துாத்துக்குடி-குமரி மாவட்டம், தக்கலையில் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி பருப்புடன் கன்டெய்னர் லாரியை கடத்திய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகன் உட்பட ஏழு பேரை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள முந்திரி ஆலையில் இருந்து கன்டெய்னர் லாரி, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய துாத்துக்குடி துறைமுகத்திற்கு சென்றது. நவம்பர் 26 அதிகாலையில் துாத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே லாரி சென்றபோது, சிலர் லாரியை மடக்கி டிரைவர் ஹரியை தாக்கி லாரியை கடத்தினர்.
லாரி வந்து சேராததால் லாரி புக்கிங் அலுவலக கணக்காளர் முத்துகுமார், துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசில் செய்தார். தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். லாரியை கடத்துவது தெரியாமல் இருப்பதற்காக கடத்தல் காரர்கள் லாரியில் இருந்த ஜி.பி.எஸ்., கருவியை கழற்றி வீசியிருந்தனர். லாரியின் பெயர், பதிவெண்களை மாற்றி கடத்தினர். டோல்கேட் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட லாரியை தொடர்ந்து, துாத்துக்குடி பதிவெண் டிஎன் 69 பிஎல் 5555 கொண்ட 'ரெனால்ட் ட்ரைபர்' கார் பின்தொடர்ந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த கார் துாத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் தொழிலாளர்நல துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங்கிற்கு சொந்தமானது என தெரிந்தது. போலீசார் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காக்கநேரி என்னுமிடத்தில் லாரியையும் கடத்திச்சென்ற முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜ் ஜெபசிங், 39, மற்றும் அவரது கூட்டாளிகள், 21- 35 வயதுள்ள ஆறு பேரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். புகார் செய்த 12 மணி நேரத்தில் கடத்தல் லாரியை மீட்ட ஏ.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசாரை, எஸ்.பி.,ஜெயகுமார் பாராட்டினார்.
போலீசார் கூறியதாவது:முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜின் செயல்பாடுகள் சரியில்லாததால் மகனுக்கும், தமக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே அறிவித்து உள்ளாராம். ஞானராஜிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்ட முறப்பநாடு செந்தில்முருகனுடன் ஏற்பட்ட நட்பால் கடத்தலில் ஈடுபட முடிவு செய்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் லாரியை திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி செல்லும் சாலையில் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
லாரி டிரைவர் ஹரி, தன் நிறுவனத்திற்கு தன்னை 5555 என்ற எண்ணுடைய கார் பின்தொடர்ந்து வருவது குறித்து போனில் தகவல் தெரிவித்துள்ளார். லாரி டிரைவர் ஹரியையும் தாக்கி கரூர் வரை கொண்டு சென்று உள்ளனர். செல்லும் வழியில் மூன்ற இடங்களில் ஸ்பிரே பெயின்ட் மூலம் லாரியின் பெயர் பலகை, பதிவெண்ணை மாற்றிஉள்ளனர். ஆனால் பின் தொடர்ந்துசென்ற காரை வைத்து துப்பு துலக்கினோம். போலீசார் தம்மை துரத்துவதை அறிந்த ஞானராஜ், காருடன் சென்னைக்கு தப்ப முயன்றுள்ளார். அவரையும், கூட்டாளிகளையும் பிடித்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE