மும்பை: புதிதாக உலகை அச்சுறுத்தி வரும் தென் ஆப்ரிக்காவில் உருவான 'ஒமிக்ரான்' புதிய வகை வைரஸ் பாதிப்புடன் யாரும் வந்துள்ளனரா என மும்பை விமான நிலையத்தில் தனிமைப்படுத்தி பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை வைரஸ் திடீரென பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பி.1.1.529 என்ற புதிய கொரோனா வைரஸ் வகை தான் காரணம் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வகை வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தென்ஆப்ரிக்காவில் இருந்து மும்பை வரும் அனைத்து பயணிகளையும் சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
ராகுல் வேண்டுகோள்
இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறியிருப்பதாவது: இந்த புதிய வைரஸ் மிக கொடூரமானது என தெரிய வருகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் புதிய வைரஸ் மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.