சென்னை:அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான மனு தாக்கல் இன்று துவங்கி, நாளை நிறைவடைய உள்ளது.
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
இன்று மனு தாக்கல்
கட்சி அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றும், நாளையும், காலை 10:00 முதல், மாலை 3:00 மணி வரை நடக்கும்.வேட்பு மனுக்கள் பரிசீலனை, நாளை மறுதினம் காலை 11:25 மணிக்கு நடக்கும். வேட்பு மனுவை 6ம் தேதி மாலை 4:00 மணிக்குள் திரும்ப பெற வேண்டும்.
போட்டி இருந்தால், 7ம் தேதி காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மறுநாள், 8ம் தேதி காலை 10:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கும். தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கிளை தேர்தல்
கட்சியின் கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு, நகர வார்டு, மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல், வரும் 13 முதல் 23ம் தேதி வரை நடக்கும்.
* முதற்கட்டமாக, ௧௩, ௧௪ம் தேதிகளில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், கரூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட, 35 கட்சி ரீதியான மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும்
* இரண்டாம் கட்டமாக, 22, 23ம் தேதிகளில் துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, திருப்பூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், கடலுார், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களுக்கு உட்பட்ட, 45 கட்சி ரீதியான மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படும். மாவட்ட செயலர்கள், தங்கள் மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் போன்றவற்றை, தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன், கட்சி தலைமை அலுவலகத்தில் பெற்று, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட செயலர்கள் செய்ய வேண்டும். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தலை நடத்தி முடித்து வெற்றிப் படிவம், ரசீது புத்தகம், விண்ணப்ப கட்டணம் முதலானவற்றை, தேர்தல் முடிவுற்ற இரண்டு நாட்களுக்குள் தேர்தல் ஆணையரிடம் இருந்து பெற்று, கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
கிளை செயலர் பதவிக்கு 250 ரூபாய்; பேரூராட்சி வார்டு செயலர் பதவிக்கு 300; பேரூராட்சி வார்டு மற்ற பதவிகளுக்கு 200; நகராட்சி வார்டு செயலர் பதவிக்கு 500; மற்ற பதவிகளுக்கு 300; மாநகராட்சி வட்ட செயலர் பதவிக்கு 2,000; மற்ற பதவிகளுக்கு 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கிளைகளில் செயலர் பதவி தவிர, மற்ற பதவிகளுக்கு கட்டணம் இல்லை.தேர்தலில் போட்டியிட விரும்புவோர், கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE