மேட்டூர் தாசில்தார் நிராகரித்தார். அதை ரத்து செய்து, எனக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, ''சான்றிதழ் நிராகரித்தது சரியே; மனுதாரருக்கு, கலப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:ஒருவர் மதம் மாறுவதால், அவரது ஜாதி மாறாது. மத மாற்றம் அடிப்படையில், கலப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது.
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் கிறிஸ்துவ ஆதிதிராவிடர்; அவருக்கு பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மனுதாரரின் மனைவியும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர். இருவரும் பிறப்பால் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். மனுதாரர் மதம் மாறியதால், கலப்பு திருமண சான்றிதழ் பெறுவதற்கான உரிமை வராது.
கலப்பு திருமண சான்றிதழ் வழங்குவதன் நோக்கம், அவர்களுக்கு நலத் திட்டங்கள் வழங்குவதற்காக தான். அப்படி இருக்கும் போது, ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள், சலுகை பெறுவதற்காக கலப்பு திருமண சான்றிதழ் பெற முடியாது.எனவே, அரசு பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE