வேலூர்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 4:17 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது, 3.6 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, மீனூர் மலை, பெரும்பாடி, அக்காவரம், கொல்லமேடு பகுதியில் தொடர்ச்சியாக ஏழு முறை, இரண்டு முதல் 10 வினாடிகள் வரை நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அப்போது வீட்டு பரண் மீதிருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாகவும், பீரோக்கள் ஆடியதாகவும் மக்கள் தெரிவித்தனர். பலரும் வீடுகளில் இருந்து வெளியே ஓடினர். மீனூரில், செல்வம், 58, என்பவர் மாடி வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் கால்நடைகள் அலறிக் கொண்டிருந்தன. மின் விசிறிகள் தாறுமாறாக ஓடின. கடந்த மாதம், 19, 25 ஆகிய நாட்களில் ஏற்கனவே இப்பகுதியில் இதுபோன்ற நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காரப்பட்டு, அருங்கல் துருகம் ஆகிய அரசு காப்புக்காடு, வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர் வரை, 59 கி.மீ., தூரத்திற்கு பூமிக்கடியில், 25 கி.மீ., ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது வரைபடங்கள் வாயிலாக தெளிவாகியுள்ளது. வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை கேட்டதற்கு, ''நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE