டிரான்ஸ்பர் உத்தரவிலும் துட்டுதான் அடிக்கிறாங்க... டி.ஜி.பி., உத்தரவையே தூக்கிப்போட்டு நடிக்கிறாங்க!| Dinamalar

டிரான்ஸ்பர் உத்தரவிலும் துட்டுதான் அடிக்கிறாங்க... டி.ஜி.பி., உத்தரவையே தூக்கிப்போட்டு நடிக்கிறாங்க!

Updated : நவ 30, 2021 | Added : நவ 29, 2021 | |
காலிங்பெல் சத்தம் கேட்டு சித்ரா கதவை திறக்க, எதிர்பார்த்தபடியே மித்ரா வந்திருந்தாள்.''ஹாய், மித்து. என்ன சர்ப்ரைஸ் விசிட்?''''பக்கத்து வீட்டு ஆன்ட்டி, செகண்ட் டோஸ் தடுப்பூசி போடணும்னு சொன்னாங்க... அதான் விசாரிக்க வந்தேன்...''''செகண்ட் டோஸ் போடறதுக்கு பலரும் தயக்கம் காட்டு றாங்க. புதுசா, புதுசா வைரஸ் வருது. ஜாக்கிரதையா இருக்கணும்,'' என்ற சித்ரா, ''உட்கார்,''
 டிரான்ஸ்பர் உத்தரவிலும் துட்டுதான் அடிக்கிறாங்க...  டி.ஜி.பி., உத்தரவையே தூக்கிப்போட்டு நடிக்கிறாங்க!

காலிங்பெல் சத்தம் கேட்டு சித்ரா கதவை திறக்க, எதிர்பார்த்தபடியே மித்ரா வந்திருந்தாள்.''ஹாய், மித்து. என்ன சர்ப்ரைஸ் விசிட்?''

''பக்கத்து வீட்டு ஆன்ட்டி, செகண்ட் டோஸ் தடுப்பூசி போடணும்னு சொன்னாங்க... அதான் விசாரிக்க வந்தேன்...''

''செகண்ட் டோஸ் போடறதுக்கு பலரும் தயக்கம் காட்டு றாங்க. புதுசா, புதுசா வைரஸ் வருது. ஜாக்கிரதையா இருக்கணும்,'' என்ற சித்ரா, ''உட்கார்,'' என சோபாவை காட்டினாள்.

''சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிற 'டெக்னிக்'கை, 'டிரான்ஸ்பர்' விஷயத்துலேயும் அதிகாரிங்க கடைபிடிக்கிறாங்க,'' என, புதிர் போட்டபடி, சோபாவில் சாய்ந்தாள் மித்ரா.

''ஏதோ, பெரிசா சொல்ல வர்ற போல,''

''ஊரக வளர்ச்சித்துறைல, 'டிரான்ஸ்பர்' பட்டியல் தயாரிக்கும் போதே, 40 கி.மீ., துாரத்தை தாண்டி இருக்கற ஊருக்கு, 'டிரான்ஸ்பர்' போட்டுடுறாங்க. அவ்வளவு துாரம் போய் வேல பார்க்க விருப்பம் இல்லாத ஆபீசர்ஸ், வளர்ச்சித்துறை ஆபீசர்கிட்ட போய், வேற இடத்துக்கு மாத்திக் கொடுங்கன்னு, மேல் முறையீடு பண்றாங்க,''

''அதோட சேர்த்து, கணிசமா ஒரு தொகையையும் அன்பளிப்பாக குடுத்துடறாங்களாம். இந்த 'கவனிப்பு' முடிஞ்சதும், விரும்புற இடத்துக்கு, 'டிரான்ஸ்பர் ஆர்டர்' தர்றாங்களாம்,'' என, விளக்கினாள் மித்ரா.

''கவனிப்பு'க்காக தான், துாரமா 'டிரான்ஸ்பர்' போடறாங்களோ, என்னமோ'' என்ற சித்ரா, 'குட்டையை குழப்பி, காசு பார்க்கற ஆபீர்களை தெரியுமோ?'' தொடர்ந்தாள் சித்ரா.குழம்பிய குட்டைக்குள் காசு!''தெரியாது, நீங்களே சொல்லுங்க!''

''பல்லடம் பக்கத்துல இருக்க, சின்ன வடுகபாளையம் குட்டையில இருந்து ஹைவேஸ் அனுமதியோட மண் அள்றாங்களாம். இத கண்டிச்சு, மண் எடுக்க வந்த வண்டியை, ரெண்டு மூணு தடவை மக்கள் சிறைப்பிடிச்சிட்டாங்க...''

''ஹைவேஸ் ஆபீசர்ங்ககிட்ட கேட்டா, ரோட்டோரம் இருக்க குழியை நிரப்பத்தான் அந்த மண்ணை பயன்படுத்த சொல்லியிருக்கோம்னு சொல்றாங்களாம். கான்ட்ராக்டர் கிட்ட கேட்டா, பக்கத்து கிராமத்துல, ஒரு வேலைக்காக மண் எடுத்துட்டு போறோம்னு சொல்றாங்களாம். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசறதால, மக்கள் குழம்பிட்டாங்களாம்,'' என, விளக்கினாள் சித்ரா.

''குட்டைய குழப்பி, மீன் புடிக்கிறதில, ஆபீசர்ஸ் கெட்டிக்காரங்களாச்சே...'' என சிரித்த மித்ரா, ''அதே ஊர்ல, இன்னொரு விஷயத்தையும் பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க்கா...''

''என்ன மேட்டர்?'' என்றவாறு டீ, ஸ்னாக்ஸ் கொண்டு வந்தாள்.வேலியே பயிரை மேயலாமா?


அதனை சாப்பிட்டவாறு, ''கருவூலத்துல திருடுறதுக்காக வந்த பூபாலன், செந்தில்குமார்ன்னு, ரெண்டு பேரை போலீஸ் பிடிச்சு, 'அரெஸ்ட்' பண்ணாங்கல்ல. அதுல ஒருத்தரோட அண்ணன், மங்கலம் ஸ்டேஷன்ல வேல பாக்குற போலீஸ்காரராம். தன்னோட தம்பி 'அரெஸ்ட்'ன்னு தெரிஞ்சும், எஸ்கேப் ஆகிட்டாரு..''

''அவரு ஏற்கனவே, இதேசப்-டிவிஷன்ல இருக்க, வேற ஒரு ஸ்டேஷன்ல 'கோர்ட் ட்யூட்டி' பார்த்துகிட்டு இருந்திருக்காரு. அதுமட்டுமில்லாம, ரெண்டு வருஷசத்துக்கு முன்னாடி, ஒரு பேங்க்ல கொள்ளை போன நகையை, இந்த கருவூலத்துல தான் வைச்சிருக்காங்க,''

''ஒரு வேல அந்த நகையை ஆட்டய போடத்தான் தன் தம்பிக்கு 'பிளான்' போட்டு கொடுத்தாரா? இல்லை, ஏற்கனவே, தான் வேல பார்த்த ஸ்டேஷன்கள்ல, ஏதாவது வழக்கு சம்பந்தமான கோர்ட் டாக்கு மென்ட்ஸை முயற்சி பண்ணாரான்னு, மாதிரி பேசிக்கிறாங்க,''

''எஸ்கேப்' ஆன போலீஸ்காரரு, ஊட்டியில தான், பதுங்கியிருக்கிறதா சொல்றாங்க. இந்த விஷயமா, போலீஸ்காரங்க எந்த தகவலையும் கசியமா கவனமா பாத்துக்கறாங்க...'' என்றாள் மித்ரா.'நிழல்' அதிகாரியே பிரதானம்!''ஒரு பெரிய போலீஸ் ஆபீசர்க்கு, 'நிழல்' அதிகாரி மாதிரி ஒருத்தர் செயல்படறாராம்,'' என, அடுத்த போலீஸ் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''அப்படியா… இது எங்கடி மித்து,'' என்றாள் சித்ரா.

''காங்கயத்தில் பெரிய போலீஸ் ஆபீசர்கிட்ட, ஏதாவது காரியம் நடக்கணும்னா, அந்த ஊர்ல இருக்க ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரை பார்த்து பேசிட்டு தான் போகணுமாம். அவரு கண்ணைசைத்தால் தான், பெரிய ஆபீசர் செஞ்சு கொடுப்பாராம்...'' என்றாள் மித்ரா.

அப்போது, சித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''ஹலோ…நான் அப்பு பேசறேன்; அங்க குமரேசன்னு யாராவது இருக்காங்களா'' என, எதிர்முனையில் அழைத்தவர் கேட்க, 'சாரி... ராங் நம்பர்' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.எடைக்கு நிகராக லஞ்சம்


''இதைவிட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்றேன் கேளு'' என்ற சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கம் இருக்க ஆலாம்பாளையத்துல, தனியா இருந்த மூதாட்டியை கீழேதள்ளி, அவர்கிட்ட, அஞ்சரை பவுன் நகையை, ஒருத்தன் திருடிட்டு போயிட்டான்,''

''கிரைம் பிரிவு போலீஸ், திருடனை பிடிச்சு, நகையையும் பறிமுதல் பண்ணி, உரிமையாளர்கிட்ட கொடுத்துட்டாங்க. இதுக்கு அன்பளிப்பா, ஒரு சவரன் நகைக்கு இப்ப என்ன விலையோ, அந்த தொகையை வசூல் பண்ணிட்டாங்களாம்...'' என, விளக்கினாள்.

''என்ன கொடுமைங்க இது. பகல் கொள்ளையால்ல இருக்கு,'' ஆவேசப்பட்டாள் மித்ரா.

''எதுவும் சரியில்ல மித்து. 'சிட்டி' போலீஸ்ல, வேலை செய்ற போலீஸ்காரங்களுக்கு வார லீவு கொடுக்கணும்ன்னு, பெரிய ஆபீசர் சொல்லியும், சும்மா கணக்கு மட்டும் காண்பிச்சுட்டு இருக்காங்களாம். லீவு தர்றது இல்லையாம். இதை தெரிஞ்ச ஆபீசர், சரியான முறையில லீவு தரல்லைன்னா, ஸ்டேஷன் ஆபீசர் மேல நடவடிக்கை எடுப்பேன்னு, 'மைக்'லேயே சொல்லிட்டாங்களாம்,'' என நிலைமையை விளக்கினாள் சித்ரா.தோழர்களின் அதிரடி 'மூவ்'''கொங்கு மண்டலத்துல கட்சியோட செல்வாக்கை வளர்க்க சி.எம்., முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். அவர் திருப்பூர் வந்துட்டு போனது கூட, கட்சியை வளர்க்கத்தான்னு பேசிக்கிறாங்க. ஆனா, கட்சியோட பேரை கெடுக்கிற மாதிரி, சிலரு நடந்துக்கிறாங்க. அதுவும், மேயர், கவுன்சிலர் கனவுல மிதக்கிறவங்க கூட, இப்படிதான் பண்றாங்க.

''போன வாரம், சிக்கண்ணா காலேஜில் நடந்த விழாவில், சி.எம்., கலந்துட்டார். அவரோட வண்டி, மேடைக்கு பக்கத்துல போறதுக்காக, கல்லுாரி பின்னாடி இருக்கிற சுவரை இடிச்சு வழி பண்ணாங்க. சி.எம்., கார் போனதுக்கு அப்புறம், வேற வண்டியையும் போலீஸ்காரங்க அனுமதிக்கல,''

''ஆனா, கட்சியோட முக்கியப்புள்ளி ஒருத்தரு, அந்த வழியாத்தான் போவேன்னு சொல்லி, பெரிய ஆபீசர்ன்னும் கூட பார்க் காம, கடுமையா வாக்குவாதம் பண்ணியிருக்கார். இந்த விஷயத்தை தலைமையோட கவனத்துக்கு கொண்டு போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''நெறைய எடத்தில, இப்படித்தான் கெட்ட பேரு வாங்கிக்கிறாங்க,'' என மித்ரா அங்கலாய்க்க, அவளின் மொபைல் போன் சிணுங்கியது. ''யாருங்க. நாகராஜ் அண்ணாவா, நல்லா இருக்கீங்களா'' என, ஒரு நிமிடம் பேசி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.

டீயை உறிஞ்சியபடியே, ''ஆளுங்கட்சியோட 'அட்ராசிட்டி'யை சாதகமாக்கி, தோழர்கள் நல்லாவே குளிர் காயறாங்க போல,'' என்ற சித்ரா,'' சி.எம்., பங்ஷனில், பேசின எம்.பி., 'தீரன் சின்னமலை கல்லுாரி அமைக்க நிலத்தை வகை மாற்றம் செய்ய 'பேரம்' படியாததால தான் முந்தைய அரசு அனுமதி கொடுக்கல; ஆனா, பத்தே நாளில், இப்போதய அரசு அனுமதி கொடுத்துடுச்சுன்னு' பேசி முதல்வரை 'ஐஸ்' வச்சு, 'நடுங்க' வச்சிட்டார்,''

''அப்ப, ஆளுங்கட்சியோட 'பேரம்' படிஞ்சுடுச்சானு கேட்டு, 'நெட்டிசன்ஸ்' நையாண்டி செஞ்சாலும், நிலைமை இப்படியே போனா, கார்ப்பரேஷன் எலக்ஷன்ல, மேயர், இல்லைன்னா, துணை மேயர் 'சீட்டை' தோழர்கள் வாங்கிடுவாங்களோன்னு, ஆளுங்கட்சி வட்டாரம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள்.தொடர்பு எல்லைக்கு அப்பால்...


''அக்கா... அதே சி.எம்., பங்ஷனில், செய்தி சேகரிக்க, பி.ஆர்.ஓ., ஆபீஸ் அதிகாரிங்க, எந்த ஏற்பாடும் செஞ்சு கொடுக்கலையாம். அதுமட்டுமில்லாம, மாவட்டத்துல இருக்க ஒவ்வொரு ஏரியாவுல இருந்தும் வர்ற செய்திகளுக்கு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிங்ககிட்ட இருந்து விளக்கம் வாங்கி, தீர்த்து வைக்கணும்ன்னு, கலெக்டர் சொல்லியிருக்காராம்,''

''ஆனாலும், அந்தந்தந்த துறைக்கு அனுப்பாம, அந்தந்த ஊர்ல இருக்க முனிசிபாலிட்டி, டவுன் பஞ்சாயத்துக்கு அனுப்பிடறாங்களாம். மத்த துறை சார்ந்த பிரச்னைக்கு நாங்க எப்படி விளக்கம் தர்றதுன்னு, ஆபீசர்ஸ் புலம்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''சம்பந்தப்பட்ட துறை மினிஸ்டர் இருக்கற ஊர்லயே இப்டி பண்ணா, மத்த பக்கமெல்லாம் எப்படி இருக்குமோ,'' என புலம்பிய சித்ரா, ''மாவட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டத்தை ரகசியமா நடத்தி முடிச்சிடறாங்களாம். தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு மாதிரி 'ரன்' ஆகிட்டு இருக்குன்னு, அங்க இருக்கறவங்களே பேசிக்கிறாங்க,'' என யூனியன் சமாச்சாரத்தையும் கூறினாள்.

டீபாய் மேலிருந்த ஆன்மிக மலர் புத்தகத்தை புரட்டிய மித்ரா, ''அக்கா, பல்லடத்துக்கு பக்கத்துல இருக்கற அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவிலுக்கு போகோணும்னு மம்மி சொல்லிட்டிருந்தாங்க. நல்லவேள இதில ரூட் போட்டிருக்காங்க...'' என்றாள்.

''ஓ... அந்த கோவிலா. அங்க கூட, திருப்பணி சம்பந்தமா ஒரு சர்ச்சை ஓடுச்சு..''

''அது என்னக்கா...''''மித்து. அந்த கோவிலுக்கு அறநிலையத்துறை பணம் ஒதுக்கியதாகவும், அதில குளறுபடி நடந்ததாகவும், செயல் அலுவலருக்கு வேண்டாதவங்க கிளப்பி விட்டுட்டாங்க. மேலதிகாரி விசாரிச்சதில், அப்டி எதுவும் நடக்கலைன்னு, தெரிஞ்சுதாம்,''
''ஓ.கே.,ங்க்கா, அந்தக்கா வந்துடுவாங்க. நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X