இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ரூ 1 கோடி கஞ்சா கடத்திய 5 பேர் கைது

Updated : நவ 30, 2021 | Added : நவ 29, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்விமான பயணி வெளியேற்றம்புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுஹாத்தியில் இருந்து, சமீபத்தில் 'ஸ்பைஸ்ஜெட்' பயணியர் விமானம் டில்லி புறப்பட்டது. அப்போது ஆண் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். 'அவருடன் பயணிக்க முடியாது' என, சக பயணியர் கூறியதால் விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரச்னை செய்தவர் இறக்கப்பட்டு சி.ஐ.எஸ்.எப்.,
இன்றைய கிரைம்,ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்

விமான பயணி வெளியேற்றம்

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுஹாத்தியில் இருந்து, சமீபத்தில் 'ஸ்பைஸ்ஜெட்' பயணியர் விமானம் டில்லி புறப்பட்டது. அப்போது ஆண் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். 'அவருடன் பயணிக்க முடியாது' என, சக பயணியர் கூறியதால் விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரச்னை செய்தவர் இறக்கப்பட்டு சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின் மீண்டும் விமானம் புறப்பட்டுச் சென்றது.

வேன் மீது லாரி மோதல் 18 பேர் பலியான பரிதாபம்

கோல்கட்டா-மேற்கு வங்கத்தில் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் சென்ற வேன் மீது, லாரி மோதியதில், ஆறு பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் ஹன்ஸ் காலி என்ற பகுதியைச் சேர்ந்த பெண், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் சென்ற ஒரு வேனில் 35 பேருக்கும் அதிகமானோர் இருந்தனர். எதிரில் வந்த, கருங்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. அதே இடத்தில் 12 பேர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆறு பேர் இறந்தனர். இறந்தவர்களில் ஆறு பேர் பெண்கள். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் 18 பேர் உயிரிழந்தது, அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துஉள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கப்படும் என, மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அழகிகள் பலியான வழக்கில் திருப்பம் 'ஆடி' காரில் பின்தொடர்ந்தவர் கைது

கொச்சி-கேரளாவில், 2019 அழகி போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த 'மாடல்' அழகிகள் கொச்சியில் நடந்த கார் விபத்தில் பலியாயினர். விபத்தின்போது, அவர்களை 'ஆடி' காரில் பின்தொடர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் கொச்சியில் உள்ள ஓட்டலில் கடந்த மாதம் 31ம் தேதி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. விருந்தில் பங்கேற்புஇதில் 2019ல் கேரள அழகியாக தேர்வான அன்ஷி கபீர் மற்றும் 2ம் இடம் பிடித்த அஞ்சனா ஷாஜன் ஆகிய 'மாடல்' கள் பங்கேற்றனர்.விருந்து முடிந்தும் வீட்டிற்கு காரில் சென்றனர். அப்போது கார் கவிழ்ந்து இருவரும் பலியாகினர். முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க திரும்பியபோது, கார் கவிழ்ந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதற்கிடையே விபத்திற்கு முன், அந்த இரு பெண்களின் காரை சந்தேகப்படும் வகையில் ஒரு 'ஆடி' கார் பின்தொடர்ந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரணையை நடத்தினர்.

இதில், விருந்து நடந்த ஓட்டல் கேமராவில் பதிவான காட்சிகள் விபத்திற்கு பின் அழிக்கப்பட்டது தெரியவந்தது.அதற்கு காரணமான ஓட்டல் அதிபர் ராய் வயலட் கைதானார். பெண்களை காரில் பின்தொடர்ந்தவர் சைஜு தங்கச்சன் என தெரியவந்தது.விருந்தில் பங்கேற்ற இவர், அந்த இளம் பெண்கள் இருவருக்கும் போதைப்பொருட்களை வழங்கிஉள்ளார். அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.'சம்மன்'பின் தங்கச்சன், அவர்களை காரில் பின் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அவருக்கு 'சம்மன்' அனுப்பி நேரில் அழைத்து விசாரித்தனர்.முடிவில், தவறான நோக்கில் பெண்களை பின் தொடர்தல் மற்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், சைஜு தங்கச்சனை கைது செய்தனர்.


latest tamil newsதமிழக நிகழ்வுகள்

வாகனங்களை சிறைபிடித்த மக்கள்

பல்லடம்:குட்டையில் மண் எடுத்ததால் ஆவேசமடைந்த மக்கள், லாரிகள், பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தனர். 'ஒப்பந்ததாரர் குட்டையை துார் வாரி தர வேண்டும்' என்று ஒப்பந்ததாரருக்கு நிபந்தனை விதித்தபின், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

பல்லடம், பொள்ளாச்சி ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக, சின்ன வடுகபாளையம் குட்டையில் இருந்து மண் எடுக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குட்டையில் இருந்து மண் எடுக்கக்கூடாது என்று கூறி, பொதுமக்கள் ஒப்பந்த வாகனங்களை சிறைபிடித்தனர். இதையடுத்து, லாரிகளில் இருந்த மண் மீண்டும் குட்டையில் கொட்டப்பட்டது.நேற்று காலை மீண்டும் மண் அள்ளும் பணி நடந்து வந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஐந்து லாரிகள் மற்றும் இரண்டு பொக்லைன் வாகனங்களை சிறை பிடித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே கொட்டிய மண்ணைத்தான் எடுக்கிறோம் என்று கூறி, ரோடு விரிவாக்கப் பணி முடிந்தும், மண் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு நுாற்றுக்கணக்கான யூனிட் மண் கடத்தப்பட்டுள்ளது. ரோட்டோர உபரி மண்ணை மட்டுமே பயன்படுத்த ஆர்.டி.ஓ., அனுமதி வழங்கி உள்ளார்.

ஆனால், அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி, குட்டையில் இருந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறையினர் கூறுவதற்கும், ஒப்பந்ததாரர் கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே, குட்டையால் இருந்து மண் கடத்தியதற்காக ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிய வேண்டும். ஆர்.டி.ஓ., வந்தாலும் வாகனங்களை விடமாட்டோம்' என்றனர்.தகவல் அறிந்து வந்த தாசில்தார் தேவராஜ், பொதுமக்களிடம் விசாரித்தார். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.இதுவரை குட்டையில் மண் எடுத்ததற்கு தண்டனையாக, குட்டையை துார்வாரி தரவேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.ஒப்பந்ததாரும் இதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இச்சம்பவத்தால், பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

போன் திருடியவர் கைது

திருப்பூர்:திருப்பூர் --- பல்லடம் ரோடு புதுத்தோட்டம் மெயின் வீதியை சேர்ந்தவர் அறிவழகன், 27; மளிகை பொருட்களை மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த 22ம் தேதி, கடையில் இருந்த பாமாயிலை ஏற்றி கொண்டு, பாண்டியன் நகரில் உள்ள மளிகை கடை முன்பு இறக்கி கொண்டிருந்தார். அறிவழகன் தனது மொபைல் போனை, நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மீது வைத்திருந்தார். வேலையை முடித்து விட்டு பார்க்கும் போது, மொபைல் போன் மாயமானது.திருமுருகன்பூண்டி போலீசார், இதுதொடர்பாக பெருமாநல்லுாரை சேர்ந்த துரை கண்ணன், 30 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இரு குழந்தைகளையும் கொன்று தாயும் தற்கொலை

விருதுநகர்-கணவருடன் ஏற்பட்ட தகராறில், இரு குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாயும், தற்கொலை செய்து கொண்டார்.விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார், 31; டிரைவர். மனைவி லெட்சுமி பிரியா, 28. தர்ஷினி பிரியா, 9; சிவ சண்முகவேல், 5 என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.சிவகுமாருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாகவும், லெட்சுமி பிரியா வேறு நபருடன் பழகியதாகவும் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று காலையும் சிவகுமார் தகராறு செய்துள்ளார். இதனால், மனமுடைந்த லெட்சுமி பிரியா, இரண்டு குழந்தைகளுக்கும் எறும்பு மருந்து கொடுத்து, அவர்களை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீசிக் கொன்று, தானும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


latest tamil news


ரூ 1 கோடி கஞ்சா கடத்திய 5 பேர் கைது

நாமக்கல்-நாமக்கல்லில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக, எஸ்.பி., சரோஜ்குமார் தாகூருக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் போலீசார், நேற்று காலை 5:00 மணிக்கு திருச்செங்கோடு - நாமக்கல் சாலை, எர்ணாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு பகுதியில் இருந்து வந்த, 'பொலீரோ பிக்கப்' வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 280 கிலோ கஞ்சா இருந்தது.

அதில் வந்த மணிகண்டன், 41; விஜயவீரன், 30; ராணி, 32 ஆகியோரை கைது செய்தனர்.வரும் வழியில் இரண்டு பேரிடம் கஞ்சா விற்பனைக்கு கொடுத்ததை அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தி, 39, ராஜு, 61, ஆகியோரை கைது செய்து, 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மொத்தம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 340 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன், கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்படுவது தெரியவந்துள்ளது. அவரை தேடி வருகின்றனர்.

டூ விலர்கள் மோதிய விபத்தில் இருவர் பலி

சிக்கல் : டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.வாலிநோக்கம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம்ஷா 42. இவரும், வருசை இப்ராகிம்ஷாவும் 45 சேர்ந்து கொத்தனார் வேலை முடிந்து முந்தல் வழியாக வாலிநோக்கம் திரும்பினர்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வாலிநோக்கத்திலிருந்து முந்தல்செல்லும் மன்னார் வளைகுடா கடற்கரைச் சாலையில் கீழமுந்தல் மீனவர் காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 25, என்பவரின் டூவீலர் இவர்கள்மீது மோதிய விபத்தில்வாலிநோக்கம் இப்ராகிம்ஷா உயிரிழந்தார்.வருசை இப்ராகிம்ஷா காயமடைந்தார். பன்னீர்செல்வம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.வாலிநோக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X