சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தாலும், கட்சி தலைமை பலமாக இருந்து வழிநடத்தினால்ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் அதிகார பலத்தை, பண பலத்தால் எதிர்த்து, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறலாம் என, கட்சியினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், நிர்வாகிகள் சண்டையிட்டது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கினால், உள்ளடி வேலைகளால் சொந்த கட்சியினரே தோற்கடித்து விடுவரோ என்ற அச்சம் பலரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வினர் பலரும், பா.ஜ.,வில் இணைந்து, உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக களமிறங்கி, பண பலத்தால் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர்.
வெற்றி பெறாவிட்டாலும், தங்களுக்கு டில்லி பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. கூட்டணி கட்சியாக இருந்தாலும், தங்கள் கட்சியில் சேர வருவோரை புறக்கணிக்க கூடாது என்ற முடிவில், பா.ஜ.,வும் சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகி வருகிறது.

வாரிசின் கெத்து; மேலிடம் வேட்டு!
சென்னையில் 'அண்ணாந்து' பார்க்க வைக்கும் தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின் வாரிசு, பெரிய குடும்பத்தின் உறுப்பினருக்கு நெருக்கமானவர். சட்டசபை தேர்தலுக்கு முன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் குழுவில் ஒருவராக, கட்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து பணியாற்றியவர். தி.மு.க., ஆளுங்கட்சியான பின், வாரிசின் தொழில் வட்டம் பெரிதாகி விட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், 'ரியல் எஸ்டேட்' தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்.போட்டி நிறுவனங்களுக்கு எல்லாம் நெருக்கடி தந்து, தன் தொழிலை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். முக்கிய தொழில் அதிபர்கள் எல்லாம் தன்னை வந்து சந்திக்க வேண்டும். கட்சி மேலிடத்திற்கு,அவர்களை அறிமுகப்படுத்தி, தொழில்களை விருத்தி செய்ய வழி வகுக்கிறேன் என வாக்குறுதியும் கொடுத்துவருகிறார்.
சென்னை மேயர் தேர்தலில், தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் எனவும், தன் ஆதரவாளர்களிடம் கெத்தாக கூறி வந்தார். ஆனால், கட்சி மேலிடமோ, வாரிசுக்கு மேயர் பதவி இல்லை என தெரிவித்து விட்டதால், வாரிசு நொந்து நுாடுல்ஸ் ஆகி விட்டதாக, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கிசுகிசுக்கின்றனர்.
இருதலை கொள்ளி எறும்பாக எம்.எல்.ஏ.,க்கள்!
திருச்சி மாவட்டத்தில், ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் சீனியர், ஜூனியர் அமைச்சர்கள் இருவர் தவிர மற்ற ஏழு எம்.எல்.ஏ.,க்களில் நான்கு பேர் சீனியர் அமைச்சரின் ஆதரவாளர்களாகவும்; மூன்று பேர் ஜூனியர் அமைச்சரின் ஆதரவாளராகவும் செயல்படுகின்றனர்.
திருச்சி வடக்கு, மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் சீனியர் அமைச்சரால் உருவாக்கப்பட்டஎம்.எல்.ஏ.,க்கள் சிலர், சீனியர் அமைச்சரின் வாரிசு மீது அதிருப்தியில் உள்ளனர். காரணம், காவிரி ஆற்றில் துார் வாரும் பணிகளுக்கான 'டெண்டர்'கள் விவகாரத்தில், சீனியர் அமைச்சர் வாரிசு மட்டும் ஆளுமை காட்டி வருகிறார்.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சீனியர் அமைச்சர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, வாரிசு கண்டுகொள்ள வில்லை. தங்களுக்கு அரசியலில் முகவரி தந்த தந்தையிடம் வாரிசு பற்றி புகார் வாசிக்கலாமா; வேண்டாமா என, இருதலை கொள்ளி எறும்பு போல அவர்கள் தவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE