காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், 30 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி இருக்கிறது. 200 ஏக்கர் பரப்பு ஏரி நீரை வைத்து, 460 ஏக்கரில் பாசனம் செய்யப்படுகிறது.ஏரிக்கு, செவிலிமேடு பாலாற்றில் இருந்து தண்ணீர் செல்வதற்கான நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாயை முறையாக சீரமைக்காததால் துார்ந்துவிட்டது; 30 ஆண்டுகளாக அதிகாரிகளும் இப்படியொரு கால்வாய் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.ஒரு மாதமாக பாலாற்றில் தண்ணீர் சென்றாலும், தேனம்பாக்கம் ஏரி நிரம்பாததால், நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ., சுந்தரிடம், பொதுமக்கள் முறையிட்டனர்.அவர், பொதுப்பணித் துறையினரிடம் பேசியதை அடுத்து, துார்ந்த நிலையில் இருந்த கால்வாயை கண்டுபிடித்து, அதை சீரமைக்கும் வேலை நடந்து வருகிறது.தற்போது, பாலாற்றில் தண்ணீர் குறைந்து வருகிறது. எனினும், பணியை விரைந்து முடித்தால், ஏரிக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அடுத்த மழைக்கு கண்டிப்பாக நிரம்பும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாலாற்றில் இருந்து ஏரிக்கு 6 கி.மீ., வரை கால்வாய் செல்கிறது. தற்போது இரண்டு கி.மீ., வரை கால்வாய் எடுக்கும் பணி செய்ய இருக்கிறோம். அதற்கடுத்து கால்வாய் உள்ளது. அதை துார் வாரும் பணி நடந்து வருகிறது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE