விருதுநகர் : ஆண்டுகள் பல கடந்தும் சீரமைக்கப்படாத ரோடு, போதாத தெருவிளக்கு, இல்லாத கால்வாய், ஆக்கிரமிப்புகளால் அவதி என அடிப்படை வசதிகள் இல்லாமல் விருதுநகர் சத்திரரெட்டியபட்டி ஊராட்சி பஞ்சாயத்து யூனியன் காலனி குடியிருப்போர் தவிக்கின்றனர்.
இக்காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சம்பத், செயலாளர் தங்கசாமி, துணைத் தலைவர் சுதந்திர பாண்டியன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வெங்கடேஷ் ஆனந்தன், செல்வி, கண்மனி, சாந்தி, குருவம்மாள், ரமேஷ், தனசேகரன் கூறியதாவது: நான்கு வழிச்சாலை அருகில் அமைந்துள்ள இப்பகுதி 5 தெருக்களை கொண்டது. மூன்று தெருக்களில் தான் பாதை உள்ளது. இருதெருக்களில் பாதை இருந்த இடமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தெருக்களில் மட்டும் தான் ரோடு போடப்பட்டுள்ளது. அதிலும் பிரதான ரோடு போட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை.
இதனால் கரடுமுரடான ரோட்டில் பயணிக்க வேண்டிய சூழல் நிலைவுகிறது. ரோட்டின் நடுவே மின்கம்பம் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.இப்பகுதியில் ஒரு தெருவில் மட்டும் தான் தெருவிளக்கு உள்ளது. அதுவும் போதுமான அளவிற்கு இல்லை. இதனால் திருட்டு பயம் நிலவுகிறது. சர்வீஸ் ரோட்டில் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பெண்கள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இப்பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தொலைவில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. இதனால் கூடுதல் தொட்டி அமைத்து குடிநீர் சீராக வழங்க வேண்டும்.இப்பகுதியில் சாக்கடை அமைக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மக்கள் குடியிருந்து வருகிறோம். இதுவரை அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதி போல் காட்சியளிக்கிறது.
சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் வெளியேறும் கழிவு நீரை உறிச்சு குழி அமைத்து அதில் விட வேண்டிய நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு மழை காலங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.நான்கு வழிச்சாலை அருகே நீர் நிலைகளுக்கு மழை நீர் செல்வதற்கு ஓடை உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஓடை மூடப்பட்டு தண்ணீரானது குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.நாளடைவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்னைகளை களைய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.