அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு, தி.மு.க., அரசு மாற்ற போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து, அரசு விளக்கமளிக்க வேண்டும். கருணாநிதி செய்த தவறை ஜெயலலிதா திருத்தி, சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக்கினார். இப்போது மீண்டும் தேவையில்லாத வேலைகளை செய்யத் துடிக்கின்றனர்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லாவற்றையும் சரிசெய்து விடுவேன் எனக் கூறினார், தமிழக முதல்வர். இப்போது, தமிழ் புத்தாண்டு நாளையே மாற்றி அறிவிக்க முதல்வர் தயாராகி விட்டாரோ... இதற்காகத் தான், 'எல்லாவற்றையும் சரிசெய்து விடுவோம்' என்றாரோ என்ற, 'டவுட்' பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், மாநிலத்தில் நியாயமாக செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவையற்ற இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறாரே!
தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு, மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.,வினர், முதல்வர் ஸ்டாலினையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு உரிமை கிடையாது. இந்த வெள்ள நேரத்தில் முதல்வர் கால் படாத இடமே இல்லை என்ற அளவுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
'டவுட்' தனபாலு: இது தொடர் மழை நேரம். நீங்கள் வைக்கும், 'ஐசில்' முதல்வர் ஸ்டாலினுக்கு ஜலதோஷம் பிடித்து விடப் போகிறது... ஐஸ் வைக்க வேண்டியது தான்; அதற்காக இப்படியா ஒரேயடியாக, ஐஸ் பாறையை வைப்பது என எண்ண தோன்றும் வகையில் உங்களின் அறிக்கை உள்ளது. மேலும், இப்படி எல்லாம் ஐஸ் வைத்தால் தான், கூட்டணியில் காங்கிரசை தி.மு.க., வைத்திருக்குமோ என்ற, 'டவுட்'டும் எழுகிறது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, அவற்றை கொள்முதல் செய்து, மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை கேரள அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. இதனால், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்; மக்களுக்கும் நியாயமான விலையில் கிடைக்கும்.
'டவுட்' தனபாலு: நிழல் பட்ஜெட், விவசாய பட்ஜெட் போன்ற பட்ஜெட்டுகளை போட்டு, மாநில அரசுக்கு அவ்வப்போது, 'பாடம்' எடுக்கும் உங்களுக்கே, இந்த கேரள மாடல் முன்கூட்டியே தெரியாமல் போயிற்றோ... முன்னரே நீங்கள் வலியுறுத்தி, அமல்படுத்தி இருந்தால், விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருந்திருப்பரோ என்ற, 'டவுட்' வருகிறது!