திருவள்ளூர்,-பருவ மழை பெய்து வருவதால், விதைகளை சரியான ஈரப்பதத்தில் சேமித்து வைத்தால், தரம் குறையாமல் பாதுகாக்கலாம் என, வேளாண் விதை பரிசோதனை அலுவலர் ஆலோசனை வழங்கி உள்ளார்.திருவள்ளூர் மாவட்ட மூத்த வேளாண் விதை பரிசோதனை அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது, வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை, சரியான ஈரப்பதத்தில் பாதுகாக்க வேண்டும்.விதை சட்டம் 1966 மற்றும் விதை, விதி எண், 1968-ன்படி, நெற் பயிர் ஈரப்பதம் 13 சதவீதம்; சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி ஆகியவற்றுக்கு, 12 சதவீதமும் இருத்தல் வேண்டும்.பயறு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு, 9 சதவீதமும், காய்கறிக்கு, 7 சதவீதமும் இருத்தல் அவசியம். தரமான விதைகளை பயன்படுத்தும் போது, முளைப்புத்திறன் அதிகரித்து, அதிக மகசூல் பெறலாம்.எனவே, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதத்தை அறிய, விதைப் பரிசோதனை நிலையம், 48, ஜே.என்.சாலை, ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில், பெரியகுப்பம், திருவள்ளூர் - 602 001 என்ற முகவரிக்கு, பரிசோதனை கட்டணமாக, 30 ரூபாய் செலுத்தி, விதை பரிசோதனை விபரங்களை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.