பொது செய்தி

தமிழ்நாடு

நாறிக்கிடந்த நீர்வழித்தடங்கள் சுத்தமானது: சென்னையில் அதீத வெள்ளத்தால் இப்படியும் ஒரு நன்மை

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
கொட்டித் தீர்த்த கன மழை, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் சென்னை மக்கள் பாடாய்பட்டாலும் குப்பை, கழிவு நீரால் நாறிக்கிடந்த அடையாறு, கூவம் ஆறுகள், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை, தெளிந்த நீரோடையாக மாறி உள்ளன. பல கோடி ரூபாய் செலவழித்தாலும் சுத்தப்படுத்த முடியாத இவற்றை, இயற்கை தானாக சுத்தப்படுத்தி கொடுத்துள்ளது. இவற்றை கழிவு நீர் கலக்காமல் தொடர்ந்து பராமரித்தால், சுத்தமான

கொட்டித் தீர்த்த கன மழை, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் சென்னை மக்கள் பாடாய்பட்டாலும் குப்பை, கழிவு நீரால் நாறிக்கிடந்த அடையாறு, கூவம் ஆறுகள், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை, தெளிந்த நீரோடையாக மாறி உள்ளன. பல கோடி ரூபாய் செலவழித்தாலும் சுத்தப்படுத்த முடியாத இவற்றை, இயற்கை தானாக சுத்தப்படுத்தி கொடுத்துள்ளது. இவற்றை கழிவு நீர் கலக்காமல் தொடர்ந்து பராமரித்தால், சுத்தமான நீர்வழித்தடங்கள் சென்னைக்கு சாத்தியம் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள் மற்றும் வழித்தடங்களில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை நகரின் நீர்வழித்தடங்களில், ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்தது. அந்த அளவிற்கு சுத்தமான நீரோட்டம் காணப்பட்டது. நகரமயம் தீவிரமடைந்த பின், மழைக்காலத்தில் வெள்ளத்தை வடிய வைக்கவும், மற்ற நேரங்களில் கழிவு நீரை கடலுக்கு கடத்திச் செல்லவும், இந்த நீர்வழித்தடங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, சென்னையின் பொக்கிஷமான கூவம், அடையாறு ஆறுகள், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை, 'முழு நேர சாக்கடை' ஆகவே மாறிவிட்டன. இந்த நீர்வழித்தடங்களை ஒட்டி அதிகரித்த குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் மேலாண்மையில் அரசிடம் போதுமான கட்டமைப்புகளும், கடுமையான சட்ட திட்டங்களும் இல்லாதது தான், இதற்கு காரணம்.


கூவம் ஆறு

திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் அணைக்கட்டில், கல்லார் ஆற்றின் கிளையாக உருவாகும் கூவம் ஆறு, 72 கி.மீ., பயணித்து, மெரினா அருகே கடலில் சங்கமிக்கிறது. இதில், 32 கி.மீ., நகர பகுதியிலும், 40 கி.மீ., கிராம பகுதிகளிலும் நதி பயணிக்கிறது. சென்னை மாநகராட்சி எல்லையில் மட்டும், 23.92 கி.மீ., துாரம் கூவம் செல்கிறது.கூவம் தான் ஒரு காலத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்கான பிரதான நீர் ஆதாரம் என்று சொன்னால், நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அது தான் உண்மை.


latest tamil news'சென்னையின் தேம்ஸ்' என, ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்டது இந்த நதி. பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, இங்கிலாந்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக, 'மார்டின் குக்' என்பவர், நெசவாளர்களை சிந்தாதிரிப்பேட்டையில், கூவத்துக்கு அருகில் குடியமர்த்தினார். கூவம் முதல் முறையாக சாயமாகிப் போக அதுவே காரணமானது. அதன் பின், கூவத்தில் ஆக்கிரமிப்பையும், கழிவு நீர் கலப்பையும் எந்த அரசாங்கத்தாலும் இதுவரை தடுக்க முடியவில்லை.

தற்போதும், உருவான இடத்தில் இருந்து, நகர பகுதி துவங்கும் இடமான ஆவடி, திருவேற்காடு வரை கூவம் சுத்தமாகவே உள்ளது. அதன் பின் தான் நாறிக்கிடக்கிறது.கடைசியாக, 2014ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, கூவம் கரையை ஆக்கிரமித்து, 65 குடிசை பகுதிகளும், 14 ஆயிரத்து 972 குடும்பங்களும் வசிப்பது தெரியவந்தது.அதன் பின், படிப்படியாக அதிகரித்த ஆக்கிரமிப்புகள், குடிசை பகுதிகள், தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுகள் கொட்டப்பட்டு, கூவம் சாக்கடையாக மாறிப்போனது.

கூவத்தை சுத்தப்படுத்த முதன் முதலில், 1967ம் ஆண்டு அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, 2.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்த திட்டத்தின் வாயிலாக, கூவத்தில் படகுகள் விடப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பெயரில், ஏழு இடங்களில் மணிமண்டபங்கள் கட்டப்பட்டன. அதன் பிறகு பல்வேறு திட்டங்கள், பல நுாறு கோடி ரூபாய்களை செலவழித்தும், கூவம் சாக்கடையாகவே உள்ளது. கடந்த, 2004 சுனாமியின் போது, கூவம் ஒரே நாளில் சுத்தமானது. பின், 2015 பெரு வெள்ளத்தின் போது, கூவத்தின் அழகிய முகத்தை சில நாட்கள் சென்னைவாசிகள் பார்த்தனர். தற்போதைய வெள்ளத்தில் மீண்டும் கூவத்தின் அழகிய முகம் வெளிப்பட்டது.


அடையாறு ஆறு


செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் கிராமத்தில், ஏரியின் மறுகால் பாயும் கால்வாய் தான், அடையாறு ஆறு துவங்கும் இடம். தன் பயணத்தை, 10 அடி அகலத்தில் துவங்கும் அடையாறு ஆறு, 42 கி.மீ., பயணித்து, சென்னை பட்டினப்பாக்கத்தில், 200 மீட்டர் அகலத்தில் கடலில் சங்கமிக்கிறது.latest tamil newsகூவத்தை போல பெரிய பாரம்பரியம் இல்லாவிடிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 90க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீரை, கடலுக்கு கடத்தும் பணியை, அடையாறு ஆறு செய்கிறது. அடையாறு ஆற்றிலும், சென்னையின் பிரதான பகுதிகளான கோட்டூர்புரம், போட் கிளப் ஆகிய பகுதிகளில், படகு சவாரி நடந்துள்ளது. அடையாறு ஆறு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, திருநீர்மலை வரை மிகவும் சுத்தமாக இருந்தது. அதன் பிறகே, கழிவு நீர், ஆக்கிரமிப்பு என, மோசமாக காணப்பட்டது. ஆனால், புறநகர் பகுதிகளின் வளர்ச்சி காரணமாக, தற்போது துவங்கும் இடத்தில் இருந்தே, அடையாறு ஆற்றில் கழிவு நீர் கலந்து வருகிறது.


பகிங்ஹாம் கால்வாய்


ஆங்கிலேயர் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட பகிங்ஹாம் கால்வாயில், வணிக ரீதியாக படகு போக்குவரத்து இருந்தது. ஆந்திர மாநிலத்தில் துவங்கி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த, கூனிமேடு பகுதி வரை இக்கால்வாய், 420 கி.மீ., நீண்டு உள்ளது.


latest tamil news
அக்காலத்தில், உப்பு, விறகு ஆகிய பொருட்களை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு படகில் கொண்டு செல்ல, இக்கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கடலோர இடங்களில், இக்கால்வாய்க்கு நீர்வரத்து முகத்துவாரங்கள் உள்ளன.அமாவாசை, பவுர்ணமி மற்றும் கடல்சீற்ற காலங்களில், கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழை நீரும் கால்வாயில் தேங்கும். நுாறாண்டுகளுக்கும் மேல் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்து வந்தது.

தற்போது இந்த கால்வாயும், பராமரிப்பின்றி சீரழிந்து, கழிவு நீர் ஆறாக காணப்படுகிறது.'மீண்டும் கூவம் மணக்கும்; பகிங்ஹாம் கால்வாயில் படகு சவாரி வரும்' என மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து, கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கினாலும், அனைத்தும் இதுவரை கானல் நீராகதான் உள்ளன. ஆனால், தற்போதைய தொடர் கன மழை காரணமாக, இயற்கையே இந்த நீர்வழித்தடங்களை சுத்தப்படுத்திக் கொடுத்து உள்ளது. இதை அப்படியே தொடர்ந்து பராமரிக்க, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


கொசஸ்தலை தப்பியது எப்படி?


latest tamil news


கூவம், அடையாறு ஆறுகளை போல, சென்னையில் மற்றொரு வடிநில பகுதியாக கொசஸ்தலை ஆறு உள்ளது. வடசென்னையில் பாய்ந்தாலும், சென்னை மாநகர எல்லையில் 5 கி.மீ., துாரம் மட்டுமே பயணிப்பதால், கொசஸ்தலை ஆறு கழிவு நீரின் பிடியில் இருந்து தப்பி உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து பாயும் இந்த ஆறு, திருவள்ளூர் மாவட்ட கிராம பகுதிகள் வழியாகவே பயணிப்பதால், விவசாயத்திற்கும், மேய்ச்சலுக்கும், கால்நடைகளுக்கும் பெரிதும் உதவி வருகிறது.இந்த ஆற்றில் ஆண்டு முழுதும் சுத்தமான நீரோட்டத்தை பார்க்கலாம். சென்னை எல்லையில், சி.எம்.டி.ஏ., அனுமதியில், சமீபத்தில் உருவான மணலி புதுநகர், நாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது தான் சில இடங்களில் ஆற்றில் கழிவு நீர் கலக்க விடப்படுகிறது. இதை முளையிலேயே தடுத்து, கொசஸ்தலை ஆற்றை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு.


நீர்வழித்தடங்களில்ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?


கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் தவிர்த்து, ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர், பாடிகுப்பம், நந்தனம் போன்ற கால்வாய்கள், வீராங்கால் ஓடை என, சென்னையில் 30 நீர்வழித்தடங்கள் உள்ளன.இவற்றை மாநகராட்சி, பொதுப்பணித்துறை நிர்வகிக்கின்றன. இந்த நீர்வழித்தடங்களில் குப்பை, கழிவு நீர் கலப்பு அதிகரித்ததால் நீர் மாசடைந்தது. இதனால், நீர்வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

தற்போது பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நீர் வழித்தடங்கள் இயற்கையாக சுத்தமாகி உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்த கால்வாய்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும். எதிர்காலத்திலும் ஆக்கிரமிப்புகளை தடுப்பதில் கண்டிப்பு வேண்டும். இதை பின்பற்றினால் சுத்தமான நீர்வழித்தடங்கள் எப்போதும் இருக்கும்; கொசு தொல்லையும் குறையும்.
-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-202102:03:23 IST Report Abuse
Bhaskaran அதெப்புடி .சிந்தாதிரிப்பேட்டை மீன் பதப்படும் தொழிற்சாலைகளின் கழிவு அப்படியே மத்திய சிறைச்சாலை பின்புறம் உள்ள ஆற்றில் கொட்டப்படுகிறது மாநகராட்சி ( காசுவாங்கிக்கொண்டு ) கண்டுகொள்வதில்லை
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-டிச-202123:15:11 IST Report Abuse
DARMHAR ஆறு மாதங்கள் போகட்டும் மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்ற சாக்கடை நிலை தான் கூவம் ஆற்றிற்கு
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-டிச-202121:12:51 IST Report Abuse
NicoleThomson ஆனால் அதே மனித குலம், டோன்ட் ஒர்ரி ஒருவாரத்தில் நாறடித்து விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X