குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (28)
Share
மதுரை: திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து போலீசார் ரோந்து செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆனாலும் ரோந்து போலீசார் பலர் துப்பாக்கியுடன் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.ஏன் தயங்குகின்றனர் என ஓய்வுபெற்ற டி.ஜி.பி.,
குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கிறார் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்

மதுரை: திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து போலீசார் ரோந்து செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆனாலும் ரோந்து போலீசார் பலர் துப்பாக்கியுடன் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

ஏன் தயங்குகின்றனர் என ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் கூறியதாவது: போலீசார் ரோந்து செல்லும்போதும், வாரன்ட் கொடுக்க செல்லும்போதும், ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதை தடுக்க செல்லும்போதும் தனியே செல்லக்கூடாது. குறைந்தது 2 பேராவது செல்ல வேண்டும். ஆள் பற்றாக்குறையால் சில ஸ்டேஷன்களில் ஒரு போலீஸ்காரரை மட்டும் ரோந்து செல்ல அனுமதிக்கின்றனர். அது தவறு. 2 பேர் செல்ல முடியவில்லை என்றால் ரோந்தே செல்ல வேண்டாம். அப்படி 2 பேர் செல்லும்போது அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி கட்டாயம் இருக்க வேண்டும்.


துப்பாக்கி முக்கியம்


அனைத்து 'ரேங்க்' போலீசாரும் துப்பாக்கி எடுத்துச்செல்லலாம். ஆனால் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக எடுத்துச்செல்லக்கூடாது என உத்தரவிடுகின்றனர். அது தவறு. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2013ல் நடந்த ஜாதி கலவரத்தின்போது எஸ்.ஐ., ஒருவர் கொலை செய்யப்பட்டார். காரணம் அப்போது பணியில் இருந்த போலீசார் யாரும் அதிகாரிகள் சொன்னதால் துப்பாக்கி எடுத்து போகவில்லை. துப்பாக்கி எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். அதை முறையாக விதிமுறைபடி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே தற்காத்துக்கொள்ள அதை பயன்படுத்த வேண்டும்.


latest tamil news


தற்காப்பு விதிகள் குறித்து போலீசாருக்கு வகுப்பு எடுக்க வேண்டும். நீதிமன்றங்களின் உத்தரவுகளை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.போலீஸ்காரர் ஒருவர் இறந்தால் மற்ற போலீசாருக்கு பயம் ஏற்படலாம். அது குற்றவாளிகளுக்கு ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும். எனவே தற்காத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்துவதில் தவறு இல்லை. எனது 35 ஆண்டுகால அனுபவத்தில் பயிற்சி காலத்தில் இருந்தே எங்கு சென்றாலும் துப்பாக்கியுடன் செல்வேன். பல சமயங்களில் எனக்கும் எதிராளிகளால் ஆபத்து வந்தது. அப்போது துப்பாக்கியை பயன்படுத்தியதால் நானும், சக போலீசாரும் தப்பித்தோம்.


உயிரை காத்த துப்பாக்கி


1988 ல் ஏ.எஸ்.பி.,யாக இருந்தபோது நெல்லை ஆலங்குளம் பகுதியில் நானே ஜீப் ஓட்டி இரவு ரோந்து சென்றேன். பாப்பாகுடி அருகே காட்டில் ஒருவர் சைக்கிளில் சென்றார். பின்னால் ஒரு பை இருந்தது. அது சாராயமாக இருக்கலாம் எனக்கருதி அவரை தடுத்தபோது கத்தியால் குத்த முயன்றார். நான் துப்பாக்கியை எடுத்ததால் அவர் சரணடைந்தார். அதேபோல் 1997ல் நான் நெல்லை எஸ்.பி.,யாக இருந்தபோது கங்கைகொண்டான் பகுதி ரோட்டில் மறியல் நடந்ததால், நாங்கள் ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்றோம். அப்போது எங்களை சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கிகள் எல்லாம் வண்டியில் இருந்தன. அப்போது ஒரு சுப்பிரமணியம் என்ற போலீஸ்காரர் துப்பாக்கி வைத்திருந்தார். தற்காத்துக்கொள்ள அதை பயன்படுத்தினோம். மூவர் இறந்தனர். பின்னர் அதுகுறித்த நீதிவிசாரணையை சந்தித்தோம்.


மதுரை போலீசாருக்கு உத்தரவு


நான் மதுரை கமிஷனராக 1999-2000ல் இருந்தபோது ரோந்து சென்ற போலீசார் தொடர்ந்து தாக்கப்பட்டனர். அதனால் யாரும் துப்பாக்கி இல்லாமல் ரோந்து செல்லக்கூடாது என உத்தரவிட்டேன். அதன்பிறகு தாக்குதல் சம்பவம் நடக்கவில்லை. துப்பாக்கியுடன் செல்லும் போலீசார் அதுகுறித்த விபரங்களை கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிப்பர். ஒருசமயம் அதிகாலை 3:00 மணிக்கு இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்டார் என்று மதுரை மேலுாரில் இருந்து ஒரு போன் வந்தது.


latest tamil news


துப்பாக்கியுடன் சென்றவர் எப்படி கடத்தப்பட்டார் என கேள்வி எழுந்தது. நானும், எஸ்.பி.,யும் மேலுார் சென்றோம். விசாரணையில் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் ரோந்து சென்றபோது ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்து சென்றபோது ரவி என்பவர் தலைமையிலான கொள்ளையர் 6 பேர் இன்ஸ்பெக்டரை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டனர். மற்ற 2 போலீசாரை அனுப்பிவிட்டனர். பின்னர் அவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.


அடுத்தடுத்து என்கவுன்டர்


இன்ஸ்பெக்டர் இரவு 11:00 மணிக்கு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ரோந்து செல்வதாக கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் அவர் எடுத்துச்செல்லவே இல்லை. இப்படி சிலர் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் பயப்படுகிறார்களா எனத்தெரியவில்லை. அன்றைக்கு இன்ஸ்பெக்டர் துப்பாக்கியுடன் சென்று அதை பயன்படுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ரவியை சுட்டு பிடித்திருக்க முடியும்.ரவுடி வெள்ளை ரவியை கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் பிடிக்க முயன்றபோது துப்பாக்கிச்சண்டை நடந்தது. நானே 6 ரவுண்ட்ஸ் சுட்டேன். வெள்ளை ரவி உட்பட 2 பேர் இறந்தனர்.

ஓசூர் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் என் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எங்களிடம் துப்பாக்கி இருந்தால்தான் நிலைமை சமாளிக்க முடிந்தது. 2006ல் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்தபோது உ.பி., சென்று பவுரியா கொள்ளையர் இருவரை என்கவுன்டர் செய்தோம். அவர்கள் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் வைத்திருந்தனர். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும்.பவுரியா கொள்ளையரிடம் விசாரித்தேன். 'உ.பி.,யில் இருக்கும் நீங்கள் 2000 கி.மீ., கடந்து தமிழகத்திற்கு வந்து கொள்ளையடித்தது ஏன்' என கேட்டேன்.

அவர்கள், 'முன்பு நாங்கள் உ.பி., ம.பி., ராஜஸ்தானில் கொள்ளை அடித்தோம். உ.பி., போலீசார் எங்களை என்கவுன்டர் பண்ண வாய்ப்புண்டு. அவர்கள் எப்போது ரோந்து சென்றாலும் துப்பாக்கியுடன் செல்வர். அதனால்தான் தமிழகம் வந்தோம். இங்கு போலீசார் இரவு துப்பாக்கியுடன் செல்ல மாட்டார்கள். நாங்கள் கொள்ளையடித்து செல்லும்போது பிடிக்க முயன்றால் சுட்டுவிடுவோம்' என்றனர். இதன்பிறகு வடக்கு மண்டல போலீசார் அனைவரும் ரோந்து செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிட்டேன். தற்காத்துக்கொள்ள போலீசார் துப்பாக்கியுடன் செல்வதும், பயன்படுத்துவதிலும் தவறில்லை என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X