வேளாண் சட்டங்களை வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரலாம் என எதிர்பார்த்து காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு, தன் வியூகம் வாயிலாக ஆளும் தரப்பு கடிவாளம் போட்டு உள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்ட விவகாரத்தில், 12 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைத்து உள்ளது.
நெருக்கடி
விவசாய சட்ட வாபஸ் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து நெருக்கடி தருவதற்கு நினைத்திருந்த எதிர்க்கட்சிகளின் வியூகத்தை, இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை வாயிலாக ஆளும் தரப்பு திசை திருப்பி உள்ளது.நேற்று இந்த நடவடிக்கை மட்டுமே பெரிய அளவில் பார்லிமென்டை ஆட்டிப் படைத்தது. சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் திரிணமுல் மூத்த எம்.பி., டெரக் ஒ பிரையன் கூறியதாவது:எம்.பி.,க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நியாயமற்றது; இதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியின் இரண்டு எம்.பி.,க்களும் காந்தி சிலை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவர்களை சந்திக்க விரும்பும் பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள்தாராளமாக வரலாம். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆதரவும் தரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இங்கு முக்கியம். ஆனால், கடந்த மழைக்கால கூட்டத் தொடரைப் போல, இப்போது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை காணப்படவில்லை. காங்கிரஸ் விடுக்கும் அழைப்பை திரிணமுல் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்காமல் உள்ளன. ஆலோசனைக் கூட்டங்களுக்கு வருவதும் இல்லை; இது, காங்கிரசுக்கு சங்கடத்தை உண்டாக்கியுள்ளது.
கடிவாளம்

இதை மோப்பம் பிடித்ததால் தான் ஆளும் பா.ஜ., தரப்பு எதிர்க்கட்சிகளுக்கு கடிவாளம் போடும் விதமாக, சஸ்பெண்ட் நடவடிக்கையை கையில் எடுத்து எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.காந்தி சிலை முன் திரிணமுல் காங்., எம்.பி.,க்கள் மட்டும் தனியாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதும், காங்கிரசின் தோழமைக் கட்சிகள் வந்து ஆதரவு தெரிவிப்பதும், எதிர்க்கட்சிகளுக்குள் நிலவும் பிளவை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
வேளாண் சட்டங்கள், சீன விவகாரம், விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு எதிர்க்கட்சிகள் வருவதற்கே இன்னும் சில நாட்களாகலாம்.இதனால் குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாளிலும் ஆளும் தரப்பின் கையே ஓங்கி இருந்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE