அடி மேல் அடி: அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைப்பு

Added : ஆக 06, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு, தற்போது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை நிர்ணயிக்கும், பிரபல ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து விட்டது. இதுகுறித்து, அந்நிறுவனம் மீது, ஒபாமா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரம், "தனது கடனுக்கு அடிமையாகும் நோயைத் தீர்க்க,
அடி மேல் அடி: அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு, தற்போது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை நிர்ணயிக்கும், பிரபல ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து விட்டது. இதுகுறித்து, அந்நிறுவனம் மீது, ஒபாமா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரம், "தனது கடனுக்கு அடிமையாகும் நோயைத் தீர்க்க, அமெரிக்கா பொது அறிவைப் பயன்படுத்தினால் நல்லது. புதிய, உறுதியான, பாதுகாப்பான மற்றொரு உலகளாவிய கரன்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது' என, சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

ஒரு மாதமாக எச்சரிக்கை: அமெரிக்காவின் கடன் நெருக்கடிக்கான தீர்வு, கடந்த 1ம் தேதி எட்டப்பட்டு, கடைசி கட்டத்தில் சட்டமாக்கப்பட்டது. ஆனால், கடன் மதிப்பீட்டு நிறுவனமான "ஸ்டாண்டர்டு அண்டு புவர்' (எஸ் அண்டு பி), "அமெரிக்கா தன் நிதிப் பற்றாக்குறையை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 4 டிரில்லியன் டாலர் அளவிற்காவது குறைத்தால் தான், அதன் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டுக்கு ஆபத்திருக்காது. மாறாக நடந்தால், குறியீடு குறைக்கப்படலாம்' என, கடந்த ஒரு மாத காலமாக எச்சரிக்கை விடுத்து வந்தது.
மற்றொரு நிறுவனமான "மூடிஸ்', அமெரிக்கா எந்த ஒரு மசோதா கொண்டு வந்த போதிலும், அதன் கடன் மதிப்பீடு மீதான தனது பரிசீலனை, தொடர்ந்து எதிர்மறையாகவே இருக்கும் என, மிரட்டல் விடுத்தது. ஆனால், நிறைவேற்றப்பட்ட மசோதாவில், வருமானத்திற்கு வழி வகுக்கப்படாமல், செலவுகளை மட்டும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 2.4 டிரில்லியன் டாலர் அளவிற்குக் குறைக்க, பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கடன் மதிப்பீடு குறைப்பு: இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு, அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்று பரவிய வதந்தியால், அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகளில், பெரும் சரிவு நிகழ்ந்தது. கடந்த 5ம் தேதி, அமெரிக்காவில், 1,17,000 வேலை வாய்ப்புகள், ஜூலையில் உருவாக்கப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, பங்குச் சந்தை சரிவு தற்காலிகமாக நின்றது. அதே நாள் இரவு, "எஸ் அண்டு பி', அமெரிக்காவின் நீண்ட கால கடன் பத்திரங்கள் மீதான கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை, "ஏஏஏ' என்ற உயர்தரத்தில் இருந்து, அடுத்த படிநிலையான, "ஏஏ+' என்ற நிலைக்குக் குறைத்து, அறிக்கை வெளியிட்டது. கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில், இன்னும் அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு தெளிவு வராதது, உள்நாட்டு உற்பத்தி சதவீதம் எதிர்பார்த்த அளவு உயராதது, அமெரிக்க அரசின் நிதிக் கொள்கை பலவீனமாகி விட்டது, ஆகியவை தான் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என, அந்நிறுவனம் கூறியது. அதேநேரம், குறுகிய கால கடன் பத்திரங்கள் மீதான, "ஏ1+' என்ற மதிப்பீட்டை, அப்படியே பராமரிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

எஸ் அண்டு பி கணக்கில் ஓட்டை?: அந்நிறுவனத்தின் அறிக்கையில், "அரசின் மானியச் செலவு மட்டும், 2 டிரில்லியன் டாலர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிதியமைச்சக அதிகாரிகள், அது மிகவும் அதிகமான தொகை என, தெரிவித்தனர். அந்நிறுவனத்தின் அறிக்கை வெளியான உடன், அமெரிக்க நிதியமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில்,"எஸ் அண்டு பி நிறுவனத்தின் கணக்கு அறிக்கையில், 2 டிரில்லியன் டாலர் கணக்கு இடறுகிறது' என்றார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், "இத்தவறு நிதியமைச்சகத்தால் சுட்டிக் காட்டப்பட்ட பின், அதைத் திருத்தி வெளியிடுவதற்கு, பல மணிநேரங்களை "எஸ் அண்டு பி' நிறுவனம் எடுத்துக் கொண்டது. அதனால், அதன் அறிக்கை வெளிவரத் தாமதமானது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு: எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர், ஒபாமாவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அதிகச் செலவு ஆகியவற்றைக் காட்டி, இப்பிரச்னைக்கு ஒபாமா தான் முழு முதற்காரணம் என, குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் சார்பில், அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவரான, மிட் ரோம்னி இதுகுறித்துக் கூறுகையில்,"ஒபாமாவின் தலைமை, தோல்வி அடைந்து விட்டது. அவரது தவறான பொருளாதாரக் கொள்கைகள், அதிக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற விளைவுகளோடு, தற்போது கடன் மதிப்பீட்டையும் குறைத்து விட்டது. இன்று அவர், "நிலைமை சீராகும்' எனச் சொல்கிறார். ஆனால், வெள்ளை மாளிகையில், புதிய தலைமை வந்தால் தான், நிலைமை சீராகும்' என தெரிவித்தார்.

புதிய கரன்சி உருவாக்க சீனா அழைப்பு: அமெரிக்க நிதியமைச்சகத்தின் கடன் பத்திரங்களை, 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு வாங்கி வைத்துள்ள சீனா, தற்போது விற்க முடியாமல் தவிக்கிறது. கடன் நெருக்கடி பிரச்னை, அமெரிக்க கட்சிகளிடையே தீர்வு காணப்படாமல், இழுத்தடிக்கப்பட்ட போதே, சீனா நிம்மதி இழந்தது. இப்போது அதன் நிம்மதியை, "எஸ் அண்டு பி' நிறுவனத்தின் முடிவு, மேலும் குலைத்து விட்டது. சீனா தனது தவிப்பை, கடும் கோபம் மற்றும் எரிச்சலாக, அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "ஷின்ஹுவா' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின், மிகப் பெரிய கடன் பத்திரதாரர் என்ற முறையில், அந்நாடு தனது கடன் பிரச்னையைத் தீர்க்க வேண்டும், சீனாவிடம் உள்ள, அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களின் மதிப்பை உறுதி செய்ய வேண்டும் என, அமெரிக்காவிடம் வலியுறுத்த, சீனாவுக்கு முழு உரிமை உண்டு. அமெரிக்கா, தனது கடனுக்கு அடிமையாகும் நோயில் இருந்து, உடனடியாக விடுபட, கொஞ்சம் பொது அறிவைப் பயன்படுத்தி, ராணுவம் மற்றும் சமூக நலச் செலவுகளைக் குறைக்க வேண்டும். இதற்கு மேலும், அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறையுமானால், அது உலகப் பொருளாதார மீட்சியை மந்தப்படுத்தும். அதோடு, மீண்டும் மற்றொரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். அமெரிக்க டாலரால் தான், இந்த மோசமான விளைவு ஏற்பட்டுள்ளது. அதனால், புதிய, உறுதியான, பாதுகாப்பான உலகளாவிய கரன்சி ஒன்றை, உருவாக்க வேண்டும். அதுதான், எந்த ஒரு தனி நாட்டினாலும், ஏற்படக் கூடிய மோசமான நிலையைத் தவிர்க்கும் ஒரே வழி. தனது செலவுகளுக்காக, எந்நேரம் வேண்டுமானாலும், கடன் வாங்கலாம் என்ற அந்தப் பொற்காலம் மலையேறிவிட்டது, என்ற கசப்பான உண்மையை இப்போதாவது, அமெரிக்கா உணர வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய கரன்சி அறிவிப்பை, வரவேற்றுள்ள பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர் சீசர் வி.புரிசிமா,"அமெரிக்கா தனது அடிப்படைப் பொருளாதாரப் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

நடக்குமா ஜி 7 மாநாடு? : இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, உடனடியாக ஜி 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி, யூரோ பயன்படுத்தும் நாடுகளின் கடன் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கூறியுள்ளார். ஆனால், ஜி 7 கூட்டமைப்பில் உள்ள, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இதுபற்றி எதுவும் கூறவில்லை. அதனால், எப்போது கூட்டம் நடக்கும் என்பது, உறுதியாகத் தெரியவில்லை.

என்ன நடக்கும்? : ""எஸ் அண்டு பி'யின் இந்த முடிவு, அமெரிக்க கடன் பத்திரங்களின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும். பத்திரங்களின் மீதான வட்டி அதிகரிக்கும். அதற்கான பணத்தைச் செலுத்த முடியாத நிலை, அமெரிக்க அரசுக்கு ஏற்படும். அதனால், உலகளாவிய நிலையில், டாலர் மீதான மதிப்பு சரியும்.
இதன் தொடர்விளைவுகள், கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இதனால், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது, என்பதைத் தள்ளி விடவும் முடியாது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாளை துவங்க உள்ள, உலகின் முக்கியப் பங்குச் சந்தைகளில், அமெரிக்க கடன் மதிப்பீட்டு குறைப்பின் விளைவு தெரியவரும்.

பாதிக்கப்படுமா இந்தியா? : அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,"இது மிகவும் அபாயகரமான நிலைதான். இது குறித்து, ஆராய்ந்து வருகிறோம். அதனால், இப்பிரச்னை குறித்து, இப்போது எதுவும் சொல்ல முடியாது. வெளியுலகப் பொருளாதாரத்தில் ஏற்படும், ஆபத்தான நிலைமையைச் சமாளிக்கும் திறன், நமது பங்குச் சந்தைகளுக்கு இருக்கிறது' என்றார். "செபி' வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இந்தியப் பங்குச் சந்தையில், எல்லாம் நல்லவிதமாகத் தான் உள்ளது. மக்கள் இதுகுறித்து, கவலை கொள்ள வேண்டியதில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறுகையில்,"இப்பிரச்னையால் இந்தியா பாதிக்கப்படாது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 8.2 என்பதாகவே இருக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-201110:54:33 IST Report Abuse
அறிவியல் விரும்பி "இந்தியப் பங்குச் சந்தையில், எல்லாம் நல்லவிதமாகத் தான் உள்ளது." ஆகையால் இந்தியாவில் எரிபொருள் விலையையும், ரியல் எஸ்டேட் விலையையும், உணவுப் பொருட்களின் விலையையும் ஏற்றிக் கொண்டே போகலாம், தப்பில்லை. சம்பளம் உயர்ந்தால் அணைத்து விலைகளும் உயரும். மறந்தும் கூட உயர்ந்த சம்பள பணத்தை நாட்டிற்காக செலவளித்துவிடக்க கூடாது; அதனை ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சம்பளம் உயர்ந்தால் மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துவிடும் அல்லவா? ஹும்.. கையாலாகாத அரசு, கையாலாகாத அமைச்சர்கள், கையாலாகாத அரசு அதிகாரிகள், நரித்தன அரசியல்வாதிகள் இவை தான் நமது ஜனநாயக இந்தியாவின் சாபக்கேடு.
Rate this:
Cancel
Siddiq - Doha,கத்தார்
07-ஆக-201108:45:20 IST Report Abuse
Siddiq தன் வீனை தன்னை சுடும்....
Rate this:
Cancel
chanakkiyan - chennai,இந்தியா
07-ஆக-201106:28:02 IST Report Abuse
chanakkiyan நல்ல தெளிவான கட்டுரை. நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X