மதுரை: மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தவிர மற்ற இடங்களில் நேற்று மதியம் 3:00 மணி முதல் கனமழையும் மாலையில் பரவலான மழையும் பெய்ததால் வெப்பநிலை 25 டிகிரிக்கும் கீழ் குறைந்தது.
நேற்று மதியம் 2:30 மணி முதல் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் கனமழை பெய்தது. பின் மிதமான மழை பெய்தது. டி.கல்லுப்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திப்பட்டி, மங்கல்ரேவு, சேடபட்டி பகுதியில் மதியம் 3:00 -மாலை 4:00 மணி வரை கனமழையும் பின் சாரல் மழையும் பெய்தது.மேலுாரில் மதியம் 12:00 மணி முதல் மாலை வரை இடைவிடாது மழை பெய்தது. வைகையில் நுாறு நாட்களாக தண்ணீர் விடப்படுவதால் இம்மழையால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படவில்லை. கொட்டாம்பட்டி, மேலவளவில் கனமழை பெய்தது. திருமங்கலம், கள்ளிக்குடியில் மதியம் 2:30 முதல் மாலை 5:00 வரை மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திருப்பரங்குன்றத்தில் மதியம் 3:00 முதல் மாலை 4:00 மணி வரை கனமழையும் தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.
மாவட்டமே மழையால் நனைந்து கொண்டிருக்க உசிலம்பட்டி, எழுமலை, உத்தப்பநாயக்கனுார், வாலாந்துார், செல்லம்பட்டியில் மாலையில் சாரல் மழை மட்டும் பெய்தது. அங்குள்ள 70 கண்மாய்களில் ஒன்றில் கூட தண்ணீர் நிரம்பவில்லை. மதுரையில் நேற்று முன்தினம் சாரலாக மழை பெய்த நிலையில் சராசரி அளவு 0.26 மி.மீ. மழை பதிவானது. பெரியாறு அணை நீர்மட்டம் 141.3 அடி, நீர் இருப்பு 7477 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 2244, வெளியேற்றம் 2300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 69.49 அடி, நீர் இருப்பு 5698 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3379, வெளியேற்றம் 2900 கனஅடி.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE