தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: தண்ணீர் குறைந்த பிறகு தான், தரைப்பாலம், குளம் சேதமடைந்தது குறித்து கணக்கெடுத்து சீரமைக்கப்படும். இவ்வளவு மழை வரும் என்று நானும் நினைக்கவில்லை, நீங்களும் நினைக்கவில்லை.
மழை அதிகம் தான். அதற்காக, ரெண்டு சொட்டு தண்ணீர் விழுந்ததும் சேதமடையும் வகையிலா தரைப்பாலங்கள், குளக்கரைகளை அமைப்பர். எல்லாவற்றிலும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக, மக்கள் கோபப்படுகின்றனர்.
மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர்ராம்தாஸ் அத்வாலே பேட்டி: தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் அளித்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தாக்குதல்களும் நடந்து வருகின்றன. அதை முதல்வர் தடுக்க வேண்டும். அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், 5 ஏக்கர் நிலத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கிவறுமையை ஒழிக்க வேண்டும்.

வறுமையை ஒழிப்போம் என, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளில் வறுமை தான் அவர்களை ஒழித்து விடுகிறது; வறுமை அப்படியே இருக்கிறது. நிலம் வழங்கினால் மட்டும் ஓய்ந்து விடாது. கல்வி, வேலை வேண்டும்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிக்கை: சிம்லாவில் நடந்த சபாநாயகர் மாநாட்டில், 'சட்டசபை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை வேண்டும்' என்ற சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கள், நாளைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
சபாநாயகர் மாநாடு நடந்து, இரண்டு வாரங்கள் ஆகப் போகின்றன. சபாநாயகரை வாழ்த்தினால், தி.மு.க., மேலிடத்திற்கு கோபம் வருமா என காத்திருந்து, பலரும் சொன்ன பிறகு சொல்கிறீர்களா?
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: பிரதமரின் வீடு திட்டத்திற்கு, 2.40 லட்சம் ரூபாய் வழங்குகின்றனர். இந்த நிதி, பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. இன்னும் அதிகரித்து வழங்க கோரி லோக்சபாவில் கோரிக்கை வைப்போம்.
தமிழக எம்.பி.,க்களில் சிலரை தவிர பிறர், பார்லிமென்டில் வாயைத் திறப்பதே இல்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தால், கோரிக்கை நிறைவேற வாய்ப்பு இருக்கிறது!
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து பேட்டி: தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வெங்காயம் இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே வரும். அதற்குள் உற்பத்தி மேற்கொண்டால் மட்டுமே, வெங்காயமும் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இல்லாவிடில், தக்காளியை போல விலை உயர்ந்து விரைவில் வெங்காயமும் கண்ணீர் விட வைக்கும்.
காய்கறி விலை உயர்வை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்திலாவது அரசியல் மாச்சர்யங்களை விலக்கி ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் சாமானியர் தப்பிப்பர்!