தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு பை கொடுக்க உள்ளது. பொங்கல் பரிசுக்கான துணி பை வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியை அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு முத்திரை மட்டுமே இருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை; அவரது பெயர் உள்ளது. ஆனால், 'தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்' என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2011ல், 'ஏப்ரல் 14ல் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும்' என, அப்போதைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. மீண்டும் எங்கேயிருந்து தை முதல் நாள், தமிழ் புத்தாண்டு நாளாக வருகிறது என்று கேட்டால், 'அதற்கான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்கின்றனர் தமிழக அரசு அதிகாரிகள். இது குறித்து, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: கேபிடலிசம், கம்யூனிசம், மாவோயிசம் என, பல இசங்களை பார்த்திருக்கிறோம். புதிதாக இப்போது தி.மு.க.,யிசம் வந்திருக்கிறது. எல்லா விஷயங்களிலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக வந்தால், அதற்கு நேர் மாறான நிலைப்பாடும் எடுத்து செயல்படுவதே தி.மு.க.,யிசம்.

திரித்து கூறுவார்கள்
இதை இடித்து கூறுவோர் மீது அவதுாறு பரப்புவதும், தி.மு.க.,வின் வேலையாகி இருக்கிறது. ஏற்கனவே மழை, வெள்ளத்தின் போது, எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியது. அதே குற்றச்சாட்டுக்கள் இன்றைய தி.மு.க., அரசு மீதும் உள்ளன. அதை சொன்னால், ஏற்காத போக்கு தி.மு.க.,விடம் உள்ளது. தேர்தல் வெற்றி, நோய் தொற்று பரவல், விளையாட்டு, யுத்தம், தேர்வில் வெற்றி போன்றவற்றை குறிப்பிடும் போது, வரலாற்றை புரட்டி போட்டது என்பார்கள். ஆனால், தி.மு.க.,வினர் வரலாற்றை புரட்டி போடமாட்டார்கள்.
வரலாற்றையே பொய்யும், புரட்டுமாக திரித்து கூறுவார்கள்; அதன்படியே செயல்படுவார்கள். அப்படித்தான், கருணாநிதி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, அவரது ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்கள் அணி வகுத்தன. உடனே, அதை மடை மாற்ற, 'தைத்திங்கள் முதல் நாள், தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும்' என 2008ல் அறிவித்தார். அப்போதே, வரலாற்று ஆய்வாளர்களும், சமூக அறிஞர்களும் கண்டனத்தை பதிவு செய்தனர். அன்று தந்தை வழிநடத்திய அரசுக்கு இருந்த கெட்ட பெயர், இப்போது தனயன் வழிநடத்தும் அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நிவாரண பணிகளில், அரசுக்கு ஏகப்பட்ட கெட்டப் பெயர் உள்ளது.

ஏற்புடையது அல்ல
அதை மடை மாற்றம் செய்ய, தந்தை வழியிலேயே தனயனும் புறப்பட்டு விட்டார். தைத்திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப் போவதாக அறிவிக்க உள்ளனர். அதன் முதல்படிதான், பொங்கல் பையில், 'தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்' என, முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியாக, மக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், பழைய பஞ்சாங்கத்தையே மீண்டும் எடுத்து வந்து விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்; அது போணியாக போவதில்லை.
பொங்கல் பையில் முதல்வர் படம் போடவில்லை. அது எங்கள் பெருந்தன்மை என தி.மு.க.,வினர் பெருமை பேசுகின்றனர். முதல்வராக பழனிசாமி இருந்த போது, அவரது படம் போட்டு நிவாரண பைகள் தயார் செய்வதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்தது. அரசின் நிவாரண பை மற்றும் பொங்கல் பரிசு பையில், முதல்வர் படம் போட்டால், கோர்ட் உத்தரவுக்கு எதிராக போகும் என்பதால் படம் போடவில்லை. அதை பெருந்தன்மை என்று சொல்லி பெருமை பேசுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE