சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகள் உயிரிழப்பு விவகாரம்:வனத்துறையினரை மிரட்டும் ரயில்வே துறை

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகளை விடுவிக்க கோரி ரயில்வே துறையினர், வனத்துறையினரை மிரட்டுவதாக தெரியவந்துள்ளது.கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தை ஒட்டி மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயதுடைய பெண் யானை, 6 வயதுடைய குட்டியானை மற்றும், 18 வயதுடைய மக்னா

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டுகளை விடுவிக்க கோரி ரயில்வே துறையினர், வனத்துறையினரை மிரட்டுவதாக தெரியவந்துள்ளது.latest tamil news
கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை, மாவுதம்பதி மலை கிராமத்தை ஒட்டி மகேந்திர மேடு, தங்கவேல் காட்டு மூளை பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயதுடைய பெண் யானை, 6 வயதுடைய குட்டியானை மற்றும், 18 வயதுடைய மக்னா யானையுடன் நேற்று முன்தினம் இரவு கடக்க முயன்றன.அப்போது அவ்வழியாக கேரளாவிலிருந்து மங்களூர் -- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) வேகமாக வந்து, யானைகள் மீது மோதியது.

இதில் யானைகள் ரயில் இன்ஜினில் சிக்கி படுகாயமடைந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் அங்கு சென்றனர். ரயில்வே போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து ரயிலை ஓட்டிய லோகோ பைலட் மற்றும் உதவி லோகோபைலட் ஆகிய இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து யானைகள் மீது மோதிய ரயில் என்ஜினை கைப்பற்றிய வனத்துறையினர் அதை வாளையார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, மாற்று லோகோ பைலட்கள் மூலம் ரயில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று காலை வனத்துறையினர் மூன்று யானைகளின் சடலங்களையும் ஆய்வு செய்தனர். அதன் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் யானைகளின் சடலங்களை ஆய்வு செய்தார். யானைகளின் கால், இடுப்பு, பின்புறம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தை ஏற்படுத்திய ரயில் என்ஜினின் முன்பகுதி யானைகள் மீது மோதியதால் சேதமடைந்திருந்தது. அதன் பின் கிரேன் மூலம் யானையின் சடலங்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் எடுத்து செல்லப்பட்டன. நேற்று மாலை அங்கு மூன்று யானைகள் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


ரயில்வே துறை நிர்பந்தம்


ரயிலை வேகமாக இயக்கிய ரயில்வே லோகோ பைலட், உதவி லோகோ பைலட் ஆகிய இருவரையும் பிடித்துள்ள வனத்துறையினரும் கோவை வனக்கோட்ட அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், இருவர் மீதும் வழக்கு பதியக் கூடாது, கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என, கேரள ரயில்வே துறையின் லோகோபைலட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மாறாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், ரயில்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வனத்துறையினருக்கு தொடர்ந்து நிர்பந்தம் அளித்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை கட்டாயம் இருக்கும் என, தெரிவித்துள்ளனர். ரயில்வே துறையின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல், வனத்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இதுபோன்று ரயில்களை வேகமாக இயக்கி வனவிலங்குகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது குறையும் என, வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறியதாவது:வாளையார் - மதுக்கரை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகள் உயிரிழந்துள்ளன. இரு யானைகள், 30 மீட்டர் தூரத்திலும், 145 மீட்டர் தூரம் தள்ளி பெண் யானையும் இறந்து கிடந்தன. இப்பகுதியில் உள்ள இரு ரயில் பாதைகளில் 'ஏ' பாதையில் ரயில் போக்குவரத்து எப்போதும் குறைவாக இருக்கும். நேற்று(நேற்று முன்தினம்) 'ஏ' ரயில் பாதையில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது.

வனத்துறை, ரயில்வே துறை உடன்பாட்டின் படி ரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. மூன்று யானைகளின் உடல்களும் அருகில் இருக்கும் வனப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் புதைக்கப்படும். ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்தும், எப்படி யானை இறந்தது என்பது குறித்து ரயில் ஓட்டுனர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின் நிச்சயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில்தான் அதிகப்படியான விபத்துகள் நடக்கிறது. ஏற்கனவே 'பி' ரயில் பாதையில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


அதிவேகமே காரணம்?


யானைகள் மோதிய மங்களூர் -- சென்னை இடையே செல்லும் ரயில்(வண்டி எண்: 12602) சிறப்பு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் அனைத்தும் 'பி' ரயில் லைன் வழியாகவே இயக்கப்படும். ஆனால், அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக இச்சிறப்பு ரயில் 'ஏ' ரயில் லைன் வழியாக நேற்று முன்தினம் இயக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ரயில்வே, வனத்துறை இடையேயான ஒப்பந்தத்தின் படி, ரயிலை அதிகபட்சம், 45 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஆனால், சிறப்பு ரயில் என்பதால், அப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் ரயில் இயக்கப்படவில்லை. மாறாக, குறிப்பிட்ட பகுதியில், 75 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதன் காரணமாகவே, யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலை நிறுத்த முடியவில்லை என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், அதிவேகத்தில் யானைகள் மீது ரயில் மோதியதால் தான், அவை, 145 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு சம்பவங்களில் பெரும்பாலும், ரயில் வரும்போது யானைகள் ஒதுங்க இடம் இல்லாதது காரணமாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட பகுதியில், யானைகள் ஒதுங்க இடம் இருந்து அவற்றால் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் அதிவேகம் மட்டுமே காரணம் என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


எச்சரிக்கை பலகையாலும் பயனில்லைவிபத்து நடந்த பகுதியில், ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் பகுதி என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டு, கோவையிலிருந்து கேரளா செல்லும் ரயில்களின் பார்வையில் படும்படி, வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு ரயில், கேரளாவில் இருந்து 'ஏ' ரயில்பாதையில் பயணித்ததால், இந்த போர்டு இருந்தும் பயனின்றி போனது.


latest tamil news
வேகத்தை கணக்கிட 'சிப்' பறிமுதல்ரயில்களின் வேகத்தை கணக்கிட ரயில் என்ஜினில், பிரத்யேக சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப் மூலம், விபத்து நடந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் வேகத்தை கணக்கிட முடியும். இதை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் பதிவாகியுள்ள தகவல்களை திரட்ட, சேலம் கோட்டத்தை சேர்ந்த ஈரோடு ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிப்பில் உள்ள தகவல்களை வனத்துறையினர் முன் திறந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதன் மூலம் ரயில் விபத்து நடந்த போது அதிவேகத்தில் சென்றதா என்பது குறித்து தெரியும்.


உயிரிழந்த பெண் யானை கர்ப்பம்நேற்று மாலை முதலில், உயிரிழந்த, 25 வயது பெண் யானையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஒரு மாதத்துக்கும் குறைவான கரு யானையின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னர் உயிரிழந்த பிற யானைகளின் சடலங்களும் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வனதுறை கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் குழுவினர் பிரேதப்பரிசோதனையில் ஈடுபட்டனர்.


யானைகளுக்கு ஏற்பட்ட குழப்பம்வழக்கமாக கேரளாவில் இருந்து ரயில்கள் 'பி' ரயில் பாதையில் தான் வரும். மேலும், குறிப்பிட்ட ரயில்பாதையில், ரயில்கள் வருவது குறித்து யானைகளுக்கு நன்கு பரிச்சயம் உண்டு. எனவே ரயில்கள் வரும் நேரத்தில் அவை தண்டவாளத்துக்கு அருகே வருவதில்லை. யானைகள் மிகவும் புத்திசாலிகள் என்பதால் அவற்றுக்கு இது பழக்கமான ஒன்று. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக சிறப்பு ரயில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் சமயம் 'ஏ' லைனில் வந்ததால் அவை குழப்பமடைந்து தண்டவாளத்தை விட்டு வெளியே வராமல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன என, வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


அனுபவமில்லாததால் வனத்துறையினர் திணறல்கோவை கோட்ட வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளிலும், புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் விபத்து நடந்த நிலையில் யானைகளின் சடலங்களை அப்புறப்படுத்துவதிலும், பிரச்னையை சமாளிப்பதிலும், வனத்துறை அலுவலர்கள் திணறியது தெரிந்தது. இதன் காரணமாகவே மூன்று யானைகள் உயிரிழந்து பல மணி நேரம் ஆன பின்னரும் அவற்றின் சடலங்களை அப்புறப்படுத்துவதிலும், புதைப்பதிலும் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. ஒரு சில அனுபவம் மிக்க அலுவலர்கள் மட்டுமே நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்து பணிகளை விரைந்து முடிக்க முயற்சித்தனர்.


மக்னா யானை உயிரிழப்பால் சோகம்ரயில் மோதி உயிரிழந்த மூன்று யானைகளில் ஒன்று, 18 வயதுடைய மக்னா யானை என்பது குறிப்பிடத்தக்கது. தந்தமில்லாத ஆண் யானையே மக்னா யானை என குறிப்பிடப்படுகிறது. மக்னா யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள நிலையில் அவற்றில் ஒரு யானை இறந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது.


ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் விபரம்கடந்த, 1978 ம் ஆண்டு இரு யானைகள், கடந்த, 2002 ம் ஆண்டு ஒரு பெண், குட்டி என, இரு யானைகள், கடந்த, 2006 ம் ஆண்டு ஒரு ஆண் யானை, தொடர்ந்து, 2007 ம் ஆண்டு யானைக்குட்டி, கடந்த, 2008 ல், தலா ஒரு ஆண், பெண், யானைக்குட்டி என, மூன்று யானைகள், கடந்த, 2009 ம் ஆண்டில், ஒரு பெண், ஒரு யானைக்குட்டி என, இரு யானைகள், அதே ஆண்டு, தலா ஒரு ஆண், பெண் யானைகள், கடந்த, 2010 ல், ஒரு யானைக்குட்டி, அதன்பின், 2016 ல் வெவ்வேறு மாதங்களில் தலா, இரு பெண், ஆண் யானைகள் என நான்கு யானைகள் என, மொத்தம், 18 யானைகள் உயிரிழந்துள்ளன. அதன்பின் கடந்த, 2018 - 21 ம் ஆண்டு வரையிலான மூன்றாண்டுகளில், வெவ்வேறு ரயில் விபத்துகளில், 10 யானைகள் உயிரிழந்துள்ளன. கோவை பாலக்காடு இடையேயான ரயில்வே பாதையில், மொத்தம், 28 யானைகள் உயிரிழந்துள்ளன.


இரு லோகோ பைலட்டுகளிடம் தீவிர விசாரணையானைகள் மீது மோதிய ரயிலின் பிரதான லோகோ பைலட்டாக கேரள மாநிம், கோழிக்கோடு புன்னார்சேரியை சேர்ந்த சுபேர், 54 என்பவர் இருந்துள்ளார். இவரே ரயிலை இயக்கியுள்ளார். இவர், 28 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர். இவருடன் உதவி லோகோபைலட்டாக, கேரள மாநிலம் திருச்சூர், ஓல்லுாரை சேர்ந்த அகில், 31 என்பவர் இருந்தார். இவர் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர். இவர்கள் இருவரிடம் வனத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வனக்கோட்டத்தில் இதுவரை ரயில் மோதி யானை உயிரிழந்த விபத்துக்கள் குறித்து யார் மீது வழக்கு பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-நவ-202107:42:43 IST Report Abuse
N Annamalai சோகமான செய்தி. மூன்று யானைகள் அடிபட்டுள்ளன என்ஜினை நிறுத்த முடியவில்லை. அவ்வளவு வேகம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வேக கட்டுப்பாடு வேண்டும். அதை ஒருவர் அவசியம் கண்காணிக்க வேண்டும் தினமும்.
Rate this:
Cancel
vinayagam - bhopal,இந்தியா
28-நவ-202105:27:51 IST Report Abuse
vinayagam அந்த டிரைவர்கள் மலையாளியா இருப்பார்கள்... அவர்களை விடக்கூடாது
Rate this:
Cancel
27-நவ-202121:13:49 IST Report Abuse
Ram Pollachi தமிழக வனத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த கேரள மக்கள் அதை காலி செய்ய முடியாமல் இருக்கும் நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X