மக்களுக்கு கஞ்சா ரவுடிகளால் ஆபத்து: போலீசில் நடக்குது கட்டப்பஞ்சாயத்து| Dinamalar

மக்களுக்கு கஞ்சா ரவுடிகளால் ஆபத்து: போலீசில் நடக்குது கட்டப்பஞ்சாயத்து

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | |
பகலிலேயே குளிரடித்துக்கொண்டிருந்தது. குல்லா, ரெயின்கோட் எல்லாம் எடுத்துக்கொண்டு, வெளியில் கிளம்பலாம் என்று சித்ரா புறப்படும்போது, திடீர் 'என்ட்ரி' கொடுத்தாள் மித்ரா.''ஹாய் மித்து! என்ன இது கேரளா டிரெயின் திடீர்னு 'பி' டிராக்கை விட்டு, 'ஏ' டிராக்ல வந்தது மாதிரி, நான் உன் வீட்டுக்குக் கிளம்பிட்டு இருக்கிறப்போ, நீ இங்க வந்து நிக்கிற...?'' என்று ஆச்சரியமாய்க்
மக்களுக்கு கஞ்சா ரவுடிகளால் ஆபத்து: போலீசில் நடக்குது கட்டப்பஞ்சாயத்து

பகலிலேயே குளிரடித்துக்கொண்டிருந்தது. குல்லா, ரெயின்கோட் எல்லாம் எடுத்துக்கொண்டு, வெளியில் கிளம்பலாம் என்று சித்ரா புறப்படும்போது, திடீர் 'என்ட்ரி' கொடுத்தாள் மித்ரா.

''ஹாய் மித்து! என்ன இது கேரளா டிரெயின் திடீர்னு 'பி' டிராக்கை விட்டு, 'ஏ' டிராக்ல வந்தது மாதிரி, நான் உன் வீட்டுக்குக் கிளம்பிட்டு இருக்கிறப்போ, நீ இங்க வந்து நிக்கிற...?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.

''ஆமாக்கா! பக்கத்துல ஒரு 'பர்ச்சேஸ்'க்காக வந்தேன்...அப்பிடியே இங்க வண்டியை விட்டுட்டேன். நம்ம ரூட் மாறுனா பிரச்னையில்லை. டிரெயின் திடீர்னு டிராக் மாறுனாத்தான் சிக்கல்...இந்த ரயில்வே காரங்க இன்னும் எத்தனை யானையை, குரூரமாக் கொல்லப்போறாங்களோ?'' என்று கோபத்தோடு கேட்டாள் மித்ரா.

''டிரெயின் ஸ்பீடா வந்ததாலதான் யானையை அடிச்சுத் துாக்கிருக்குன்னு உறுதியாத் தெரிஞ்சிருச்சு. ஆனா யாரைக் கேட்டு இன்ஜின்ல இருந்து 'சிப்' எடுத்தீங்கன்னு, பாலக்காட்டுல நம்ம பாரஸ்ட் ஆளுங்க அஞ்சுபேரை பிடிச்சு வச்சிருக்காங்க. விசாரணைக்கு பாரஸ்ட்காரங்க பிடிச்சு வச்சிருந்த இன்ஜின் டிரைவரையும், அசிஸ்டென்ட்டையும் விட்டாதான் விடுவோம்னு மெரட்டி, அரெஸ்ட் பண்ணவிடாமப் பண்ணிருக்காங்க!'' என்றாள் சித்ரா.

''காரணம் என்னன்னா... நம்ம பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல 'ஸ்ட்ராங்' ஆன ஆளுங்க இல்லைக்கா... எனக்கென்னவோ, இந்த கேஸ்ல இவுங்களால உண்மையை நிரூபிச்சு, 'வைல்டுலைப் ஆக்ட்'ல தண்டனை வாங்கித்தருவாங்கன்னு நம்பிக்கை இல்லை!'' என்றாள் மித்ரா.

''பாலக்காட்டுல நம்ம பாரஸ்ட் ஆளுங்களை பிடிச்சதாத் தெரிஞ்சதும், இங்க பாரஸ்ட் ஆளுங்க, சூழல் அமைப்புக்காரங்க கொதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. மறியல், போராட்டம்னு ஸ்டேட் பார்டர்ல கொஞ்சம் பதட்டமாக ஆரம்பிச்சிருச்சு. அப்புறம்தான் பாலக்காட்டுல விட்ருக்காங்க!'' என்றாள் சித்ரா.

''அப்போ...நம்ம ஊரு மக்கள் பிரதிநிதி செஞ்ச காரியத்தைப் பார்த்தியா?'' என்று மித்ரா நிறுத்த, தொடர்ந்தாள் சித்ரா....

''தெரியுமே...யானைகள் உயிரிழப்பு பத்தி விசாரிக்கப் போட்ட கமிட்டி ரிப்போர்ட் என்னாச்சுன்னு, ஆவேசமா அறிக்கையெல்லாம் விட்டாரு...ஆனா, பாரஸ்ட் ஆளுங்களை அங்க பிடிச்சு வச்சதுக்கோ, பாலக்காடு இன்ஜின் டிரைவர் யூனியன் மெரட்டல் விடுத்ததுக்கோ வாயும் திறக்கலை...அறிக்கையும் விடலை...அங்க வடிஞ்சா ரத்தம்...இங்க வடிஞ்சா தக்காளிச்சட்டினியான்னு பாரஸ்ட்காரங்க கொந்தளிக்கிறாங்க!''

''கேரளான்னதும் எனக்குஞாபகத்துக்கு வந்துச்சு...மறுபடியும் கேரளாவுக்கு ரேஷன் அரிசிக் கடத்தல் அதிகமாயிருச்சு. அதுலயும் அன்னுார் ரேஷன் கடைகள்ல இருந்துதான் அதிகமா போகுதாம்!''

''இந்த புட்செல் போலீஸ் என்னதான் பண்றாங்களாம்?''

''அவுங்க என்ன பண்ணுவாங்க...கடத்துறது யாருன்னு கண்டுபிடிச்சு மாமூல் வசூல் பண்ணிட்டு இருக்காங்க!''

''அரிசி கடத்துறதுல அவுங்களுக்கு காசுன்னா, தடாகம் போலீசுக்கு 'சீல்' வச்ச செங்கல் சூளைகள்ல இருந்து செங்கலைக் கடத்துறதுக்கு காசு கொட்டுது. அதுவும் கேரளாவுக்குதான் அதிகமாப் போகுதாம்...!''

''நானும் கேள்விப்பட்டேன்க்கா...அந்த ஸ்டேஷன்ல இருந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் மதுக்கரைக்கு ஒரு போலீஸ்காரரை மாத்திருக்காங்க. அவரு ஒரு ஸ்விப்ட் காரை அவர் பேர்லயே வாங்கிருக்காரு. அதுக்கு 'டியூ' கட்டணும்னு சொல்லியே, நிறையா வண்டி ஓட்டுங்கன்னு சூளைக்காரங்களுக்கு துாபம் போட்ருக்காரு. இப்போ மதுக்கரையில இருந்து பார்டர்ல என்னென்ன கடத்துறாரோ?''

''உண்மைதான் மித்து...பஞ்சாபி மாதிரியும், பாரின்காரர்மாதிரியும் பேருள்ளவர்தான...அவரும் 'ஹைவே பேட்ரால்'ல இருக்குற ஒரு போலீஸ்காரரும்தான், செங்கல் கடத்தலுக்கு ரூட் போட்டுக் கொடுக்குறவுங்க. இவுங்களுக்குக் கூட்டணியா, எஸ்.பி.,ஆபீஸ்ல ரிசப்சன்ல ஒருத்தர் இருக்காரு. அங்க ஏதாவது கம்பிளைன்ட் போனா, அதை படமெடுத்து தடாகம் போலீசுக்கே வாட்ஸ்ஆப்ல அனுப்பிருவாராம்!''

''ஓ...இவுங்க மூணு பேரையும்தான், 'ராம் ராபர்ட் ரஹீம்'னு தடாகத்துல பேசிக்கிறாங்களோ!'' என்று சிரித்தாள் மித்ரா.

அவளே தொடர்ந்தாள்...''ரூரல் போலீஸ் மட்டுமில்லைக்கா...சிட்டி போலீஸ் பத்தியும் பயங்கர கம்பிளைன்ட் குவியுது. அதுலயும் புலியகுளத்துல இருக்குற லேடி போலீஸ் ஸ்டேஷன்ல நடக்குற கட்டப்பஞ்சாயத்துகளை வச்சு, ஒரு மெகா சீரியலே ஓட்டலாம் போலிருக்கு!''

''உண்மைதான் மித்து...ஒரு குடிகாரக் கணவனை வேண்டாம்னு பிரிஞ்சு, டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிருக்காங்க ஒரு லேடி. புருஷன் செல்போன் ரிப்பேர் பண்றவனாம். இந்தப் பொண்ணோட போட்டோவை வச்சு, ஒரு ஆபாச வீடியோவுல மார்பிங் பண்ணி, அதை இந்த பொண்ணுக்கே அனுப்பிருக்கான். அதை நெட்ல போட்டதாவும் அவன் நண்பர்களே மெசேஜ் பண்ணிருக்காங்க!''

''அடப்பாவி...அவனை இன்னும் அரெஸ்ட் பண்ணலையா?''

''அந்தக் கொடுமைய ஏன் கேக்குற...அந்தப் பொண்ணு புலியகுளம் விமன் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைன்ட் கொடுத்திருக்கா...ஆனா ஒரு ஆக்ஷனும் எடுக்கலை. அப்புறம் அந்த கேசோட ஸ்டேட்டஸ் என்னன்னு நெட்ல பார்த்தப்போ, 'புகார்தாரரே சமரசமாகப் போயிட்டதா' போட்ருக்காங்க. விசாரிச்சதுல அந்தப் பொண்ணு எழுதுனது மாதிரி இவுங்களே எழுதி கேசை முடிச்சிருக்காங்க!''

''அங்க போற பெரும்பாலான கேசை இப்பிடித்தான்க்கா பண்றாங்க...வரதட்சணை கம்பிளைன்ட் கொடுத்தா, கட்டப்பஞ்சாயத்து பண்ணி, எழுதி வாங்கிட்டு, கோர்ட்ல பாத்துக்கச்சொல்றாங்களாம்!''

''இருகூர் ஏரியாவுல கஞ்சா வியாபாரமும், ரவுடியிசமும் கொடிகட்டிப் பறக்குதாம். சிவான்னு ஒருத்தன்தான் சில ரவுடிகளை வச்சு, அங்க இருந்து சிட்டி முழுக்க கஞ்சா சப்ளை பண்றானாம். அவனைப் பத்தி யாராவது போலீசுக்குத் தகவல் சொன்னா, ஆளைக் கண்டு பிடிச்சு, கத்தி எடுத்து நரம்பையே அறுத்து விட்றாங்களாம்!''

''சிங்காநல்லுார் போலீஸ் என்ன பண்றாங்களாம்?''

''சிங்கம் மாதிரி ஒரு போலீஸ் கூட அங்க இல்லை...பூனையாட்டம் இருக்காங்க. அதனாலதான், அந்த கஞ்சா வியாபாரி, கத்தியோடயே பேஸ்புக்ல தைரியமா படம் போடுறான்!'' என்று அவனுடைய படத்தையே எடுத்துக் காண்பித்தாள் சித்ரா.இருவருக்கும் சுடச்சுட வெங்காய பக்கோடாவும், இஞ்சி டீயும் வைத்து விட்டுப்போனார் சித்ராவின் அம்மா. அதை கொறித்துக்கொண்டே அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள் மித்ரா...

''சிங்காநல்லுார்னு ஊர்ப்பேரையும், நீ சொன்ன ரவுடி பேரையும் கேட்டதும் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்துச்சு...சிங்காநல்லுார் குளத்தை ஒட்டி மீன்கடை வச்சிருக்குற ஒருத்தரு, அந்த குளத்தை ஒட்டி, மூனு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிச்சு வச்சிருக்காராம். பின்னால இருக்குற விவசாயிங்க நிலத்தையும் அடிமாட்டு விலைக்குக் கேக்குறாராம். தரலைன்னா போற பாதைய ஜேசிபி வச்சு கொத்தி வச்சுர்றாராம்!''

''பத்து வருஷமா இருந்த இடம் தெரியாம இருந்தாரு...இப்போ மறுபடியும் வேலைய ஆரம்பிச்சிட்டாரா?''

''அங்கெல்லாம் சர்வே பண்ணி, ஆக்கிரமிப்புகளை எடுக்கணும்னு குளங்களுக்கு குரல் கொடுக்குறவுங்க கேட்டுட்டே இருக்காங்க. மாவட்ட நிர்வாகம் ஏன் அதைப் பண்றதில்லைன்னு தெரியலை!''

''நம்ம மாவட்டத்துல இப்போ போலீஸ், ஆர்.டி.ஓ.,ஆபீஸ்க்கு இணையா, சர்வே டிபார்ட்மென்ட் மேல புகார் குவியுது...அதுலயும் அன்னுார்ல இருக்குற சர்வேயர், சாதாரண விவசாயிகள், பொதுமக்கள் பணம் கட்டி சர்வே பண்றதுக்குக் கூப்பிட்டா, மாசக்கணக்குல அலைய விடுறாராம். ஆனா ரியல் எஸ்டேட்காரங்க, லேண்ட் புரோக்கர்ஸ் கூப்பிட்டா, உடனே ஓடிருவாராம்...எல்லாம் துட்டுதான்!''

''அவர் என்னக்கா பண்ணுவாரு....மாவட்டத்துல அவருக்கு தலையா இருக்குற அதிகாரி, மீனுக்கு கொக்கு 'தவம்' கெடக்குறது மாதிரி தவம் கெடந்தா இவுங்கதானே கொடுக்கணும்!''

''அவரைப் பத்தி எனக்குமே நிறைய கம்பிளைன்ட் வந்துச்சு மித்து...அவர் இதே மாவட்டத்துல அஞ்சு வருஷமா சர்வே இன்ஸ்பெக்டரா இருந்திருக்காரு. அப்புறம் புரமோஷன் வந்து, மூனே மாசம் மட்டும் திருவாரூருக்குப் போயிட்டு, இங்க திரும்ப வந்து, செம்மயா கலெக்சன் பண்ணிட்டு இருக்காரு!''

''சென்னையில இருந்து யாராவது ஆபீசர் வந்தா, இவரே செலவு பண்றதாச் சொல்லி, வெறும் பத்தாயிரம் செலவழிச்சிட்டு, சர்வேயர்கள்ட்டயும், புரமோட்டர்கள்ட்டயும், புரோக்கர்கள்ட்டயும் லட்சக்கணக்குல வசூல் பண்றாராம்!''

''உயரதிகாரியே இப்படி வசூல் பண்ணுனா, கீழ இருக்கிறவுங்க அப்பிடித்தான் இருப்பாங்க. ஆனா மேட்டுப்பாளையம் தாசில்தார் ஆபீஸ்ல, ஒரு ஓ.ஏ.,வோட கட்டுப்பாட்டுலதான் பெரிய லேடி ஆபீசரே இருக்காங்களாம். பயங்கர கலெக்சன் ஓட்றாராம். கேட்டா, 'எங்க சூரியனோட ஆட்சி நடக்குது; எவனும் என்னை மாத்த முடியாது'ங்கிறாராம்!''

''அந்த லேடி ஆபீசர் அப்பிடின்னா, பெரியநாயக்கன்பாளையம் யூனியன் ஆபீஸ் லேடி ஆபீசரைப் பார்க்கவோ, போன்ல பிடிக்கவோ முடியலையாம். ஒன்பது வில்லேஜ் பஞ்சாயத்துல இருந்தும் வார்டு மெம்பருங்க புலம்பித் தீர்க்குறாங்க!''சொல்லிக்கொண்டே 'டிவி'யைப் போட்டாள் மித்ரா.

அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைப் பார்த்ததும் அவளே தொடர்ந்தாள்...''பள்ளிக் கல்வித் துறையில போன வருஷமே கொரோனா காரணமா, பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கே நடக்கலை. ஆனா அப்போ இருந்தஅமைச்சர்களைப் பிடிச்சு, காசைக்கொடுத்து, பல பேரு டிரான்ஸ்பர் வாங்குனாங்க. இந்த ஆட்சியிலயாவது நியாயமா கவுன்சிலிங் நடக்கும்னு டீச்சர்ஸ் எதிர்பார்த்தாங்க. மூணு மாசமாகியும் இன்னும் கவுன்சிலிங்கே நடத்தலை!''

''அதான் தெரியுமே!''

''முழுசாக் கேளுங்க...இப்பவும் போன ஆட்சி மாதிரியே கவுன்சிலிங்கே இல்லாம, டிரான்ஸ்பர் போட ஆரம்பிச்சிட்டாங்க. ராமநாதபுரம் மாவட்டத்துல வேலை பார்த்த ஒரு டீச்சர், டைரக்டரேட்ல டைரக்டா ஆர்டர் வாங்கி, ஒண்டிப்புதுார் ஸ்கூல்ல சத்தமில்லாம ஜாயின் பண்ணீட்டாங்க,''

''என்னக்கா எலக்சன் வரப்போகுது...நம்ம ஊரு மேயர் வேட்பாளர்களை கழகங்கள்ல முடிவு பண்ணீட்டாங்களா?''

''ஆளும்கட்சி கொடுக்குற மறைமுக 'டார்ச்சர்'ல, அ.தி.மு.க.,வுல முக்கியமான தலைகள் யாரும் நிக்கிறதுக்குத் தயாரா இல்லை.தி.மு.க.,வுலதான் பயங்கர போட்டியா இருக்கு.சித்ரா பேசும்போதே, 'அக்கா! மழை வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன்' என்று 'பைபை' சொல்லி கிளம்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X