இந்திய நிகழ்வுகள்
5 பேரை கொலை செய்தவர் கைது
அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டம் ஷேவ்ரதாலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் டெப்ராய். மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தன் வீட்டில் இரு மகள்கள் மற்றும் தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் உள்ளார். மருத்துவமனைக்கு வந்த அவர், சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி, அதன் டிரைவர் மற்றும் அவரது மகனை தாக்கினார்; இதில் டிரைவர் பலியானார். தன்னை பிடிக்க வந்த போலீசார் மீதும் அவர் தாக்குதல் நடத்தியதில், இன்ஸ்பெக்டர் சத்யஜித் முல்லிக் பலியானார். அதன்பின் பிரதீப் டெப்ராய் கைது செய்யப்பட்டார்.
வேன் மோதி 4 பக்தர்கள் பலி
புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டம், கன்ஹே கிராமம் அருகே கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், நேற்று காலை மினி லாரி புகுந்தது. விபத்தில் காயம்அடைந்த 27 பேரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்; அவர்களில் நால்வர் பலியாயினர்.சரக்கு கப்பல் மோதல்ஆமதாபாத்: குஜராத்தை அடுத்துள்ள கடற்பகுதியான கட்ச் வளைகுடாவில், 'ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ்' என, அழைக்கப்படும் இரு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென மோதின. இதில் உயிரிழப்பு மற்றும் எண்ணெய் கசிவு போன்ற பாதிப்பு ஏதுமில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் 4 பேர் சாவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பல்ஜீத், 28. விபத்தில் சிக்கி இவரது கால் எலும்பு முறிந்தது. இதனால் நேற்று ஆம்புலன்சில் ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் தவுசா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் பல்ஜீத், ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் உட்பட நால்வர் பலியாயினர். வேட்டை நிகழ்ச்சி: 5 பேர் கைதுஜுனாகத்: குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் பதிவான 'வீடியோ' சமீபத்தில் சமூக வலைதளங்களில பரவியது. அதில் கிர் வனப்பகுதி அருகில் உள்ள கிராமத்தில் காளை மாடு கட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதை சிங்கம் வேட்டை யாடுகிறது. இந்த காட்சியை துாரத்தில் இருந்து மக்கள் ரசிக்கின்றனர். காளை மாட்டை கட்டி வைத்தால் சிங்கம் வரும் என, இதுபோன்ற வேட்டை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக, 12 பேர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.
நக்சல் சதி: தடம் புரண்ட ரயில்
தாண்டேவாடா: சத்தீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டம் கிரண்டுல் - ஜக்தல்பூர் இடையே சென்ற சரக்கு ரயிலின் 18 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு தடம்புரண்டன. இதனால் இந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. விசாரணையில் பான்சி மற்றும் கமலுார் இடையே தண்டவாளத்தை நக்சல்கள் அகற்றியது உறுதியாகி உள்ளது.
தமிழக நிகழ்வுகள்

ரூ.1 கோடி முந்திரியுடன் லாரி கடத்தல்: 'மாஜி' மந்திரி மகன் உட்பட 7 பேர் அதிரடி கைது
துாத்துக்குடி-குமரி மாவட்டம், தக்கலையில் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி பருப்புடன் கன்டெய்னர் லாரியை கடத்திய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகன் உட்பட ஏழு பேரை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள முந்திரி ஆலையில் இருந்து கன்டெய்னர் லாரி, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய துாத்துக்குடி துறைமுகத்திற்கு சென்றது. நவம்பர் 26 அதிகாலையில் துாத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே லாரி சென்றபோது, சிலர் லாரியை மடக்கி டிரைவர் ஹரியை தாக்கி லாரியை கடத்தினர்.
லாரி வந்து சேராததால் லாரி புக்கிங் அலுவலக கணக்காளர் முத்துகுமார், துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசில் செய்தார். தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். லாரியை கடத்துவது தெரியாமல் இருப்பதற்காக கடத்தல் காரர்கள் லாரியில் இருந்த ஜி.பி.எஸ்., கருவியை கழற்றி வீசியிருந்தனர். லாரியின் பெயர், பதிவெண்களை மாற்றி கடத்தினர். டோல்கேட் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட லாரியை தொடர்ந்து, துாத்துக்குடி பதிவெண் டிஎன் 69 பிஎல் 5555 கொண்ட 'ரெனால்ட் ட்ரைபர்' கார் பின்தொடர்ந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த கார் துாத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் தொழிலாளர்நல துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங்கிற்கு சொந்தமானது என தெரிந்தது. போலீசார் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காக்கநேரி என்னுமிடத்தில் லாரியையும் கடத்திச்சென்ற முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜ் ஜெபசிங், 39, மற்றும் அவரது கூட்டாளிகள், 21- 35 வயதுள்ள ஆறு பேரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். புகார் செய்த 12 மணி நேரத்தில் கடத்தல் லாரியை மீட்ட ஏ.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசாரை, எஸ்.பி.,ஜெயகுமார் பாராட்டினார்.
போலீசார் கூறியதாவது:முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜின் செயல்பாடுகள் சரியில்லாததால் மகனுக்கும், தமக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே அறிவித்து உள்ளாராம். ஞானராஜிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்ட முறப்பநாடு செந்தில்முருகனுடன் ஏற்பட்ட நட்பால் கடத்தலில் ஈடுபட முடிவு செய்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் லாரியை திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி செல்லும் சாலையில் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
லாரி டிரைவர் ஹரி, தன் நிறுவனத்திற்கு தன்னை 5555 என்ற எண்ணுடைய கார் பின்தொடர்ந்து வருவது குறித்து போனில் தகவல் தெரிவித்துள்ளார். லாரி டிரைவர் ஹரியையும் தாக்கி கரூர் வரை கொண்டு சென்று உள்ளனர். செல்லும் வழியில் மூன்ற இடங்களில் ஸ்பிரே பெயின்ட் மூலம் லாரியின் பெயர் பலகை, பதிவெண்ணை மாற்றிஉள்ளனர். ஆனால் பின் தொடர்ந்துசென்ற காரை வைத்து துப்பு துலக்கினோம். போலீசார் தம்மை துரத்துவதை அறிந்த ஞானராஜ், காருடன் சென்னைக்கு தப்ப முயன்றுள்ளார். அவரையும், கூட்டாளிகளையும் பிடித்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்
கமுதி:கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் இரவு நேரத்தில் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கமுதி அருகே மரக்குளத்தில் சோளம்,நெல் பயிரிடப்பட்டுள்ளது.மழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நன்கு விளைச்சல் அடைந்துள்ளது.இந்நிலையில் குண்டாறு நீர்வரத்து பகுதிகளில் இருந்து இரவுநேரத்தில் காட்டுபன்றிகள் வந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.முன்னாள் ராணுவவீரர் முத்துராமலிங்கம் கூறியதாவது:பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில்காட்டுபன்றிகள் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. வேளாண்மைத்துறை, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.

மாணவி தற்கொலை முயற்சி கராத்தே பயிற்சியாளர் கைது
சேலம்--பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. அங்கு, 2017ல் மாணவ - -மாணவியருக்கு சீலியம்பட்டியைச் சேர்ந்த ராஜா, 46, கராத்தே பயிற்சி அளித்தார். அப்போது அங்கு எட்டாம் வகுப்பு படித்த மாணவிக்கு, ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.தற்போது பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவி, கடந்த 22ல் தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து, அவரது பெற்றோர் சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம், நேற்று முன்தினம் புகார் அளித்தனர். கருமந்துறை போலீசார் நேற்று விசாரித்தனர்.சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பிய பின் மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜு, 49 என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இட்லிக்குள் தவளை: நோயாளி அதிர்ச்சி
தஞ்சாவூர்-கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு, உறவினர் வாங்கிச் சென்ற இட்லிக்குள், இறந்த தவளை இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில், கேன்டீன் உள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவில் முருகேசன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை கேன்டீனில் முருகேசன் உறவினர்கள் நான்கு இட்லிகள் பார்சல் வாங்கி சென்றனர். முருகேசன் பார்சலை பிரித்த போது, வெந்த நிலையில் ஒரு தவளை இட்லிக்குள் இருந்தது.
முருகேசன் உறவினர்கள் கேன்டீன் உரிமையாளர் முத்துவிடம், இட்டிலிக்குள் தவளை இருந்ததை காட்டியுள்ளனர். அப்போது கேன்டீனில் சாப்பிட்ட பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கண் முன், இட்லி தயாரிப்பதற்கு வைத்திருந்த மாவை, கீழே கொட்டிய முத்து அவசர அவசரமாக கேன்டீனை பூட்டி சென்றார். இதுகுறித்து, சுகாதார துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நகை கடை அதிபர் வீட்டில் 103 சவரன் கொள்ளை
பெரம்பலுார்--பெரம்பலுாரில் பிரபல நகைக் கடை உரிமையாளர் வீட்டில், 103 சவரன் தங்க நகைகள், ௯ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலுார், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன், 65. இவர், எளம்பலுார் சாலையில், 'ஆனந்த்' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு எளம்பலுார் சாலையில் உள்ள தன் வீட்டின் கதவை பூட்டாமல், கருப்பண்ணன் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி, மகள் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்தனர். இரவு 10:30 மணியளவில், முகமூடி அணிந்த மூன்று பேர், திடீரென வீட்டிற்குள் புகுந்து, கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பீரோ சாவியை வாங்கியுள்ளனர்.
பின் பீரோவை திறந்து, அதில் இருந்த 103 சவரன் தங்க நகைகள், ௯ கிலோ வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சொகுசு கார் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றனர்.இது குறித்து, கருப்பண்ணன் அளித்த புகார்படி, பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தடயங்கள் சேகரிக்கபட்டன. கொள்ளையர் பைக்கில் வந்து சென்றது, கண்காணிப்பு 'கேமரா'வில் பதிவாகி உள்ளது.நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
ஆயக்குடி-- -பழநி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி ஆசிரியர் நாட்ராயன் 30, 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பழநி ஆயக்குடி அருகே அமரபூண்டியில் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நாட்ராயன் பணியாற்றுகிறார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பணியாற்றி வந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயின்ற மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். பழநி மகளிர் போலீசார் நாட்ராயனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE