புதுக்கோட்டை: புதுக்கோட்டையின் பல இடங்களில் ஆடு திருடிய கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து, 41 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், வடகாடு, கறம்பக்குடி, அரிமளம், திருமயம் உட்பட இதர பகுதியில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் ஆடு திருடு போகும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தது. ஆடும் திருடும் கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். கடந்த வாரம் ஆடு திருடும் கும்பலால் திருச்சியைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆடு திருடும் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கறம்பக்குடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் இரண்டு ஆடுகளை கொண்டு சென்ற, கந்தர்வக்கோட்டை அருகே நெப்பகை பகுதியைச் சேர்ந்த அழகப்பன், 54, மற்றும் வேளாங்கண்ணியைச் சேர்ந்த சதீஷ்குமார், 21, ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அப்பகுதிகளில் ஆடுகளை திருடி சென்று விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, 2 ஆடுகளையும், அவர்கள் வந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் ஆடுகளை திருடி விற்பனைக்காக, நெப்புகை பகுதியில் பதுக்கி வைத்திருந்த, 30 ஆடுகளையும் பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருமயம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், அவ்வழியாக பைக்கில் ஒரு ஆட்டை கொண்டு சென்ற கந்தர்வகோட்டை வேளாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சூரியமூர்த்தி, 47, என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆடு திருடியதை சூரியமூர்த்தி ஒப்புக் கொண்டார். திருமயம் போலீசார் சூரியமூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்து, 9 ஆடுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE