சென்னை தி.நகரில், பா.ஜ., தலைமையகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அவர் பேசும்போது, 'தமிழக அரசின் கடன் தற்போது, 5.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஆண்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2023ல், அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கொடுக்கக் கூட தமிழக அரசிடம் பணம் இருக்காது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'இன்னைக்கு இருக்குற நிலையில, தமிழக மக்களிடம் தக்காளி வாங்க கூட காசில்லை... 2023ம் ஆண்டை பற்றி இப்போ பேசுறாரே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
'கட்சிக்குள் உலை வைக்கிறார்!'
மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சென்னை பூந்தமல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, ஒரு வீட்டிற்குள் சென்ற சசிகலா, அடுப்பில் இருந்த சோற்றை கரண்டியில் கிளறி பதம் பார்த்து, வெந்து விட்டதாக கூறினார்.பின், அவர் பேசுகையில், 'என் வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. அதையும் கடந்து, நீந்தி தான் இங்கு வந்துள்ளேன்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை காப்பாற்ற, என்னால் முடிந்ததை செய்வேன்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'வீட்டிற்குள் புகுந்து உலை பார்ப்பது போல, அ.தி.மு.க.,விற்குள்ளும் ஏதாவது செய்ய பார்க்கிறார்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
அடிமட்ட தொண்டனுக்கு 'அல்வா!'
அரியலுாரில், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான சிவசங்கர் பேசுகையில், 'கட்சியினரிடையே உள்ள விருப்பு வெறுப்புகளைத் தள்ளிவைத்து, வரும் நகர்மன்றத் தேர்தலில், 100 சதவீதம் தி.மு.க., கைப்பற்ற வேண்டும். கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ளோருக்கு ஏதாவது ஒரு பொறுப்பு கொடுக்க வேண்டும். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அவர்களை அனுசரித்து கொள்ள வேண்டும்...' என்றார்.
அங்கிருந்த, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'தி.மு.க.,வில் மட்டும் தான் வாரிசுகளுக்கும், புதுசா வந்தவங்களுக்கும் பதவி கிடைக்கும்... காலாகாலமாக, 'போஸ்டர்' ஒட்டும் அடிமட்ட தொண்டனுக்கு, 'அல்வா' மட்டும் கிடைக்கும்' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE