மாற்றி யோசி: 30 ஏரிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பது எப்போது? ஆக்கிரமிப்புகள், வெள்ள சேதங்களை தவிர்க்க முடியும்| Dinamalar

'மாற்றி யோசி': 30 ஏரிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பது எப்போது? ஆக்கிரமிப்புகள், வெள்ள சேதங்களை தவிர்க்க முடியும்

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (17)
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 30 ஏரிகளையும், முழுமையாக மாநகராட்சி பராமரிப்பிற்கு மாற்றினால் மட்டுமே, ஆக்கிரமிப்புகளையும், வெள்ள பாதிப்புகளையும் நிரந்தரமாக தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக, 3,000 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீர் சேமிக்கப்பட்டு, சென்னையில் இரண்டரை மாத குடிநீர் தேவையையும் எளிதில் பூர்த்தி செய்யலாம் என,
மாற்றி யோசி, ஏரிகள், மாநகராட்சி, ஒப்படைப்பபு, ஆக்கிரமிப்புகள், வெள்ள சேதங்கள்,குடிநீர் தேவை, பூர்த்தி செய்யலாம்

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 30 ஏரிகளையும், முழுமையாக மாநகராட்சி பராமரிப்பிற்கு மாற்றினால் மட்டுமே, ஆக்கிரமிப்புகளையும், வெள்ள பாதிப்புகளையும் நிரந்தரமாக தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக, 3,000 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீர் சேமிக்கப்பட்டு, சென்னையில் இரண்டரை மாத குடிநீர் தேவையையும் எளிதில் பூர்த்தி செய்யலாம் என, நீர்வள நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


latest tamil news
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சி எல்லையில், 400 ஏரி, குளங்கள் இருந்த விபரம், 1909 - 1970 வரையிலான அரசு ஆவண வரைபடங்கள் வாயிலாக தெரியவருகிறது. இவற்றில் தற்போது, வெறும் மூன்று ஏரி, 25 குளங்கள் மட்டுமே உள்ளன. இந்த குளங்கள் அனைத்தும், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளவை.தெப்ப உற்சவம் உள்ளிட்ட ஆன்மிக வழிபாட்டிற்கான இந்த குளங்கள் மட்டுமே, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.


முற்றிலும் மாயம்
latest tamil news


Advertisement


பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட இதர துறைகளின் பராமரிப்பில் இருந்த மற்ற ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாலும், அரசு திட்டங்களாலும் முற்றிலும் மாயமாகி உள்ளன. இந்த வகையில், 368 நீர்நிலைகள் இருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. அதில், தேனாம்பேட்டை ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, வேப்பேரி, கோயம்பேடு சுழல் ஏரி, கொடுங்கையூர் ஏரி, மயிலாப்பூர் ஏரி, மாம்பலம் ஏரி, அல்லிக்குளம் ஏரி ஆகியவை அடக்கம்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், முத்தமிழ் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கோயம்பேடு பஸ் நிலையம், சந்தை, உள்ளிட்ட பல அரசு திட்டங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்த நீர்நிலைகளை அழித்து தான் கொண்டு வரப்பட்டன.


latest tamil news
சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கத்துக்கு பின், சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 30 ஏரிகள் உள்ளன. இதில், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், அம்பத்துார், கொரட்டூர் உட்பட 27 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. சேத்துப்பட்டு ஏரி மீன்வளத்துறை கட்டுப்பாட்டிலும், சாத்தாங்காடு ஏரி வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. வில்லிவாக்கம் ஏரி மட்டும், மாநகராட்சி பொறுப்பில் உள்ளது. பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, விவசாய பயன்பாட்டிற்கு உள்ள ஏரிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏரிகளில், விவசாய பயன்பாடு இல்லாததால், இந்த ஏரிகளின் மேம்பாட்டிற்கு அத்துறை எந்த செலவும் செய்வதில்லை. இதனால் பராமரிப்பில்லாமல் ஏரி பாழாகிறது.


படுமோசம்
latest tamil news
அதே வேளையில், ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்றி பாழாகி இருந்த வில்லிவாக்கம் ஏரி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்டு, தற்போது சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.சேத்துப்பட்டு ஏரி, மீன்வளத்துறை வாயிலாக, சுற்றுச்சூழல் பூங்காவாக பராமரிக்கப்படுகிறது. இவற்றை தவிர, மற்ற ஏரிகள் அனைத்தும் பராமரிப்பின்றி படுமோசமாக காணப்படுகின்றன. இதில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக இருந்தாலும், சில ஏரிகளில் மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில், மடிப்பாக்கம் ஏரியை மாநகராட்சி சீரமைத்தது. பள்ளிக்கரணை உட்பட மேலும் சில ஏரிகளிலும், சில மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி செய்தது.ஆனாலும், தொடர் பராமரிப்பில்லாமல், இந்தஏரிகளில் மீண்டும் கழிவு நீர் கலந்து பழைய நிலைக்கே மாறி வருகின்றன. இந்த ஏரிகள் அனைத்தையும், ஒட்டுமொத்தமாக மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், அவற்றை மேம்படுத்தவும், தொடர்ந்து பராமரிக்கவும் வழி கிடைக்கும்.மாநகராட்சிக்கு நிதி ஆதாரமும், பணியாளர்களும் அதிகம் என்பதால், ஏரிகளை பராமரிப்பது எளிதாக இருக்கும். கரைகளை பலப்படுத்தி, முறையாக வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை மீட்டு பராமரிக்கவும் வசதியாக அமையும்.


latest tamil news
மேலும், பல்வேறு அமைப்புகள் வழங்கும் நிதியில், ஏரிகளை மேம்படுத்த முடியும். அபார வளர்ச்சி அடைந்த சென்னையில், நீர்நிலைகளை பாதுகாத்து, வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை முறையாக வைத்திருந்தால் மட்டுமே, மழையில் இருந்து சென்னையை ஓரளவு காப்பாற்ற முடியும்.ஒவ்வொரு ஏரிகளையும் கால்வாய்கள் வாயிலாக இணைத்தால், மழை நீரை அதில் சேமிக்க முடியும். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்குவதை தவிர்க்க முடியும்.இப்போதும், பல குளங்கள் சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பாதுகாப்பு நிதியில் மேம்படுத்தப்படுகின்றன. அதுபோல், ஏரிகளையும் மேம்படுத்த முடியும்.இதற்கு, சென்னை மாநகராட்சி எல்லைக்குள், பொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகளை, மாநகராட்சியிடம் ஒப்படைப்பது தான் தீர்வாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பல ஏரிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. புறநகர் ஏரிகளை பாதுகாப்பதிலேயே பல சிக்கல்கள் உள்ளன. புறநகர் பகுதியை விட, மாநகராட்சி பகுதி வெள்ள பாதிப்பு தான் அதிக கவனம் பெறுகிறது. எங்களிடம் மாநகராட்சியை போல் ஊழியர்கள் இல்லை. ஏரிகளை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால் தான், நீரை சேமித்து வைப்பது, கழிவு நீர், ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையை முறைப்படுத்த முடியும். முதல்வர் தலையிட்டால் மாநகராட்சி பகுதி ஏரிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

- பொதுப்பணித்துறை அதிகாரிகள்


latest tamil news
விவசாயத்திற்கு பயன்படாததால் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏரிகள் மேம்பாட்டிற்கு ஒதுக்கும் நிதியை பொதுப்பணித்துறை நிறுத்திவிட்டது. இதனால், மேம்பாடும் இல்லாமல், ஆக்கிரமிப்பும் அதிகரித்து விட்டது. மாநகராட்சி வழியாக, அதிக நிதி ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி வசம் ஏரிகளை ஒப்படைப்பது தான் மேம்பாட்டிற்கு ஒரே தீர்வு. இதன் வாயிலாக ஏரிகளை பாதுகாத்து, ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கும் தீர்வு காண முடியும்.

- சீனி சேதுராமன், 65,
ஒருங்கிணைப்பாளர்,
நீர்நிலைகள் புனரமைப்பு இயக்கம், மடிப்பாக்கம்


latest tamil news
latest tamil news

நிதி ஆதாரம் எப்படி?சென்னையில், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியில், பல குளங்கள், சில ஏரிகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று, சி.எஸ்.ஆர்., நிதி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, பிரதமர் நீர்பாசன திட்டம், தமிழக அரசு சிறப்பு நிதி, மாநகராட்சி நிதி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் நிதி என, பலதரப்பட்ட நிதிகள் வழியாக ஏரிகளை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். இதற்கு, ஏரிகள் மாநகராட்சியின் சொத்தாக இருக்க வேண்டும். அப்போது தான் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய ஆக்கிரமிப்புகள் உருவாவதை தடுக்க முடியும்.

- நமது நிருபர்- -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X