புதுடில்லி :'ஒமைக்ரான்' என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை செயலர் இது குறித்து நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மாநில அரசுகளை அவர்வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ''நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை பரவவில்லை,'' என, மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை தாக்கத்தால், உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது தான் மீண்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் அறிகுறியற்ற கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரிக்க துவங்கியது. பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 'பி.1.1.529' என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு, ஒமைக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுஉள்ளது.
![]()
|
பெரும் அச்சம்
இது வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், தடுப்பூசியின் செயல்திறனுக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்த வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பரவல், உலக நாடுகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டு பயணியர் வர தடை விதித்துள்ளன. இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானேவுக்கு வந்த ஏழு பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் நான்கு பேருக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது. மற்ற மூன்று பேரின் சோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.
![]()
|
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டாமல் தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர்., மற்றும் ஆர்.ஏ.டி., பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கண்டுபிடித்து விட முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் அனைவரையும் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு பயணியர் வருகையை கண்காணிக்க வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால், ஒமைக்ரான் பரவலை தடுத்து விட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நம் நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமைக்ரான் வைரசை எதிர்த்து போராட, அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம்.
இந்த வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளோம். உலகில் ௧௪ நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுப்பாடு நீட்டிப்பு
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள், டிச., ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவலை தடுக்க, வெளிநாட்டு பயணியரை கண்காணிப்பது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE