மதுரை: 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப் படியை 100 நாட்களில் வழங்குவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின், 200 நாட்களை தாண்டியும் எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஓய்வூதியர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்கள் மிகக் குறைவான அகவிலைப்படி பெற்று வந்த நிலையில், 1998 முதல் அப்போதய முதல்வர் கருணாநிதி முயற்சியால் அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்ஷன் பெற்று வருகின்றனர். அரசு சார்பில் 2015 மற்றும் 2016ல் எடுக்கப்பட்ட முடிவுகளால் தற்போது வரை ஒருவருக்கு ரூ.6 - 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதைப்பெற ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. விலை உயர்வால் கடும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நலச்சங்க தலைவர் கதிரேசன் கூறியதாவது: அகவிலைப்படி உயர்வு 2015 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் வழங்கி விடுவோம்; கவலை வேண்டாம்' என தேர்தலுக்கு முன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 200 நாட்களை கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவிற்கும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் தங்கள் மனக்குமுறலை தொடர்ந்து புகார் மனுவாக பதிவு செய்து வருகின்றனர். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE