நாட்டிலேயே பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆனது எப்படி என கூறுகிறார் பிராஞ்சல் பாடில்: மஹாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தின் உஸ்ஹாஸ் நகர் தான் சொந்த ஊர். 6 வயதில் பார்க்கும் திறனை முழுவதுமாக இழந்தேன். ஆரம்பக் கல்வியை தாதரில் உள்ள கமலா மேத்தா பார்வையற்றோர் பள்ளியில் துவங்கினேன். முதுகலைப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பாக, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றேன்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, எந்த ஒரு பயிற்சி நிறுவனத்துக்கும் செல்லவில்லை. தேர்வெழுத நானே பயிற்சிகளை மேற்கொண்டேன்.
புத்தகங்களை வாசித்துக் காட்டக்கூடிய ஒரு மென்பொருள் உதவி வாயிலாக தேர்வுக்கு தயாரானேன். மாதிரி ஐ.ஏ.எஸ்., கேள்வித்தாள்களுக்கு விடை அளிப்பது, குழுக் கலந்துரையாடல்களில் பங்கு பெறுவது என, முழுமையாக தயார்படுத்திக் கொண்டேன்.கடந்த 2016ல் யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் முதன் முறையாக வென்றபோது, இந்திய ரயில்வே துறையின் கணக்குகள் பிரிவில் எனக்கு பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், நான் 100 சதவீத பார்வையற்றவராக இருந்ததால், ரயில்வே நிர்வாகம் பணியமர்த்த மறுத்து விட்டது. இதனால் சோர்ந்து போய்விடவில்லை. மீண்டும் கடுமையாக முயற்சித்ததில், கேரளா பிரிவு ஐ.ஏ.எஸ்., பதவி ஒதுக்கீடானது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றேன்.கடந்த, 2020ல் டில்லியில் அருணாசலபிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும் பதவியில் அமர்த்தப்பட்டேன்.என் பிறந்த நாளன்று, நாட்டில் தலைநகரத்தில் பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சி. இது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது. என் லட்சியம் நிறைவேறுவதற்கு எல்லா விதத்திலும் உதவிகரமாக பெற்றோர் இருந்தனர். என் தந்தை எல்.பி.பாடில், ஆல் இண்டியா ரேடியோ மற்றும் துார்தர்ஷனில் உதவிப் பொறியாளராக பணியாற்றினார்.என் மீ
து பிறரின் அனுதாபப் பார்வைகள் விழுவதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. இயன்ற வரை என் வேலைகளை நானே செய்யும் ஆற்றல் எனக்கு உண்டு. தாமாக எவர் துணையும் இன்றி, வீட்டில் இருந்து ஆட்டோ ஸ்டாண்ட் வரை செல்வேன். தற்போது விமானத்தில் தனியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு தனியே சென்று வருகிறேன்.மக்களுக்கு நன்மை செய்வதன் வாயிலாகவே, அவர்களின் மனதில் ஒருவரால் இடம்பிடிக்க முடியும். நம் பணி மற்றும் அர்ப்பணிப்பின் வாயிலாக மக்கள் உத்வேகம் பெறுவர். கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!