அவிநாசி: வியாபாரிகள், விவசாயிகளிடம் வரவேற்பு பெறாததால், அவிநாசியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோன்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
மூன்று ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இங்கு, ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், கடந்த, 2014ல் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்பட்டது.
விவசாய விளை பொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன நிலையமும் அமைக்கப்பட்டது. எடை மேடையும் அமைக்கப்பட்டது. மேலும், மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில், 600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, ஏல கொட்டகை அடைக்கப்பட்டு, கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்த இடம், நகரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருப்பதால், விவசாயிகள், வியாபாரிகள் அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.
மந்தகதியில் பருத்தி ஏலம்எனவே, விற்பனை கூட செயல்பாடுகளை பிரபலப்படுத்தும் நோக்கில், கடந்தாண்டு, பிப்., மாதம் துவங்கி, பிரதி புதன், வியாழன் தோறும், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலமும், செவ்வாய் தோறும் பருத்தி ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
துவக்கத்தில், ஓரளவு விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், நாளடைவில் நீர்த்துப்போனது.இதனால், இங்குள்ள கிடங்கை, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வாடகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களது விளைப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என, விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
எனவே, கிடங்கு, தமிழ்நாடு காகித ஆலையின் கிடங்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதம், 4.50 லட்சம் ரூபாய் வரை வாடகை பெறப்படுகிறது. அதே போன்று, இங்குள்ள இன்னொரு கிடங்கு, பழங்களை ஏற்றுமதி செய்யும் ஒருவருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நகரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருப்பினும், பரந்து, விரிந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பிரபலப்படுத்தும் முயற்சி, எதிர்பார்த்த பலன் தரவில்லை.
பேச்சளவில் நின்று போனது!
அவிநாசி, சீனிவாசபுரத்தில் வேளாண் துறைக்கு சொந்தமான, உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, உயிர் உரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தமாக பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு செல்வதற்கான வாய்ப்பில்லை.
எனவே, அந்த மையத்தை புதுப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கட்டடத்திற்கு மாற்றவும், அவிநாசி சேவூர் ரோட்டில், இட நெருக்கடிக்கு இடையே, அதிகளவு விவசாயிகள் சென்று வரும் வேளாண், தோட்டக்கலைதுறை அலுவலகங்களை உள்ளடக்கிய, வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை, சீனிவாசபுரம் பகுதியில் உள்ள உயிர் உர உற்பத்தி மைய கட்டடத்துக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு, அது பேச்சளவிலேயே நின்று போனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE