மதுரை : மதுரையில், இரவு வாகன சோதனையின்போது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், விவாகரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்கிறார். கடந்த 27ம் தேதி இரவு மகேஷ், அவரது நண்பர் மற்றும் அப்பெண்ணுடன், செல்லுாரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்து திரும்பினார். அதிகாலை 2:30 மணிக்கு டவுன் ஹால் ரோடு பகுதியில் மகேஷ், அப்பெண் உட்பட மூவர் டூ - வீலரில் வந்தனர்.
அவர்களை திலகர் திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன், 41 உட்பட இரண்டு போலீசார் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக மூவரும் பதில் தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சக போலீஸ்காரரை ரயில்வே ஸ்டேஷன் அவுட் போஸ்ட்டிற்கு அனுப்பிவிட்டு முருகன் மட்டும் விசாரித்தார்.
வீட்டிலேயே முடக்கம்
பயந்து போன மகேஷிடம் 11 ஆயிரம் ரூபாயை பறித்தவர், அவரது ஏ.டி.எம்., கார்டு, அலைபேசியையும் பறித்து, அவரையும், நண்பரையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பினார். பின் அப்பெண்ணிடம் 'உன் நடத்தை குறித்து வீட்டில் தெரிவித்து விடுவேன்' என மிரட்டி, அப்பகுதி விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
'இவர் என் உறவினர். கொஞ்சம் 'பிரஷ்' ஆகி செல்ல வேண்டும்' எனக் கூறி விடுதியில் 'ஓசி' அறை எடுத்து, அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். இரு நாட்களாக, அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்றும் அவர் கடைக்கு வராததால், மகேஷ் சென்று விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரியவந்தது. இதற்கிடையே, இரு நாட்களாக மகேஷ் ஏ.டி.எம்., கார்டில் இருந்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது.
சஸ்பெண்ட்
அதிர்ச்சியுற்ற அவர், உடனடியாக அப்பெண்ணுடன் சென்று நேற்று திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவீந்திரநாத் விசாரித்தார். பலாத்கார வழக்கில், முருகனை அனைத்து மகளிர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.பணியின்போது பெண்ணை பலாத்காரம் செய்து, போலீஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய முருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE