புதுடில்லி :முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை.
இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையில் நீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
'முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகம் -- கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு அடுத்த மாதம் 10ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மனுதாரர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
முல்லை பெரியாறு அணையை பயன்பாட்டில் இருந்து நீக்க, கேரளா தரப்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மீது போராட்டக்காரர்கள் அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளனர். மேலும் புதிய அணை கட்டவும் கோரிக்கை வலுத்து வருகின்றன.
எனவே, முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயா சுகின், ''அணையின் நீர்மட்ட அச்சுறுத்தல் குறித்து தேசிய அல்லது சர்வதேச நிபுணர் குழுக்கள் கருத்து எதுவும் கூறவில்லை. ''எனவே, இந்த மனு தொடர்பாக, 'நோட்டீஸ்' அளித்து, நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:முல்லை பெரியாறு வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 10ல் இறுதி தீர்வு காணப்படும். அப்படியிருக்கையில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன்?
நீங்கள் இப்படி செய்வதால் பல தனி நபர்களும் மனு தாக்கல் செய்யக் கூடும். எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. முக்கிய வழக்கு விசாரணைக்கு வரும் போது அனைத்து பிரச்னைகளும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE