காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் வரை பதவி உயர்வு பெற்று பணியாற்றிய பூமிநாதன், ஆடு திருடும் குற்றவாளிகள் மூவரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு கடமை உணர்வு மிக்க, அனுபவமும், உத்வேகமும் கொண்ட ஒரு சிறந்த அதிகாரியை காவல் துறை இழந்து விட்டது.ஆணிவேராக இருந்து செயல்பட்டு வந்த ஒரு குடும்பத்தலைவரின் அரவணைப்பை அவரது குடும்பம் இழந்து விட்டது.
சாத்தியமில்லை
குற்றம் செய்துவிட்டுத் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை ஆள் நடமாட்டமில்லாத இரவு நேரத்தில் தனியே துரத்தி செல்வது ஒரு ஆபத்தான முயற்சி என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் நெருங்கி செல்லாமலேயே இரவுப் பணியில் இருந்த காவலர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சென்று சுற்றி வளைத்திருக்கலாம்.ஆனால் அந்த அளவுக்கு பொறுமை, சில சமயங்களில் இருக்காது. இதையே 'சீரோ டாலரன்ஸ்' என்கிறோம்.
பணியில் இருக்கும் காவல் அதிகாரி கண் முன் தப்பிச் செல்லும் குற்றவாளியை, 'போகட்டும்... சிக்கமலா போய் விடுவான்...' என்று விட்டுவிட மனம் வராது.அப்படித் தப்பித்து செல்பவன் பல குற்றங்களைச் செய்து தேடப்படும் குற்றவாளியாக இருப்பானோ; அவனைப் பிடித்தால் பல வழக்குகள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பிருக்குமே என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்.
பொதுவாக, இரவு ரோந்து பணியிலிருக்கும் காவலர்கள் இருவராகத் தான் செல்வர். உதவி ஆய்வாளர் அல்லது உயர் அதிகாரிகள், தங்களுடன் ஒன்றிரண்டு காவலர்களை அழைத்துச் செல்லலாம். காவலர் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு அழைத்துச் செல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அதேபோல், இரவு அலுவலில் செல்லும் போது தற்போதுள்ள சூழ்நிலையில், கைத்துப்பாக்கி எடுத்து செல்வது தான் பாதுகாப்பு; அதை அவர் தவிர்த்திருக்கிறார். அதற்கு காரணம், அவசியமிருக்காது என்ற நம்பிக்கை தான்.இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளோரின் விபரம் தான் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் 9, 14 மற்றும் 19 வயது சிறுவர்கள்.
அவர்களில் முதல் இருவரும் பள்ளி மாணவர்கள் என்ற செய்தி தான் அது.இந்த வயதில் கொடுமையான ஆயுதத்தைக் கையில் எடுக்கத் துணிந்த தோடு, காவல் அதிகாரியைக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யும் அளவுக்கு வன்முறை அவர்கள் மனதில் குடியேறியிருப்பது, இந்த சமுதாயம் சீர்கெட்டுப்போன சூழ்நிலை யில் உள்ளது என்பதை பறை சாற்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம் வியாபார நோக்கத்தோடு செயல்படும் காட்சி ஊடகங்கள். திரைப்படமாகட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகட்டும், மக்களின் உணர்ச்சியைத் துாண்டும் விதத்தில் அமையவேண்டும் என்பதற்காகவே, காட்சிகளை மிகைப் படுத்திக்காட்டுவதில் எல்லை மீறி போகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில், உண்மையை வரவழைப்பதற்காக கொடுமைப் படுத்தப்படுவதாக காட்டப்படும் காட்சிகள் மிக மோசமான வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதாநாயகனை எதிரிக் கும்பல் பத்து பேர் சேர்ந்து நுனியில் முள்கம்பி சுற்றிய இரும்புத் தடியால் தலையில் பல முறை மாறி மாறித் தாக்கி வீழ்த்தி விட்டு போகும் போது, கதாநாயகியின் வார்த்தையைக் கேட்டதும் துள்ளி எழுவான் கதாநாயகன்.கற்பனைக்கு மகிழ்ச்சி தரும் அந்த காட்சி உண்மையில் சற்றும் சாத்திய மில்லை என்பது எல்லாரும் அறிந்த வெளிப்படையான உண்மை.
கோபத்தில், ஓங்கி அறைந்ததில் பள்ளித்தோழனின் சாவுக்கு காரணமாகி கொலைக் குற்றத்தில் சிறைக்குப் போன பள்ளி மாணவனின் வழக்கை விசாரணை செய்தவன் நான். அந்த திரைப் படத்தில், காவல் நிலையத்தில் நடக்கும் தாக்குதல் காட்சிகளை காணும் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது ஏற்கனவே இருக்கும் தவறான எண்ணம் இன்னமும் பலப்பட்டு, முற்றிலும் வெறுக்கும் நிலை ஏற்படும்.
ஒரு மனிதனிடமிருந்து, அதுவும் ஒரு மோசமான குற்றவாளியிடமிருந்து அவன் மறைக்க நினைக்கும் உண்மையை இயல்பாக வரவழைக்க முடியாது என்பது, மக்களுக்கு மட்டுமின்றி, அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றாகவே தெரிந்த உண்மை.
மோசமான விளைவு
நம்மிடம் உள்ள அறிவியல் தொழில்நுட்பமெல்லம் வெளிப்படையாக உள்ள தடயங்களை ஆராய்ந்து உண்மையோடு தொடர்புபடுத்தி நீதிமன்றத்தின்முன்வைக்கப் பயன்படுமேயன்றி, ஒரு மனிதனின் மனதுக்குள் மறைத்து வைத்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வர சற்றும் பயன்படாது.'பாலிகிராப், நார்காடிக் அனாலிசிஸ்' போன்றவையெல்லாம் ஒரு உறுதி யான தகவலை அளிக்க இயலாது என்பதை அறிவியல் வல்லுனர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
அதற்காக கடுமையான முறையில் தாக்கலாம் என, அனுமதி கொடுத்து விட முடியாது. அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்; சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வழி வகுத்துவிடும்.எனவே தான் அந்த நிபந்தனையில் சட்டம் உறுதியாக உள்ளது. மனித உரிமை ஆணையம் சற்றும் தளர்வின்றி அதை அமல்படுத்துகிறது.
அதே காரணத்தால் தான் காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.அதன்மூலம் வெளிப் படுத்தப் பட்ட உண்மைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட தடயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. இந்நிலையில் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பிலிருக்கும் காவல் அதிகாரிகளின் நிலையை இந்த சமுதாயம் உணரவேண்டும்.
ஒரு குற்றவளியைக் காவல் அதிகாரி கைது செய்யும்போது அந்த நபர் முரண்டு பிடித்தால் அல்லது தாக்கினால், அதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அளவுக்கு மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம்.ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு குற்றவாளியின் செயல்பாடு இருக்குமானால், அவனது உயிரைப் போக்கினால் ஒழிய ஒரு உயிரைக் காக்க முடியாது என்ற நிலை நீடிக்குமானால், அவனுக்கு மரணத்தையும் ஏற்படுத்த சட்டம் அனுமதி அளிக்கிறது. அந்த அனுமதியை வைத்து தான் காவல் அதிகாரிகள் துணிவுடன் செயல்படுகின்றனர்.
அவர்களையும் அறியாமல் கவனக்குறைவாக அல்லது ஆத்திரம் காரணமாக எல்லை மீறும் போது அவர்களே பாதிக்கப்படுகின்றனர். இது, அவர்கள் மீது ஆத்திரப்படும் விஷயமல்ல; அனுதாபப்பட வேண்டிய விஷயம் என்பதை இந்த சமுதாயம் உணர்வதில்லை.ஒரு குற்றம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிடும் அந்த பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரிக்கு, அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன மனநிலையில் இருப்பரோ அதே மனநிலை ஏற்பட வேண்டும்.
அத்துமீறல்
அப்போது தான் அந்த அதிகாரியால் அந்த வழக்கின் விசாரணையில் தீவிரமாக ஈடுபட முடியும்.
அப்படி ஈடுபடும்போது அவரையும் அறியாமல் சில நேரங்களில் அத்துமீறல் நடந்து விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், வட மாநிலம் ஒன்றில் குற்றவாளியை பிடிக்கச்சென்ற ஒரு ஆய்வாளரின் ஆர்வமிகுதியால் உடன்சென்ற மற்றொரு ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.எனவே, தங்களின் உயிருக்கு மட்டுமல்லாமல், தன் பதவி, புகழுக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பு விழிப்புணர்வோடு தான் போலீஸ் அதிகாரி செயல்பட வேண்டும்.
அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, திறமைக்கு அநீதி இழைத்து தன் செயல்பாட்டை முடக்கிக்கொள்பவர்கள் கோழைகள். அவர்களை காவல் துறை மதிப்பதுமில்லை, மன்னிப்பதுமில்லை.நியாயமான சட்ட வரையரைக்கு உட்பட்டு எல்லையை மீறாமல் கடமை ஆற்றுவதை தான் அவர்கள் சார்ந்திருக்கிற இந்த துறையும், சமுதாயமும், நீதிமன்றங்களும் எதிர்பார்க்கின்றன.
இந்நிலையில், அரிதாக நடக்கும் சில அடாவடி நிகழ்வுகள் ஊதி பெரிதாக்கப்படுகின்றன. பாதிக்கப்படுவோரின் கூக்குரல் நீதிமன்றத்தை எட்டும்போது பன்மடங்கு சக்தி பெற்று விடுகிறது. இது குறித்து விசாரிக்க நியமிக்கப்படும் விசாரணைக்குழுவின் விசாரணையில், இந்த எதிர் குரல்களின் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சேலம் மாவட்டம், கொளத்துார் காவல் நிலைய ஆய்வாளர் அப்பகுதி மக்களோடு இணைந்து செயல்பட்டு தன் அதிகார எல்லையை அமைதியாக வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருந்தது.ஆடு திருடும் கும்பலால் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட நிகழ்வையே எடுத்துக் கொண்டாலும், இதில் ஈடுபட்ட சிறுவர்கள் திடீரென்று தோன்றி இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களாக இருக்க முடியாது. ஆடு திருடுவது என்பது அந்தப்பகுதியில் அதிக அளவில் நிகழ்ந்து வந்த குற்றமாக இருந்திருக்க வேண்டும்.
அதில் ஈடுபட்ட பழைய பெரிய குற்றவாளிகளோடு, இவர்கள் புதிதாக சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அனுபவமின்மை காரணமாக விளைவுகளைப்பற்றி சிந்திக்கும் திறனின்றி ஆட்டு திருட்டிலிருந்து தப்பிக்க கொலைக்குற்றத்தை செய்திருக்கின்றனர்.
நான் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பெரியபாளையம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றினேன். ஒரு நாள், இரவு ரோந்து அலுவலில் இருந்த போது, பெரியபாளையம் - ஊத்துக்கோட்டைக்கு இடையே ஆட்டோவில் வந்த நான்கு பேர் கும்பல், ஆந்திராவிலிருந்து வந்த பயணிகள் பேருந்தை, அதிகாலை, 3:30 மணிக்கு மறித்து ஓட்டுனரையும், நடத்துனரையும் தாக்கி காயப்படுத்தி, அவர்களிட மிருந்தும் பயணிகளிடமிருந்தும், பணம் மற்றும் நகைகளைக் கொள்ளைஅடித்து சென்றுவிட்டது.
ரோந்திலிருந்த எனக்கு நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததும் 'மைக்' மூலம் நிலையங்களுக்கும், இரவு ரோந்து அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துவிட்டு, ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளரை சாலையில் நின்று கண்காணிக்கச் சொன்னேன்.சற்று நேரத்தில் நான், என் ஜீப்பில் ஓட்டுனர் மற்றும் ஒரு காவலருடன் ஊத்துக்கோட்டை சென்றேன். உதவி ஆய்வாளர், அந்த கும்பல் சென்ற ஆட்டோவை பார்த்ததாகவும், அதன் முன்புற கண்ணாடியை உடைத்து விட்டதாகவும் சொன்னார்.
தலைமறைவு
அவர் காட்டிய திசையில் துரத்தி சென்றோம். ஆள் நடமாட்டமில்லாத இரவு நேரம் என்றாலும், அங்கங்கே கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டே ஆந்திர மாநிலம் நாகலாபுரம் வரை போய்விட்டோம்.துாரத்தில் ஆட்டோ போவது தெரிந்தது. கொள்ளையரும் எங்களைப் பார்த்து விட்டதால் ஆட்டோவை விட்டுவிட்டு வயல் வெளியில் இறங்கி ஓடினர். பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் நால்வரையும் விரட்டி பிடித்து, பணம், நகைகளை கைப்பற்றினோம்.
அன்று என்னிடம் கைத்துப்பாக்கி இருந்தும் உபயோகிக்கும் அவசியம் ஏற்படவில்லை. சிக்கிய நால்வரில் முக்கியமானவன், 50க்கும் மேற்பட்ட குற்றங்களில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்தவன்.காலையில் தகவல் அறிந்து நிலையத்துக்கு வந்த உயரதிகாரிகள் எங்களை பாராட்டினர்.
அன்று மட்டும் அந்த குற்றவாளிகளைக் கோட்டை விட்டிருந்தால், என் பணிப்பயணம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கும்!
மா.கருணாநிதி,
ஓய்வுபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தொடர்புக்கு:
மொபைல்: 98404 88111
இ -- மெயில்: spkaruna@gmail.comஉத்வேகத்தால் உயிரை இழக்க வேண்டாம்!