பொது செய்தி

இந்தியா

விவசாய சட்டம் வாபஸ் பா.ஜ.,வுக்கு...சாதகமா?: 5 மாநில தேர்தலுக்கு பின் தெரிய வரும்

Updated : நவ 29, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
விவசாயத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. 'இது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்' என, சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை, பா.ஜ.,வுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரும்.மத்தியில் ௨௦௧௪ல்
விவசாய சட்டம் வாபஸ் பா.ஜ.,வுக்கு...சாதகமா?: 5 மாநில தேர்தலுக்கு பின் தெரிய வரும்

விவசாயத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. 'இது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்' என, சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை, பா.ஜ.,வுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது அடுத்த சில மாதங்களில் தெரிய வரும்.
மத்தியில் ௨௦௧௪ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது. சுதந்திரத்துக்கு பின், மத்தியில் இருந்த அரசுகள் எடுக்க தயங்கிய பல நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல், பண மதிப்பிழப்பு, விமான நிலையங்கள் தனியார் மயம் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


சீர்திருத்தம்

நாட்டில் பல ஆண்டுகளாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாத துறையாக விவசாயத் துறை உள்ளது. இந்த துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல கட்சிகள் கூறி வந்தன; தங்களின் தேர்தல் அறிக்கைகளிலும் இது பற்றி வாக்குறுதிகள் அளித்தன.இதையடுத்து, கடந்த ஆண்டு விவசாயத் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிந்திருந்தாலும், விவசாயிகளை ஏற்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் இருந்தது. ஆனால், டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 11 சுற்றுக்கு மேல் பேசியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தும், போராட்டத்தை விவசாயிகள் கைவிடவில்லை. உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது.


அதிர்ச்சி

சமீபத்தில் பல மாநிலங்களில் காலியாக இருந்த லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை; இது, கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அடுத்த ஆண்டு ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற, உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்க வேண்டும்.
உ.பி.,யில்2017ல் பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளில் உ.பி.,யில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், வெற்றி பெறும் இடங்கள் கணிசமாக குறையும் என கூறப்பட்டிருந்தது. அதனால், பெரும்பான்மை பெற முடியாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி முறிந்த நிலையில், பஞ்சாபில் தான் களத்தில் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு உள்ளது.

உத்தரகண்டிலும், கோவாவிலும் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்குமா என்பதும் மதில் மேல் பூனை கதை தான். இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் உத்தர பிரதேசத்திலும், பஞ்சாபிலும் பா.ஜ., வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இதையடுத்தே, விவசாய சட்டங்களை வாபஸ் பெற பிரதமர் மோடி முடிவு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இந்த தந்திரம் மத்திய அரசுக்கு உதவுமா அல்லது பாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


அச்சம்

எனினும், இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதன் வாயிலாக, ஒரு தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்துள்ளதாக சட்ட நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:ஜனநாயகத்தில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை உள்ளது. சட்டங்களை வாபஸ் பெறுவதை தவிர, வேறு எதையும் ஏற்கமாட்டோம் என விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது உண்மை தான்.
ஆனால், இதேபோல் எதிர்காலத்தில் அரசுகள் கொண்டு வரும் சட்டம், எடுக்கப்படும் நடவடிக் கைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி, அவற்றை திரும்ப பெற வைத்துவிட முடியும் என்ற எண்ணத்தையும் மக்களிடம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.


கலைந்த கனவு

விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருபவர், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத். விவசாயிகள் அதிகம் உள்ள உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியை சேர்ந்தவர். அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது திகாயத்தின் ஆசை. விவசாயிகளின் ஆதரவை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற இவரது எண்ணம்,

2014 லோக்சபா தேர்தலிலும், ௨௦௧௭ உ.பி., சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. விவசாயிகள் போராட்டத்தை வைத்து, உ.பி.,யில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறலாம் என திகாயத் திட்டமிட்டிருந்தார்.ஆனால், விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதால், திகாயத்தின் கனவு நனவாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


பறிபோன வாய்ப்பு


மத்திய விவசாயத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வந்திருந்த மூன்று விவசாய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருந்தால், தங்கள் விளை பொருட்களை, சந்தையில் விவசாயிகளால் நேரடியாக விற்க முடிந்திருக்கும். இடைத்தரகர்கள் பிடியில் சிக்குவதிலிருந்து விவசாயிகள் தப்பித்திருக்கலாம். விளைபொருட்களை சேமித்து வைத்து, விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிருக்க முடியும்.

விவசாயத் துறையில் அரசு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரு சில விவசாய அமைப்புகளின் பிடிவாதத்தால், விவசாயத் துறையில் ஏற்படவிருந்த இந்த சீர்திருத்தம் பறிபோய் விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202118:56:53 IST Report Abuse
Vittalanand படிப்பறிவு உள்ள மாநிலத்தில் சாதகம்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
28-நவ-202118:13:15 IST Report Abuse
r ravichandran இன்று வாக்குகள் எண்ணபட்ட திரிபுரா மாநில உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் 99 சவிகித வாக்குகள் பிஜேபி பெற்று அனைத்து இடங்களிலும் காங்கிரஸ், கம்யுனிஸ்ட், மம்தா பானர்ஜி கட்சியை படு தோல்வி அடைய வைத்து விட்டது. திரிபுராவில் விவசாயிகள் இல்லையா?
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
28-நவ-202118:07:34 IST Report Abuse
r ravichandran இந்த சட்டங்களை வாபஸ் பெறாமலே கூட 5 மாநில சட்ட மன்ற தேர்தலில் 4 மாநிலங்கள் மீண்டும் பிஜேபி ஆட்சி தான் என்று புகழ் பெற்ற கருத்து கணிப்புகள் நிறுவனங்கள், கருத்து கணிப்புகளை வெளி இட்டு வருகின்றன. பஞ்சாப் எற்கனவே பிஜேபி செல்வாக்கு இல்லாத மாநிலம். இந்த சட்டம் வாபஸ் பெற்றதற்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை. மாறாக எதிர்கட்சிகளின் பிரசார ஆயுதத்தை மோடி பிடிங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X