எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஒவ்வொரு மழைக்கும் மூழ்கும் வரதராஜபுரம்; அடையாற்றில் வெள்ளத்தை தடுப்பதே தீர்வு

Updated : டிச 02, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வரதராஜபுரத்தை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் மதகுகளை மேம்படுத்த வேண்டும். 100 ஏரிகளின் உபரி நீரை அடையாற்றில் செல்லும் வகையில் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா ஆதனுார் அருகே துவங்கும்
தொடர்கதை,மழை, வரதராஜபுரம்,அடையாறு, வெள்ளம், தீர்வு, ஏரி, மதகு, அவசியம்

ஸ்ரீபெரும்புதுார்: கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வரதராஜபுரத்தை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் மதகுகளை மேம்படுத்த வேண்டும். 100 ஏரிகளின் உபரி நீரை அடையாற்றில் செல்லும் வகையில் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா ஆதனுார் அருகே துவங்கும் அடையாறு கால்வாய், வரதராஜபுரம் வழியே சென்னை பெருநகரில் நுழைந்து, பட்டினம்பாக்கம் கடலில் கலக்கிறது.


வடகிழக்கு பருவமழை


படப்பை அருகே, ஒரத்துார் பகுதியில் துவங்கும் அடையாறு கிளை கால்வாயிலும், சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை கால்வாயிலும், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், வரதாராஜபுரம் பகுதியில் செல்லும் அடையாற்றில் இணைந்து, மிக அதிகப்படியான வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.இதனால் வரதராஜபுரம் குடியிருப்பு பகுதி, வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தொடர் கதையாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு கட்சி ஆட்சியாளர்களாலும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் சென்னை பெருநகர் பகுதி யில் வெள்ள பாதிப்பை சரி செய்ய, காலம் காலமாக கோடிக்கணக்கில் செலவு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு குறையவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 189 ஏரிகளின் உபரி நீர், அடையாற்றில் செல்லும் போது, வழியெங்கும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, வெள்ள பாதிப்புக்கு மூலகாரணியாக விளக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளை துார்வாரி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்.இந்த ஏரிகளில், செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளதுபோல், மதகு அமைப்பை ஏற்படுத்தினால், தேவைக்கு ஏற்ப தண்ணீரை அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றலாம்.


ஆக்கிரமிப்புகள்


இதனால், ஒரே நேரத்தில் சென்னைக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை தவிர்க்க முடியும். வரதராஜபுரம் பகுதியை கடந்து செல்லும் அடையாற்றின் இருபுறம் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன; அடையாற்றில் மிக பெரிய வளைவுகள் உள்ளன. இதனால் தண்ணீர் வேகமாக வெளியேறாமல் தடைபடுகிறது. வெள்ள பாதிப்பை தடுக்க, வரதராஜபுரம் அடையாறு
பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை அகலப்படுத்த வேண்டும். அடையாற்றின் இருபுற கரையின் உயரத்தை அதிகரித்தால், வெள்ள பாதிப்பை மேலும் தவிர்க்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


'ஷட்டர்'களுடன் கூடிய மதகு


செம்பரம்பாக்கம் ஏரி 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 22 அடி உயரமும் உடையது. ஏரியின் உபரி நீரை வெளியேற்ற 5 கண் மதகு மற்றும் 19 கண் மதகு என, இரண்டு இடங்கில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மதகுகளில் அமைக்கப்பட்ட ஷட்டர்களை திறந்து, உபரி நீரை தேவைக்கு ஏற்ப 500 கன அடி முதல் 29 ஆயிரம் கன அடி வரை வெளியேற்ற முடியும்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அடையாறு கால்வாய்க்கு உபரி நீர் செல்லும் பெரிய ஏரிகளை கண்டறிந்து, அங்கும் இதேபோல், தேவைக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றும் மதகு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.


அதிக நீர் வர என்ன காரணம்?குன்றத்துார் வட்டத்தில் வெங்காடு, இரும்பேடு, கொளத்துார், மலைப்பட்டு, மாகண்யம், அழகூர், வல்லாரை, குண்டுபெரும்பேடு, நல்லுார், சோமங்கலம் பெரிய ஏரி, சோமங்கலம் சித்தேரி, நடுவீரப்பட்டு பெரிய ஏரி, நடுவீரப்பட்டு சித்தேரி உட்பட 50 ஏரிகள் உள்ளன. இவற்றின் உபரி நீர், சங்கிலி தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று நீர்வரத்து பெற்று, சோமங்கலம் அருகே துவங்கும் அடையாறு கிளை கால்வாய் வழியே வரதராஜபுரத்தில் நுழைந்து அடையாறில் கலக்கிறது.
படப்பை அருகே ஆதனுாரில் துவங்கும் அடையாறு கால்வாயில், ஆதனுார் ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மண்ணிவாக்கம், நந்திவரம், பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, பொத்தேரி, காட்டாங்கொளத்துார், நின்னகரை உட்பட 20 ஏரிகளின் உபரி நீர், சங்கிலி தொடர்ச்சியாக வரதராஜபுரம் வழியே அடையாற்றில் செல்கிறது.ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்துார் ஏரியை இணைத்து கட்டப்பட்ட நீர்த்தேக்கத்திற்கு காஞ்சிவாக்கம் ஏரி, உமையாள்பரணஞ்சேரி ஏரி, நாட்டரசன்பட்டு ஏரி, சிறுவஞ்சூர் ஏரி, நாவலுார் ஏரி, செரப்பணேச்சேரி ஏரி, வைப்பூர் ஏரி, பணப்பாக்கம் ஏரி உள்ளிட்ட 30 ஏரிகளின் உபரி நீர், வரதராஜபுரம் வழியே அடையாற்றில் செல்கிறது.


செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு மாவட்டத்தில், 80க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் கிடைக்கிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், திருநீர்மலை அருகே அடையாற்றில் கலக்கிறது. இங்கு வரதராஜபுரம் பகுதியில் இருந்து செல்லும் வெள்ள நீருடன், செம்பரம்பாக்கம் உபரி நீர் மோதுவதால், நீரின் வேகம் குறைகிறது. இதனால், வரதராஜபுரம் பகுதியில் வெள்ள நீர் வேகமாக வடியாமல் தேங்கி நிற்கிறது.


தொடர்ந்து வெளியேறுகிறது உபரி நீர்


மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 262 ஏரிகள் உள்ளன. மதுராந்தகம் ஒன்றிய கட்டுப்பாட்டில் 132 ஏரிகள் உள்ளன. ஒரு மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், அனைத்து ஏரிகளும் முழுதும் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளிலேயே, அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில், 10 நாட்களாக தொடர்ந்து உபரி நீர் வெளியேறுகிறது. நீண்ட நாட்களாக ஏரிகளில் உபரி நீர் வெளியேறுவது, எப்போதாவது தான் நடக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-டிச-202118:47:26 IST Report Abuse
Girija ஏரியை ஆக்கிரமித்து கல்வி தந்தைகள் கல்லூரி கட்டி ஜகத்தை ஆள நினைத்தால் இப்படித்தான்.
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
01-டிச-202116:29:16 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan வரதராஜபுரத்தை குடியிருக்க தகுதியற்ற பகுதி என அறிவித்து காலிசெய்துவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X