PSG technlgy college Alumni meet | வைர விழாவில் சங்கமித்த வெள்ளி விழா மாணவர்கள்; கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரியில் கோலாகலம்| Dinamalar

வைர விழாவில் சங்கமித்த வெள்ளி விழா மாணவர்கள்; கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரியில் கோலாகலம்

Updated : ஆக 07, 2011 | Added : ஆக 07, 2011
Advertisement

கோவை: "எங்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிய கல்லூரியின் வைர விழாவும், நாங்கள் பட்டம் பெற்றதன் வெள்ளி விழாவும், ஒரே ஆண்டில் அமைந்தது, தாங்கள் செய்த பெரும் பாக்கியம்,'' என, கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் தொழில்நுட்பக்கல்லூரியில், 1986ம் ஆண்டில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள், பூரிப்புடன் தெரிவித்தனர்.
கல்லூரியில் படித்த ஒவ்வொருவருக்கும், "மீண்டும் அந்த நாள் வாராதா, கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காதா' என்றொரு ஏக்கம் மனதுக்குள் நிச்சயம் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியொரு இனிமையான சந்தர்ப்பம், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரியில், 1986ம் ஆண்டில் பொறியியல் பட்டம் பெற்ற 130 பேருக்கு வாய்த்தது. கல்லூரிப்பருவத்தை, கண்களில் பட்டாம்பூச்சி பறக்க, கால்களில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றித்திரிந்த நாட்களை, திரும்பிப்பார்த்து மகிழும் வாய்ப்பு பெற்ற அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
இந்த சந்திப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மூவர். கோவையை சேர்ந்த அசோகன், திருச்சியை சேர்ந்த கவுதமன், பெங்களூரை சேர்ந்த் மோகன் அலாபத் ஆகியோர் இணைந்து, ஐந்தாண்டுக்கு முன், "யாஹூ'வில் ஒரு குழுவாக செயல்பட ஆரம்பித்தனர். தங்களது பேட்ஜில் படித்த மாணவ, மாணவியரை, குழுவில் பதிவு செய்ய வைத்தனர். பிறந்த நாள், திருமண நாள் என மகிழ்ச்சியான தருணங்களையும், சோகங்களையும் பகிர்ந்து கொண்டு, கல்லூரிக்காலத்து நட்பை புதுப்பித்துக்கொண்டனர்.
அவ்வப்போது இவர்களில் சிலர் சந்தித்தனர். கோவை, பெங்களூரு, சென்னை என சந்திக்கும் இடங்கள் மாறினாலும், சந்திப்பின் நோக்கம் மட்டும் ஒன்றாகவே இருந்தது. "என்றாவது ஒரு நாள், தங்களது "பேட்ச்'சில் பயின்ற அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்க வைப்பது' என்பதே அவர்களது நோக்கம். அதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர், நந்தகுமார். தொழிலதிபரான இவர், இந்திய தொழில் வர்த்தக சபையின் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.
முடிவாக, பொறியியல் பட்டம் பெற்றதன் வெள்ளி விழாவை இந்தாண்டு ஆக.,4, 5, 6, 7ம் தேதிகளில் கோவையில் குடும்பத்துடன் சந்தித்து கொண்டாடுவது என முடிவானதும், தொடர்பில் இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 4ம் தேதி கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரியில் வெள்ளி விழா சந்திப்பு துவங்கியது. பதிவு செய்திருந்த 140 பேரில், 130 பேர் குடும்பத்துடன் விழாவுக்கு வந்திருந்தனர். இணையதளம் வழியாகவே சந்தித்துக்கொண்டிருந்த பலருக்கு, 25 ஆண்டு கழித்து நேரில் சந்தித்தபோது, பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. வகுப்புத்தோழர்களின் விழிகளிலும், வார்த்தைகளிலும், உற்சாகமும், மகிழ்ச்சியும், வெள்ளமாய் கரைபுரண்டு ஓடின.
முதல் நாள் நிகழ்ச்சியில், கல்லூரி விடுதியில் தங்கிய முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினருக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. கல்லூரி காலத்தில் இருந்ததை போலவே, மைதானத்தில், "மூவி நைட்' கொண்டாடி மகிழ்ந்தனர். ஐந்தாம் தேதி காலை, விழா நிகழ்ச்சிகள் துவங்கின. கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்துப்பேசினார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
"கல்லூரியின் 60ம் ஆண்டு வைர விழாவும் இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முன்னாள் மாணவர்களிடம் இருந்து பத்து கோடி ரூபாய் வசூலித்து, அதை ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்குவது என்று முடிவாகியுள்ளது. கடன் பெறும் மாணவர்கள், வேலைக்கு சென்றதும், அதை திருப்பி செலுத்த வேண்டும் என்பது திட்டம். அதற்கென வரும் நவம்பர் மாதம் கொடிசியா அரங்கில், "படைப்புகளின் படைப்பு' என்ற கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக' கல்லூரி நிர்வாகம் சார்பில் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பத்து கோடி ரூபாய் திரட்டும் கல்லூரி நிர்வாகத்தின் முயற்சிக்கு உதவும் வகையில், விழா அரங்கிலேயே பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, 86ம் ஆண்டு "பேட்ச்' மாணவர்கள் கொடுத்தனர். அன்று நடந்த விழாவில், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் ரங்கநாதன், பி.எஸ்.ஜி., நிறுவன உயர் கல்வி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். 1986ம் ஆண்டு "பேட்ச்' பற்றி துபாயில் இருந்து வந்திருந்த வெங்கட்ராகவன் பேசினார்.


முன்னாள் மாணவர்கள் சார்பில் சந்துரு, ராஜேஸ்வரி ஆகியோரும் பேசினர். இதையடுத்து இரண்டு மணி நேரம் அனைவரும் கல்லூரியை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். தாங்கள் படித்த வகுப்பறைகளை, மாலைப்பொழுதை கழித்த மைதானத்தை, குடும்பத்தினருக்கு காட்டி மகிழ்ந்த பலருக்கும், முகத்தில் அப்படியொரு ஆனந்தம்.
இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் சூரிய பிரகாஷ், கணேஷ், ஸ்வர்ணராதா, வெங்கட்ராகவன் ஆகிய நால்வர், இப்போதைய இறுதியாண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். அந்தக்கால மாணவர்கள், படிப்பு, பொழுது போக்கு, இப்போதைய மாணவர்களின் எண்ண ஓட்டம் என கலந்துரையாடலில் கலந்து உருகினர். இந்நிகழ்ச்சியை, பேராசிரியர் மோகன்ராம் ஏற்பாடு செய்திருந்தார். மகாராஜா தீம் பார்க்கில் "டெக் மியூசிக்' இசை நிகழ்ச்சியை ரசித்ததுடன், அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
மறுநாள் 6ம் தேதி, அனைவரும் குடும்பத்துடன் பிளாக் தண்டருக்கு சுற்றுலா சென்றனர். குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடி மகிழ்ந்தனர். இரவு இசை, நடனம், பேஷன் ஷோ என அடுத்தடுத்து கலக்கல் நிகழ்ச்சிகள். துபாயில் இருந்து வந்திருந்த ஆறு பேர், "கேமல் வாக்' எனப்படும் "ஒட்டக நடை' நிகழ்ச்சியை நடத்தி, அனைவரையும் அசத்தினர்.
நேற்று லீ மெரிடியன் ஓட்டலில் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. சொற்பொழிவு நிகழ்த்திய தன்னம்பிக்கை பேச்சாளர் "இயகாகா' சுப்பிரமணியம், மாணவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றி, அனைவரும் ரசிக்கும்படியாக பேசினார். தொடர்ந்து நடந்த விழாவில், ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் டாக்டர் ரங்கநாதன், பேராசிரியர்கள் ஸ்ரீவத்சன், ராமச்சந்திரன், நடராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். நான்கு நாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க கவுரவ செயலாளர் டாக்டர் அரசு செய்திருந்தார். சுப்பிரமணியம் நன்றி கூறினார். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த கணேஷ், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஈஸ்வர், சுசீந்திரன், பெங்களூரில் இருந்து வந்திருந்த கமலா, ஹாங்காங்கில் இருந்து வந்திருந்த தினமலர் இணைய தள செய்தியாளர் சித்ரா சிவக்குமார், குழந்தைகள் சார்பில் ஆசனா உள்ளிட்டோர், விழா நிகழ்ச்சிகள் பற்றி பேசினர்.
நான்கு நாள் விழா நிகழ்ச்சிகளில் பேசிய முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தது, "எங்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிய கல்லூரியின் வைர விழாவும், எங்களது "பேட்ச்' வெள்ளி விழாவும், ஒரே ஆண்டில் அமைந்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்' என்பது தான்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X