சென்னைக்கு பதிலாக கொச்சி ஏன்? லோக்சபாவில் தி.மு.க., எதிர்ப்பு| Dinamalar

சென்னைக்கு பதிலாக கொச்சி ஏன்? லோக்சபாவில் தி.மு.க., எதிர்ப்பு

Updated : டிச 03, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (6) | |
'ஹஜ் பயணத்திற்கான தென் மாநிலங்களின் விமான முனையமாக இருந்து வந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தை திடீரென கைவிட்டு, அதற்கு பதிலாக கொச்சி விமான நிலையத்தை மத்திய அரசு அறிவித்தது ஏன்' என, லோக்சபாவில் தி.மு.க., கேள்வி எழுப்பியது. லோக்சபாவில் நேற்று தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது;மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள், சென்னை
சென்னை,கொச்சி , ஹஜ், லோக்சபா, தி.மு.க., எதிர்ப்பு

'ஹஜ் பயணத்திற்கான தென் மாநிலங்களின் விமான முனையமாக இருந்து வந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தை திடீரென கைவிட்டு, அதற்கு பதிலாக கொச்சி விமான நிலையத்தை மத்திய அரசு அறிவித்தது ஏன்' என, லோக்சபாவில் தி.மு.க., கேள்வி எழுப்பியது.
லோக்சபாவில் நேற்று தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது;

மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே விமானம் பிடிக்கும் நிலை இருந்து வந்தது.ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென சென்னை சர்வதேச விமான நிலையம் விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக கொச்சி விமான நிலையத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் மாற்றப்படக் கூடாது. தமிழக பயணியர் எதற்காக கொச்சி வரை செல்ல வேண்டும். 700 கி.மீ., துாரத்திற்கு தள்ளியிருக்கும் கொச்சிக்கு சென்று தான் விமானம் பிடிக்க வேண்டுமா?இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:இந்த பயணம் தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை மட்டுமல்லாது உள்துறை, சிவில் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் சேர்ந்து தான் முடிவுகளை எடுக்கின்றனர். இதில், சவுதி அரேபிய அதிகாரிகளும் அடக்கம். கொரோனா தடை உத்தரவு காரணமாக, இந்த பயணத்திற்கு என அந்த நாட்டுக்கு சில புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன; அவற்றை கடைப்பிடிப்பவர்களுக்கே அனுமதி தரப்படுகிறது.

இதற்கு முன், 21 இடங்களில் இருந்து ஹஜ் பயணத்துக்கு கிளம்பும் நிலை இருந்தது. அதற்கு பதிலாக இப்போது, 10 இடங்களில் இருந்து புனித பயணத்திற்கு கிளம்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா நடைமுறைகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பதிலை ஏற்க முடியாதென கூறி தி.மு.க., -எம்.பி.,க்கள் வாதிட்டனர். இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா, ''பாலுவும், நக்வியும் சகோதரர்கள். எனவே, அமைச்சரின் அறைக்குச் சென்று, விமானப் போக்குவரத்து அமைச்சரையும் வரவழைத்து பேசி தீர்வு காணுங்கள். சபையில் பேச வேண்டாம்,'' என்றார்.


முல்லை பெரியாறு: சபையில் அமளிமுல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து, கேரள எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக்சபாவில் இது குறித்து கேரள எம்.பி., பிரமேச்சந்திரன் பேசியதாவது:முல்லை பெரியாறு அணை பெரும் அபாயத்தில் உள்ளது. இதனால் கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அணையின் நீர்மட்டம் 142 அடிகளுக்கும் மேல் போய்விட்டது. அணையின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதால், அது இடிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு, தமிழக எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பெரும் அமளி ஏற்பட்டது. - நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X