கோவை-கோவை அருகே, மூன்று யானைகளை பலி வாங்கிய ரயில் அதிவேகத்தில் இயக்கப்பட்டதா என, தொழில்நுட்ப ரீதியான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை மற்றும் 18 வயது மக்னா யானை நேற்று முன்தினம், மங்களூரு - சென்னை ரயில் மோதி உயிரிழந்தன. வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், யானைகளின் சடலங்களை நேற்று ஆய்வு செய்தார். மூன்று யானைகள்சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உயிரிழந்த, 25 வயது பெண் யானை சடலம் பிரேத பரிசோதனை செய்தபோது, வயிற்றில் ஒரு மாதத்துக்கும் குறைவான கரு இருந்துள்ளது
.ரயிலை வேகமாக இயக்கிய ரயில்வே லோகோ பைலட், உதவி லோகோ பைலட் இருவரிடமும் வன துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை கைது செய்ய கேரள ரயில்வே துறை லோகோ பைலட் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறுகையில், ''வன துறை, ரயில்வே துறை உடன்பாட்டின்படி, ரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரவில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன,'' என்றார்.ரயில்களின் வேகத்தை கணக்கிட, ரயில் இன்ஜினில் பிரத்யேக சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப் மூலம், விபத்து நடந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் வேகத்தை கணக்கிட முடியும். இதை வன துறையினர் கைப்பற்றியுள்ளனர். கோவை எம்.பி., நடராஜன் கூறியதாவது:ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யானைகள் இருப்புபாதையை கடக்கும் போது உயிரிழப்பது தொடர்ந்து நடக்கிறது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலைஅளிக்கிறது. இந்த பகுதியில் குறிப்பிட்ட துாரத்தை, ரயில்கள் 30 கி.மீ.,க்கு குறைவான வேகத்தில் தான் கடக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
ரயில்வே நிர்வாகம் இந்த நடைமுறைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.யானைகளின் வலசை பாதைகளை மறித்து கட்டடங்கள், நிறுவனங்கள் கட்டப்பட்டது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் யானைகள் தொடர் உயிரிழப்பு குறித்து, வன துறையினர் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, எம்.பி., கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE