புதுடில்லி : ''நம் நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன; இது நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களது குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. ஒரே குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிப்பது நல்லதல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளான நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக, 2015லிருந்து மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.இதையொட்டி பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்தார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சுயநலம் இல்லை
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பலமான ஆலோசனைக்கு பின் உருவாக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்த நாளில் நாம் பார்லிமென்டை வணங்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மஹாத்மா காந்தி, நேதாஜி, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் என் வணக்கம். நம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியோருக்கு நாடு தான் பிரதானமாக இருந்தது. அவர்களிடம் சிறிதும் சுயநலம் இல்லை.
நம் அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம், பன்முகத்தன்மை உடைய நம் நாட்டை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் உள்ளது.நாட்டின் குடியரசு தினத்தை ௧௯௫௦ முதல் ஜனவரி ௨௬ல் கொண்டாடி வருகிறோம். அதுபோல, அப்போதே நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடி இருக்க வேண்டும்.
ஆனால் சிலர் அதை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாளை கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம்.
நம் நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. வாரிசு அரசியல் நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள் அவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் மட்டுமே செயல்படுகின்றன.கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக் கூடாது.உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும். திறமைகள் அடிப்படையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்கள் மதிப்பீடுகளை இழந்து விட்டன.
உரிமை பாதுகாக்கப்படும்
அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது. ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டும், காணாமல் இருப்பது நம் இளைஞர்களை பெரிதும் பாதிக்கிறது.
ஊழல் சங்கிலியை உடைக்க வேண்டும். ஊழல் செய்தோரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.மக்கள் தங்கள் உரிமைகளை பற்றி இப்போது அதிகம் பேசுகின்றனர். மக்கள் தங்கள் கடமைகளை புரிந்து கொண்டால் அவர்களது உரிமை பாதுகாக்கப்படும். நம் அரசியலமைப்பை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் தான், நம்மால் மறக்க முடியாத துக்க சம்பவமும் நடந்தது. ௨௦௦௮ நவம்பர் ௨௬ல், பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலை யாரால் மறக்க முடியும்?பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சபாநாயகர் மறுப்பு
காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை மறுத்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாட முடிவெடுத்து, அதற்கான ஏற்பாட்டை செய்தது பார்லிமென்ட் தான். இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அதை முதலில் எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்கும் இதுபோன்ற பொதுவான எந்த ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணிப்பது மரபல்ல. எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததில் எனக்கு வருத்தம் தான்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் மேடையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
காலனி ஆதிக்க மனப்பான்மை
உச்ச நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த அரசியலமைப்பு சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகில் காலனி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டாலும், காலனி ஆதிக்க மனப்பான்மை மட்டும் இன்னும் மறையவில்லை. வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு இந்த காலனி ஆதிக்க மனப்பான்மை உடைய சக்திகள் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன.
தட்பவெப்பம் மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தி வரும் நாடு இந்தியா மட்டுமே. எனினும் சுற்றுச்சூழல் என்ற பெயரில் இந்தியாவுக்கு பல சக்திகள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. நம் நாட்டில் சிலருக்கு காலனி ஆதிக்க மனப்பான்மை இருப்பது துரதிருஷ்டவசமானது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு மோடி பேசினார்.
14 கட்சிகள் புறக்கணிப்பு
பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடந்த அரசியலமைப்பு சட்ட தின விழாவை காங்கிரஸ், தி.மு.க,, உட்பட ௧௪ கட்சிகள் புறக்கணித்தன.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:மத்திய பா.ஜ., அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது. பார்லிமென்டை மதிக்காமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பார்லிமென்ட் ஜனநாயகம் மோடி ஆட்சியில் கேள்விகுறியாகியுள்ளது. அரசியல் சட்டத்தை பா.ஜ., மதிக்கவில்லை; இதை கண்டித்து தான் பார்லிமென்டில் நடந்த அரசியல் சாசன தின விழாவில் நாங்கள் பங்கேற்கவில்லை.
சுதந்திர போராட்டத்தில் பா.ஜ.,வுக்கு சிறிதும் பங்கில்லை. வாரிசு அரசியல் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என, மோடி கூறுவது வேடிக்கை. ஜனநாயகமும், அரசியல் சட்டமும் ஆபத்தில் இருந்திருந்தால் மோடி பிரதமராகியிருக்க முடியாது. ௨௦௧௪ல் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட்டதால் தான் மோடியால் பிரதமராக முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியாவது:அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த கொண்டாட்டம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பதும் முக்கியம். இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு அனைத்து தரப்புக்கும் உரிமையும், அனுமதியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு முக்கிய கட்சிகளுக்கும், அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு அனுமதி தரப்படவில்லை.அரசு தரப்பைச் சேர்ந்த நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே பேசுவதற்கு பெயர் அரசியலமைப்பு சட்ட தினம் அல்ல. அவ்வாறு நடந்தால், அது அரசு நிகழ்ச்சியே அல்ல; அது குறிப்பிட்ட கட்சியின் நிகழ்ச்சியாகவே கருதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.