அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி
: நாங்கள் சொல்வதை கேட்டு கட்சியினர் அனைவரும் செயல்பட வேண்டும். பிரச்னைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்; உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: சமீபகாலமாக, அ.தி.மு.க., மூத்த தலைவர்களான, பன்னீர்செல்வமும், நீங்களும் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அடிக்கடி பேசி வருவதைப் பார்த்தால், கட்சியில் ஒற்றுமையின்மை அதிகரித்து வருகிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. எப்படியோ, இன்னும், ஐந்தாண்டுகளுக்கு கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது சிரம பிரயத்தனம் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முனிசிபல் நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: ஆசிரியர்கள், போலீசாருக்கு பிற அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி, கவுரவத்தை அளித்தது, தி.மு.க., அரசு தான்.
'டவுட்' தனபாலு: ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு சம்பளத்தை உயர்த்தி, அவர்களுக்கு கவுரவத்தை அளித்தது, தி.மு.க., அரசு என்கிறீர்கள். அதனால் தான், தி.மு.க., அரசு தங்களுக்கு சாதகமானது என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது போலும். அதனால் தான், சமீப காலமாக அவ்விரு துறையினரில் சிலர், பாலியல் பலாத்காரம் உட்பட பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி, தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனரோ என்ற, 'டவுட்' வருகிறது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: 'ஏப்., 14 சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு' என்று உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தி.மு.க., அரசு, வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல, தமிழர்களை ஏமாற்ற நினைத்து, தமிழ் புத்தாண்டு நாளை குழப்பி கொண்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதி திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தின் பிற கட்சி தலைவர்கள், தி.மு.க., அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, 'தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு' என, 'ஜால்ரா' தட்டிக் கொண்டிருக்கின்றனர். எல்லா விதத்திலும், தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக திகழும், பா.ஜ., இந்த விவகாரத்தையும் விடப் போவதில்லை என்பது உங்கள் திடமான பேச்சில், 'டவுட்' இன்றி தெரிகிறது. மேலும், பா.ஜ., ஏப்., 14ஐ தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதால் தான், தி.மு.க., அரசு அதை மாற்ற முனைகிறதோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!