உடுமலை:அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை, தென்மேற்கு பருவ மழையால், ஜூலை 23ல் நிரம்பி, மூன்று மாதம் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப் பட்டது.வடகிழக்கு பருவ மழையால், கடந்த 3ம் தேதி இரண்டாவது முறையாக அணை நிரம்பியது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழையால், மொத்தம் 90 அடி கொண்ட அணை நீர் மட்டம், நேற்று முன்தினம் 88 அடியாக உயர்ந்ததோடு, நீர் வரத்தும் திடீரென உயர்ந்தது.பாதுகாப்பு கருதி இரவு, 9:00 மணிக்கு அணையின் பிரதான மதகுகள் வழியாக, வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று காலை 8:00 மணிக்கு, வினாடிக்கு 5,380 கன அடி திறக்கப்பட்டது.இதனால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி ஆற்றின் வழியோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், நீர்மட்டம் 55.73 அடியாகவும்; நீர் வரத்து வினாடிக்கு 1,387 கன அடியாகவும் இருந்தது. கன மழை காரணமாக, எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதால், பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும், கேரள மாநிலம், சித்துார், ஒலவக்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணை, 1997 டிசம்பர் 8ல் நிரம்பியது. 24 ஆண்டுகளுக்கு பின் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
வைகை
தேனி மாவட்டம், வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. நேற்று காலை நீர் மட்டம் 69.72 அடியாக இருந்த நிலையில், நீர் வரத்து வினாடிக்கு 7,232 கன அடியாக அதிகரித்தது. அந்த நீர் முழுதும் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அணையில் இருந்து இன்னும் கூடுதலான நீர் திறக்கும் வாய்ப்பு உள்ளதால், வைகை ஆற்றில் வெள்ள அபாயம் நீடிக்கிறது.கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE