வேலூர்: 'என்னை கடைசியாக பார்த்து கொள்ளுங்கள், மரணம் வரப்போகிறது' என, வாட்ஸ் ஆப்பில் அதிகாரிகளுக்கு, அமைச்சர் துரைமுருகன் தொகுதியை சேர்ந்த ஒருவர் தகவல் அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி, கழிஞ்சூர் பேருராட்சி கோபாலபுரம், 11வது தெருவில் வசித்து வரும் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை பிரதிநிதி சீனிவாசன், 56. இவர், நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சப்-கலெக்டர் என அனைவருக்கும் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினார். அதில், அனைவருக்கும் நமஸ்காரம். என்னை கடைசியாக பார்த்து கொள்ளுங்கள், மரணம் வரப்போகிறது. மரணத்திற்கு பின் நேரில் வந்து யாரும் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். யாரும் சுலபமாக வர முடியாத சூழ்நிலையில் என் வீடு உள்ளது. குடும்ப பிரச்னை, பொருளாதார நெருக்கடி, உடல் ஆரோக்கிய பாதிப்பு, தற்கொலை முயற்சி என எதுவும் என் மரணத்திற்கு காரணமில்லை. கடந்த, 20 ஆண்டுகளாக எந்த ஆட்சியிலும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். வேலூர் தி.மு.க.,- எம்.பி., கதிர் ஆனந்த், அவரது தந்தையும் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் வசிக்கிறேன். இங்கு தார்ச்சாலை போடும் போது, குறிப்பிட்ட தூரம் வரை உயர்த்தி போட்டு விட்டு, கடைசியில் என் வீடு உள்ளிட்ட இரண்டு வீடுகளில் பாதியில் விட்டு விட்டனர். இதனால் சிறிதளவு மழை பெய்தாலும், குளம் போல தண்ணீர் தேங்கி விடுகிறது. அருகில் வீடுகள் கட்டாததால், கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது. கடந்த, 18 முதல் பெய்து வரும் மழையால் வீட்டை சுற்றி தண்ணீருடன் கழிவுநீரும் தேங்கியுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன் தெரு விளக்கையும் அகற்றி விட்டனர். ஆனால், வீட்டு வரி மட்டும் செலுத்தப்படுகிறது. வீடு இடிந்து விழுந்த பின், ஆய்வு செய்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரிகள், சேதாரம் வருவதற்கு முன்போ அல்லது இறப்பதற்கு முன்போ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த, 10 நாட்களாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் வீடு இடிந்து விழக்கூடிய நேரத்தில், நான் அல்லது குடும்பத்தினருக்கு மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிய வாட்ஸ் ஆப்பை, இதுவரை யாரும் பார்க்கவில்லை என, வருத்தத்துடன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE