'சசிகலாவுக்கு எதிராக தினகரன் தெரிவித்த கருத்து, அவரது உண்மை முகத்தை காட்டிக் கொடுத்து விட்டது' என குற்றஞ்சாட்டும் அவரது கட்சி நிர்வாகிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகின்றனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமீபத்தில் நிவாரண உதவிகளை சசிகலா வழங்கினார்.
புறக்கணிப்பு
இந்நிகழ்ச்சியில் சசிகலாவுடன் பங்கேற்ற, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் சரஸ்வதி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலர் முனுசாமி மற்றும் தி.நகர் வைத்தியநாதன் போன்றவர்களை தினகரன் புறக்கணித்துள்ளார். இந்த நடவடிக்கை சசிகலாவுக்கு பிடிக்க வில்லை. இதனால், அவர்கள் இருவர் மத்தியில் அதிகார மோதல் உருவாகி உள்ளது. சமீபத்தில், 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த தினகரன், 'அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு சசிகலா உரிமை கொண்டாடுகிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, அ.ம.மு.க.,வினர் பங்கேற்பது சட்ட சிக்கலை உருவாக்கும் என்பதால், சசிகலாவுடன் செல்வதை எங்கள் நிர்வாகிகள் தவிர்த்திருக்கலாம்' என்றார்.தினகரனின் இந்த பேட்டி சசிகலாவுக்கும், அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:வெள்ள நிவாரண உதவி செய்ய தினகரன் வரவில்லை; சசிகலா உதவிகளை வழங்கினார். அவருக்கு உதவியாக சென்ற அ.ம.மு.க., நிர்வாகிகளிடம், தினகரன் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என உத்தரவிட்டதும், எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
நினைவு தினம்
இனி தினகரனை நம்பினால், நாங்கள் நட்டாற்றில் தள்ளப்படுவோம். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தன்று காலை 10:00 மணிக்கு தினகரனும்; 11:00 மணிக்கு சசிகலாவும் தனித்தனியாக அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின், மாநில, மாவட்ட நிர்வாகிகள், சசிகலாவுக்கு ஆதரவாக, தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விருப்ப மனுக்களிலும் குழப்பம்
வெள்ள நிவாரண உதவியை சசிகலா வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலர் முனுசாமிக்கு தகவல் தெரிவிக்காமல்,மண்டல பொறுப்பாளர்களை வைத்து, சோழிங்கநல்லுார், வேளச்சேரி தொகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை வினியோகித்துள்ளனர்.
தி.நகர், விருகம்பாக்கம் தொகுதிகளில், 'ஜெயலலிதா ஆசியுடனும், சசிகலா நல்லாசியுடனும், தினகரன் உத்தரவுக்கு இணங்க விருப்பமனு பெறப்படுகிறது' என, அ.ம.மு.க., தலைமையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 'தேர்தலுக்கு மட்டும் சசிகலா நல்லாசியுடன் என குறிப்பிடுவது, அ.தி.மு.க., பொதுச் செயலர் உரிமை வழக்குக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தாதா' என்ற கேள்வியை, சசிகலா ஆதரவாளர்கள் எழுப்பி உள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE