உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை மற்றும் தியாகதுருகம் பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மரவள்ளி கிழங்கு பயிர்கள் தொடர் மழையால் அழுகிப்போனது. வியாபாரிகள் வாங்க மறுத்து திரும்பிச் சென்றதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நெல், வேர்க்கடலை, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரில் நன்கு விளைந்து அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த 30க்கும் மேற்பட்ட ஏக்கர் மற்றும் தியாகதுருகம் பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவிலான மரவள்ளி செடிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை விட்டதும் அறுவடை செய்யலாம் என விவசாயிகள் காத்திருந்தனர்.கடந்த இரு தினங்களாக மழை விட்ட நிலையில், அறுவடை செய்து விற்கலாம் என கருதிய விவசாயிகள், வியாபாரிகளை, மரவள்ளி விளைச்சல் பகுதிக்கு வரவழைத்தனர்.அங்கு மரவள்ளி செடிகளை பிடுங்கிப் பார்த்ததில், தேங்கியிருந்த நீரில் மரவள்ளி கிழங்குகள் அழுகி காணப் பட்டது. இதனைப் பார்த்த வியாபாரிகள், மரவள்ளி கிழங்குகள் அழுகியுள்ளது. இதனை பயன்படுத்தி பவுடராக்கவோ, பயன்படுத்துவோ முடியாது எனக் கூறிவிட்டு வாங்க மறுத்து வியாபாரிகள் சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஏக்கர் ஒன்றுக்கு பயிரிட்டது முதல் அறுவடை வரை 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அறுவடை செய்தால் ஏக்கருக்கு 16 டன் வரை கிடைக்கும்.ஆனால், தற்போது அனைத்தும் அழுகி பாழானது. வியாபாரிகளும் வாங்காமல் சென்று விட்டனர். நல்ல நிலையில் அறுவடை செய்து விற்றிருந்தால் டன் ஒன்றுக்கு 8,000 ரூபாய் வரை கிடைத்திருக்கும்.இப்போது முழுதும் சேதமாகி மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதற்கு அரசு எங்களுக்கு பயிர் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE