அனைத்து கட்சி கூட்டம்: பார்லி.,யில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்| Dinamalar

அனைத்து கட்சி கூட்டம்: பார்லி.,யில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.,29) துவங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், விலைவாசி மற்றும் வேலைவாய்ப்பின்மை விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சில மாநிலங்களில்
parliment, Allparty, Meet, Opposition,

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.,29) துவங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், விலைவாசி மற்றும் வேலைவாய்ப்பின்மை விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சில மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.


latest tamil newsகுறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த சட்டம் மற்றும் லாபமீட்டும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விலக்கி கொள்வது குறித்த விவகாரங்களை திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய் மற்றும் டெரீக் ஓ பிரையன் எழுப்பினர்.


latest tamil newsகுறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க அனுமதி தரப்படவில்லை எனக்கூறி ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, தி.மு.க.,வின் திருச்சி சிவா, டிஆர்பாலு, தேசியவாத காங்கிரசின் சரத்பவார், சிவசேனாவின் விநாயக்ராவத், சமாஜ்வாதியின் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதிஷ் மிஸ்ரா, பிஜூ ஜனதா தளத்தில் பிரசன்னா ஆச்சார்யா, தேசியமாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் டிச.,23 வரை நடைபெற உள்ளது.


latest tamil news


இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: இன்றைய கூட்டத்தில் 31 கட்சிகளின் சார்பில் 42 பேர் கலந்து கொண்டனர். சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் அனுமதி அளிக்கும் எந்த விஷயம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார்.


latest tamil news


மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், இன்றைய கூட்டத்தில் பண வீக்கம், கோவிட், எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்த பிரதமர், விவசாயிகள் குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை எனக்கூறினார். இதனால், எதிர்காலத்தில் வேளாண் சட்டங்கள் திரும்ப கொண்டு வரப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X