அ.தி.மு.க., பொறுப்பாளர் தேர்ந்தெடுப்பில் புது நடைமுறை!| Dinamalar

அ.தி.மு.க., பொறுப்பாளர் தேர்ந்தெடுப்பில் புது நடைமுறை!

Updated : டிச 01, 2021 | Added : டிச 01, 2021 | கருத்துகள் (12)
சென்னை :அ.தி.மு.க., பொறுப்பாளர்களான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புது நடைமுறைக்கு, கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக அடிப்படை உறுப்பினர்களுக்கு கவுரவம் கிடைக்கிறது. உச்ச நிர்வாகிகளுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,
 அ.தி.மு.க., பொறுப்பாளர் ,   புது நடைமுறை!

சென்னை :அ.தி.மு.க., பொறுப்பாளர்களான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புது நடைமுறைக்கு,
கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக அடிப்படை உறுப்பினர்களுக்கு கவுரவம் கிடைக்கிறது. உச்ச நிர்வாகிகளுக்கும் கூடுதல் அதிகாரம் அளித்து,
செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, புதிதாக தேர்வான தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* அ.தி.மு.க., 50ம் ஆண்டு பொன் விழாவை, தமிழ் மக்கள் வாழும் இடங்களில் வண்ணமிகு விழாவாகக் கொண்டாட வேண்டும். நாடு, நகரம், சிற்றுாரில் பொன் விழா கொண்டாட்டங்களை நடத்தி, கட்சிக் கொடியேற்ற வேண்டும். கட்சிக்காக உழைத்தோரை கவுரவப்படுத்தி, கொண்டாடி மகிழ வேண்டும்

* போலி வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க.,வின் நேர்மையற்ற பிரசார முறைகளுக்கு கண்டனம்

* தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை, கால அட்டவணை வழியாக உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்காவிட்டால், மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

* தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழகம் முழுதும் நடந்து வரும் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள், போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை, வணிகர்கள் மீதான தாக்குதல்கள்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை அறவே ஒழிக்க, தி.மு.க., அரசு முன்வர வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம்

* வடகிழக்கு பருவ மழையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும், வீடுகள் மற்றும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளை, முன்னேற்பாடுகள் வழியே தடுக்க தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம்

* மழை, வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர் துடைக்க, தி.மு.க., அரசு விரைந்து செயல்பட வேண்டும். கட்சியினர், மழை வெள்ள நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்

* நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்ட தி.மு.க.,வுக்கு கண்டனம். இனியும் இது போன்ற செயல்களை கையாண்டால், அ.தி.மு.க., மதம் கொண்ட யானையாக எதிர்த்து நிற்கும்

* விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வினர் கடுமையாக உழைக்கவும், தி.மு.க., முறைகேடுகளை தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

* எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க.,வை கட்டிக் காத்து, எதிர்கால தேர்தலில் மாபெரும் வெற்றி பெற உழைப்போம் என்பது உட்பட, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சிறப்பு தீர்மானம்ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்த, 2017 செப்., 12ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். கட்சி சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும், பொதுக்குழு அதிகாரம் படைத்தது என, கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
தற்போது, கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை ஆய்வு செய்து, சட்ட விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை ஓட்டின் வழியே, இணைந்தே தேர்வு செய்வர். இந்த விதி, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட விதிகளை தளர்த்த, விதி விலக்கு அளிக்க முழு அதிகாரம் உண்டு. ஆனால், அவர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை தளர்த்தவோ, விலக்கு அளிக்கவோ அதிகாரம் இல்லை.
இந்த சிறப்பு தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.கட்சியை வழிநடத்தும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கியதன் வாயிலாக, அடிப்படை உறுப்பினர்களுக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உச்ச நிர்வாகிகளுக்கும், கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


'தினமலர்' முன்னாள் ஆசிரியர்இரா.கிருஷ்ணமூர்த்திக்கு இரங்கல்அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சி அவை தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி, மாமியார் வள்ளியம்மாள், தம்பி பாலமுருகன்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாய் தவுசாயம்மாள், எம்.ஜி.ஆர்., அண்ணன் மகள் லீலாவதி, 'தினமலர்' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி உட்பட, 354 பேருக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


எதிர்த்து புகழேந்தி மனு'அ.தி.மு.க., விதிகளை திருத்தியது சட்ட விரோதம். எனவே, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை கட்சி பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


அன்வர் ராஜா நீக்கம் ஏன்?அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:
அன்வர் ராஜா கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி கூட்டங்களில், அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம், வெளியில் தெரிவிப்பது நல்லதல்ல. அதை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகத்தான் கருத முடியும். இதை அனுமதித்தால், கட்சியில் புற்றீசல் போல எல்லாரும் பேச ஆரம்பிப்பர். கட்டுப்பாடு இல்லாமல் போகும். எனவே, அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுத்தது சரியானது.
கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய, கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக உள்ள அடிப்படை உறுப்பினர்களே ஓட்டளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


ஒற்றை ஓட்டு எப்படி?

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டின் வழியே, இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, அ.தி.மு.க., சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, கட்சியின் தேர்தல் பிரிவு துணை செயலர் இன்பதுரை கூறியதாவது: புதிய திருத்தத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் தனித்தனியே ஓட்டு போட வேண்டியதில்லை. இவ்விரு பதவியையும் சேர்த்தே, ஒரு ஓட்டின் கீழ், அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். போட்டி இருந்தால், ஒவ்வொரு கிளையிலும் ஓட்டுப்பெட்டி வைத்து தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X