துாத்துக்குடி : துாத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
துாத்துக்குடியில் நவம்பர் 25ல் பெருமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் துாத்துக்குடி முழுதும் மழைநீரில் மிதக்கிறது. பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துாத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டவர், காரில் இருந்து இறங்கி தண்ணீரில் நடந்து சென்று, சாலையின் இருபுறங்களிலும் நின்ற மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின், மாநகராட்சி அலுவலகம் சென்ற அவரிடம் விவசாயிகள், 'பயிர் சேதம் குறித்து முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்' என மனு அளித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன், மழை சேதம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அடுத்து, எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 3,000 பேருக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். வெள்ள நீர் கடலில் கலப்பதற்காக எட்டயபுரம் சாலையில் நடக்கும் கால்வாய் பணிகளை பார்வையிட்டார்.
கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, சாத்துார் ராமச்சந்திரன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ உடனிருந்தனர்.
மதியம் 2:30 மணிக்கு ஆய்வை துவங்கியவர் மாலை 4:30 மணிக்கு நிறைவு செய்தார். பின், கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். வழயில், எட்டயபுரத்தில், தனியார் துவக்கப் பள்ளி குழந்தைகள், பாரதியார் வேடமணிந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.
இதைப் பார்த்த முதல்வர், காரை நிறுத்தி குழந்தைகளுடன் சில நிமிடங்கள் உரையாடினார். குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE