டில்லி 'உஷ்ஷ்ஷ்': உதயநிதிக்கு முக்கிய பதவி

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதல்வர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஷா பங்கேற்றார். அப்போது தி.மு.க.,
 டில்லி 'உஷ்ஷ்ஷ்': உதயநிதிக்கு முக்கிய பதவி

தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதல்வர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஷா பங்கேற்றார். அப்போது தி.மு.க., குடும்பத்தின் ஒரு முக்கிய நபரை ஜெய் ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர், ஒரு பிரபல தொழிலதிபர். தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இந்த தொழிலதிபர் ஒரு பாலமாக திகழ்கிறார். ஆனால், ஒரு அரசியல்வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முடியுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.


டி.ஜி.பி.,யை பாராட்டிய பிரதமர்


சமீபத்தில் அனைத்து மாநில டி.ஜி.பி.,க் கள் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. இதில் பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுடன், பிரதமர் தனியாக பேசியதோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது குறித்து உள்துறை அதிகாரிகள் சொன்னது இதுதான்.'நீங்கள் சைக்கிளில் மகாபலிபுரம் சென்று வருகிறீர்களே. அதை சமூக வலைதளங்களில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. 'உடலையும் கட்டுக் கோப்பாக வைத்துள்ளீர்கள்' என, பிரதமர் மோடி, சைலேந்திர பாபுவிடம் சொல்ல, அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளாரே என, இன்ப அதிர்ச்சியில் உறைந்தார் சைலேந்திரபாபு. பிரதமரை சந்தித்தபோது 15 பக்க அறிக்கையையும் அவரிடம் அளித்துள்ளார் டி.ஜி.பி., இந்த அறிக்கையை முதல்வர் பார்த்து ஒப்புதல் அளித்த பின்தான், மோடியிடம் தமிழக அரசின் சார்பாக அளித்துள்ளார். தமிழகத்தில் கலவரம், மத மாற்றம், சிலை திருட்டு, சமூக வலைதளங்களின் போக்கு, சைபர் குற்றங்கள், சிறுமியர் மீது பாலியல் குற்றங்கள் என பல விஷயங்கள் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது.


துணை சபாநாயகர் தேர்தல்


லோக்சபா சபாநாயகரின் பணிச்சுமையை குறைக்க துணை சபாநாயகர் இருப்பார். லோக்சபா எம்.பி.,க்களின் ஓட்டெடுப்பு வாயிலாக துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். வழக்கமாக இந்த பதவி, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படும்.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமலேயே சபையை நடத்திக் கொண்டிருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.'துணை சபாநாயகர் நியமித்தால் அவருக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் செலவாகிறது. இப்போது அவர் இல்லாமலேயே சபை நடவடிக்கைகள் நடக்கவில்லையா' என, பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். 'சபாநாயகர் இல்லாத போது, சபையை தலைமை தாங்கி நடத்த ஆறு எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளார் ஓம்பிர்லா. இவர்களும் துணை சபாநாயகருக்கு சமமானவர்கள். எனவே, எதற்கு தேர்தல்' என்கிறார் பிரதமர். ஓய்வு வயது அதிகரிப்பு?மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதானதும் ஓய்வு பெறுகின்றனர். இந்த வயது வரம்பு 62 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சக வட்டாரங்களில் இது குறித்து பரவலாக பேசப்படுகிறது.இந்த பேச்சு கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. -சமீபத்தில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துள்ளது மத்திய அரசு. இதனால் தற்போது இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் பணிக்கொடை, ஓய்வூதியம் என பண பட்டுவாடா செய்ய வேண்டியதில்லை. இதனால், அரசுக்கு இப்போதைக்கு லாபம் என கணக்கிடப்படுகிறது.


தமிழக சாலையில் போர் விமானம்


தேசிய நெடுஞ்சாலைகளில் விமானப்படை போர் விமானங்கள் தரையிறங்கும் வசதியை ஏற்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விமானப் படையின் போர் விமானங்கள் தரை இறங்கின. போர்க்காலத்தின் போது விமானப்படையின் போர் விமானங்கள் இறங்கவோ அல்லது தாக்குதல் நடத்த கிளம்பவோ விமான தளங்கள் தேவைப்படும். இதற்காகவே இந்த திட்டம் உருவாகியுள்ளது. இலங்கைக்கு அருகே உள்ளதால் தமிழகத்திலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் விமானப்படை போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் திருநெல்வேலியில் 'ஏர்பேஸ்' உருவாக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X