புதுடில்லி : ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களுக்கு 'ஜாவத்' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வுசெய்தார்.
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.'வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் நாளை கரையை கடக்கும். 'இதனால் வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகனமழை பெய்யும்' என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு 'ஜாவத்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஆய்வு கூட்டம்
இந்நிலையில் நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று உயர்நிலை ஆய்வு கூட்டம் நடந்தது. பிரதமரின் முதன்மை செயலர், கேபினட் செயலர், உள்துறை செயலர், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்படுவதையும், மின்சாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடை இன்றி கிடைப்பதையும் உறுதி செய்யும்படியும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.அத்தியாவசிய மருந்துகள் விற்பனை மற்றும் வினியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ளவும், கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரம் செயல்படுவதை உறுதி செய்யும்படியும் பிரதமர் உத்தரவிட்டார்.சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலர்களை தொடர்பு கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கேபினட் செயலர் ராஜிவ் கவுபா ஆய்வு செய்தார்.
மூன்று மாநிலங்களின் நிலைமை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியின் முதல் தவணையை, உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அளித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையின் 29 குழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. மேலும், 33 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டை மற்றும் மீட்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளன.
விமானப்படை மற்றும் ராணுவத்தின் பொறியாளர் படைப் பிரிவு ஆகியவை, கப்பல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
மீட்பு நடவடிக்கை குழு
மின் துறை அமைச்சகம் சார்பில் அவசரகால மீட்பு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகம் அனைத்து தொலைதொடர்பு கோபுரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மிக தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவிகள் செய்ய தயாராக உள்ளனர். மேலும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து கடலோர மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE