திருப்பத்துார்-ஆம்பூர் அருகே, மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், 30 கிராமங்கள் இருளில் மூழ்கின.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வரும் மழையால், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பாலாற்றில் கடந்த, 20 முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சோமலாபுரம், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, பச்சகுப்பம் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நேற்று முன்தினம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், 30 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன.மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'பாலாற்றில் வெள்ளம் வடிந்தால் தான், மின் கம்பங்களை சரி செய்ய முடியும். மாற்று ஏற்பாடாக, ரயில்வே இருப்பு பாதையை கடந்து மின் வினியோகம் செய்ய முடியும். ஆனால், ரயில்வே துறையினர் அனுமதி வழங்க மறுக்கின்றனர்' என்றனர்.குடிநீர் நிறுத்தம்காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக வேலுார் மாவட்டம் முழுதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக திருப்பத்துாரில் இருந்து, வேலுார் வரை பாலாற்றில் 'பைப் லைன்' அமைக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், 20 கி.மீ., குடிநீர் பைப் லைன் அடித்து செல்லப்பட்டது நேற்று கண்டறியப்பட்டது.இதனால் பேர்ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, கே.வி.குப்பம் மற்றும் வேலுார் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'பாலாற்றில் வெள்ளம் குறைந்த பிறகு தான், பைப் லைன்களை சீரமைக்க முடியும். 'அதுவரை உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக குளம், நீர் நிலைகளை பயன்படுத்தி, குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE