திருச்சி: திருச்சி அருகே, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை வழக்கில், தி.மு.க., ஒன்றிய செயலர், தொழிலதிபர் தலைமறைவாகி விட்டனர்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள செங்கதிர்சோலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மைதிலி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் முன் இருந்த சிவகுமாரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 34; தீபக், 28 ஆகியோர் தேடி வந்து, கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவகுமார் உயிரிழந்தார். மைதிலி அளித்த புகாரில், 'சுடுகாடு ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டதால், அந்தநல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் கதிர்வேல், வாசன் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ரவி முருகையா ஆகியோர் தூண்டுதலில், பிரபாகரன், தீபக் ஆகியோர், என் கணவரை அடித்து கொலை செய்து விட்டனர்' என தெரிவித்திருந்தார். கதிர்வேல், ரவி முருகையா, பிரபாகரன், தீபக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரபாகரன், தீபக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட கதிர்வேல், ரவி முருகையா ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்யா விட்டால், சிவகுமார் உடலை வாங்க மாட்டோம் என, நேற்று மதியம் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை முன், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியும் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
பஞ்., தலைவர் புகார்: சிவகுமாரின் நண்பர் விக்னேஷ்வரன், செங்கதிர்சோலை பகுதி அடங்கிய மல்லியம்பத்து கிராம பஞ்., தலைவராக உள்ளார். அவர் நேற்று சோமரசம்பேட்டை போலீசில் அளித்த புகாரில், 'சிவகுமாரைப் போல் என்னையும் கொலை செய்வதாக, அவரை தாக்கியவர்கள் மிரட்டினர். ஆகையால் தி.மு.க., ஒன்றிய செயலர் கதிர்வேல், ரவி முருகையா, பிரபாகரன், தீபக் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' எனக் கூறி உள்ளார். விக்னேஷ்வரனிடம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கதிர்வேல் தோற்ற முன்விரோதமும் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE